தான் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் கடந்த 20 ஆண்டுகளாக தனது பெரியப்பா பழ.கருப்பையா குடும்ப நிகழ்வுகளில் தங்களை புறக்கணித்து வருவதாக இயக்குநர் கரு.பழனியப்பன் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைஞர் பிறந்தநாள் விழா மேடையில் பேசிய இயக்குநர் பழ.கருப்பையா, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் தனது குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கு காரணம் தனது பெரியப்பா பழ.கருப்பையா தான் என்றும் தெரிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கரு. பழனியப்பன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது :- கலைஞர் பிறந்தநாள் விழாவில் கடந்த 4 ஆண்டுகளாக பேசி வருகிறேன். தற்போதும் கலைஞர் குறித்து பேசுவதற்கு புதிய செய்திகள் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு அவரது நீண்டகால அனுபவங்கள் தான் காரணம். அந்த நிகழ்ச்சியில் பேசியபோத கலைஞர், நீண்டகால சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், நீண்ட காலமாக திமுகவின் தலைவராக இருந்தவர், 5 முறை முதலமைச்சர் ஆக இருந்தவர் என்பதை எல்லாம் மீறி ஒரு மனிதரை கொண்டாடி கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் என்ன என்று யோசித்து பார்த்தால் அவர் வெற்றிகரமான குடும்பத் தலைவர். அவ்வளவு பெரிய குடும்பத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர். தனிப்பட்ட வாழ்க்கை என்பது பொதுவாழ்வோடு சேர்ந்து வெற்றிகரமாக இருக்கும்போது தான் மனிதன் முழுமை அடைகிறான். கலைஞர் ஒரு மிகப்பெரிய வெற்றிகரமான குடும்பத் தலைவராக இருந்ததை யோசித்துக்கொண்டே சொல்ல வருகிறபோது, எனது தனிப்பட்ட வாழ்வை குறித்து சொல்ல வேண்டியதாகிவிட்டது.
கடந்த 25 ஆண்டுகளில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எங்கேயும் பேசியது கிடையாது. காரைக்குடியில் நடுத்தர குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தபோது பல கடினங்களை சந்தித்தேன். ஆனால் அவற்றை நான் வெளியில் சொன்னது கிடையாது. என்னுடைய தந்தை என்னிடம் தெளிவாக சொன்னார். நீ திரைத்துறைக்கு போக விரும்புற… நீ உன்னை காப்பாற்றிக்கொள்ள பழகிக்கொள்.. சரிவராவிட்டால் கிளம்பி வந்துவிடு என்று சொன்னார். அன்று பழ.கருப்பையா, தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர். நான் ஒரு இடத்தில் கூட சொல்லிக்கொண்டது கிடையாது. பார்த்திபனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம் கழித்து நான் பழ. கருப்பையாவின் தம்பி மகன் என்று தெரிந்து. அவர் என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று கேட்டார். இதை சொல்வதில் எனக்கு பெருமை ஒன்றும் இல்லை என்று பதில் அளித்தேன். சாதியின் பெயரால் காதல் திருமணம் செய்ததால் ஒடுக்கப்படுகிறவர்களுக்கு என்னுடைய கதையை சொன்னால் நம்பிக்கை ஏற்படும் என்பதால் தான் சொன்னேன். நான் செய்த ஒரே விஷயம் என் வாழ்க்கை துணையை நானே தேர்ந்தெடுத்தது. அதையே இவர்களால் தாங்க முடியவில்லை. காரணம் பிள்ளை எதையும் முடிவு செய்துவிட கூடாது என்பதற்காக. ஆனால் என்னுடைய தந்தை சின்ன கருப்பையா, தாயார் நாகம்மை எனது காதல் தெரிந்ததும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஏன் என்றால் அவன் வாழ்க்கை… அவன் போனான்… அவன் ஆளானான்… அவன் தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தான்… என்று நினைத்தனர்.
எங்கள் குடும்பத்தில் அரசியலில் இருப்பது பழ.கருப்பையா மட்டும்தான். அவர் பெரிய படிப்பாளி. சமூகத்தில் அறிவாளியாக கொண்டாடப்படும் நபர். அவர் புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருப்பார். அவை எல்லாம் பிரச்சினை கிடையாது. அந்த அரசியலை குடும்பத்திற்குள் வந்து நுழைத்தார். இப்படி பேசப்படுகிற… பேசுகிற ஒருவரே.. கடைசி காலத்தில் எல்லாவற்றிலும் தோற்று கடைசி காலத்தில் சாதிக்குள் வந்துதான் ஒழிகிறார்கள். ஒருவேளை பழ.கருப்பையாவின் அரசியலின் துவக்கத்திலேயே வெற்றி பெற்று மத்திய அமைச்சராக ஆகி இருந்தால், இந்த அரசியலுக்கு நேரமே வந்திருக்காது. பார்வை விசாளப்பட்டிருக்கும். எங்கும் அரசியல் செய்ய முடியாமல், வீட்டிற்குள் வந்து அரசியல் செய்கிறார். அதிமுகவில் ஊழல் உள்ளதாக கூறி எம்.எல்.ஏ பதவி வேண்டாம் என்று வெளியே வந்தார். ஆனால் அதற்கான பென்ஷன் தொகையை கடந்த 10 ஆண்டுகளாக வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார். கடந்த 22 ஆண்டு காலமாக என்னுடைய காரைக்குடி இல்லத்தில் ஓர் இரவு கூட தங்கியது கிடையாது. 110 வருடங்கள் பழமையான அந்த வீட்டில் 110 உறுப்பினர்கள் உள்ளோம். ஆனால் அந்த வீட்டில் ஒரே கழிப்பறை தான் உள்ளது. அதுவும் பழங்கால கழிப்பறை. நான் வெறுமனே அந்த வீட்டை நன்றாக வைத்துக்கொள்வோம் என்று சொன்னதுதான் பிரச்சினை. யார் முடியுமோ அவர்கள் பணம் தரட்டும். முடியாதவர்களை விட்டுவிடுவோம். எல்லோரும் ஒரே பொருளாதார நிலையில் இருக்க மாட்டோம் என்று இலகுவாகவே சொன்னேன். அதை புழக்கத்திற்கு உரியதாக மாற்றினால் எல்லோரும் வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்.
என்னுடைய தாத்தா சொத்துதான் அந்த வீடு. எங்களுடைய பங்கை ஒதுக்கி விட்டாலாவது நாங்கள் தனியாக கழிப்பறை கட்டிக்கொள்வேன். ஆனால் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அதற்கு வெவ்வேறு பெயர்களால் சாதிதான் அடிப்படை. அதைவிட்டால் அவருக்கு என்மேல் என்ன கோபம் இருக்கப்போகிறது. என்னுடைய திருமணத்தில் தொடங்கி இந்த 22 ஆண்டுகளில் நான் கலந்துகொண்ட எந்த இல்ல நிகழ்ச்சிகளிலும் பழ.கருப்பையா கலந்துகொண்டது கிடையாது. வீட்டு நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்தால் நான் வர மாட்டேன் என்று பகிரங்கமாகவே தெரிவித்தார். என்னுடைய திருமணத்திற்கு பழ.கருப்பையா மறுப்பு தெரிவித்தார். என் தந்தையையும் போகக்கூடாது என்று கூறினார். என் திருமணத்திற்கு, என்னுடைய தந்தையுடன் பிறந்த யாரும் போகக்கூடாது என்று தடுத்தார். அதன் பிறகு நான் விலகியே இருந்தேன். என் தந்தைக்கு 75வது பிறந்தநாள் விழா நடத்தினேன். ஆனால் பழ.கருப்பையா வரவில்லை. காரைக்குடியில் பழ.கருப்பையா பிறந்த சமுதாயத்தில் ஏதாவது ஒரு காதல் திருமணத்தில் அவர் பங்கேற்றுள்ளார் என்று சொல்லுங்கள். மாற்று சமுதாயத்தினர் காதல் திருமணம் செய்தால் போவார். ஏனென்றால் அங்கு பிரச்சினை இல்லை. நம்ம வீட்டில் நடந்தால் ஒப்புகொள்ள மாட்டார்.
என்னுடைய வீட்டில் எனது தம்பி பழனியப்பன் என்று ஒருவர் உள்ளார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமிய மதத்தை தழுவிவிட்டார். அவரை பெற்றோரை வந்து சந்திக்க வேண்டும் என்று சொல்வேன். அவனையும் பெரியப்பா பழ.கருப்பையா வெளியேற்றிவிட்டார். அவர்தான் அல்லா வடிவமைத்த அழகிய சமூகம் என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட என் தம்பியை வெளியேற்றி விட்டார். அதனால்தான் கலைஞரை கொண்டாடுகிறோம். கலைஞர் குடும்பத்திலும் சாதிமறுப்பு திருமணங்கள் செய்தார்கள். அவருக்கு சாதிய கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். அதனால்தான் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் அடித்துக்கொள்கிறபோது அவசரமாக போய் ராமதாசை காப்பாற்ற நிற்கிறார். எங்கள் குடும்பத்திற்குள் என்னை போன்று பலரும் சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும் என்றே சொல்கிறேன். இல்லாவிட்டால் எனக்கு சாதி சங்கங்கள் தான் முக்கியம். அவர்கள் தான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணமாக உள்ளனர் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எதற்காக பொதுவாக பேசிவிட்டு, சாதியை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். மிகப்பெரிய மனிதர்களாக, படித்தவர்களாக அறியப்படும் நபர்கள் இதுபோன்ற அழுக்குகளை திரட்டி நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும். அது அழுக்கு. திலகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.