விடுதலை சிறுத்தைகள் கட்சி தலித் மக்களுக்காக போராடி வரும் நிலையில், புரட்சி பாரதம் கட்சி, இந்துத்துவா கட்சிகளுக்கு ஆதரவாக மாறி, அவர்களுக்காக குரல் கொடுப்பது வருத்தம் அளிப்பதாக பத்திரிகையாளர் மதன் அறிவழகன் தெரிவித்துள்ளார்.


திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர் மதன் அறிவழகன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ-வும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதற்கு காரணம் பூவை ஜெகன், தனக்கும் அந்த சம்பவத்திற்கு தொடர்பு கிடையாது. தன்னிடம் பெண் தரப்பினர் உதவி கேட்டார்கள். ஆனால் நான் உதவ முடியாது. சட்டப்பூர்வமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். சம்பந்தப்பட்ட நாளில் நான் அங்கு இல்லை என்று சொன்னார்.
ஆனால் சிசிடிவி காட்சியில் அன்றைய தினம் திருமழிசை தனியார் விடுதியில் மகேஸ்வரி உடன், ஜெகன் இருக்கும் காட்சிகள் இருந்தன. இதன் மூலம் அவர் அங்குதான் இருக்கிறார் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். மறுக்க முடியாத ஆதாரம் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டுவிட்டது. முன்னதாக கீழ் நீதிமன்றத்தில் ஜெகனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதும் மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன், முன்னாள் காவல்துறை அதிகாரி மகேஸ்வரி, பெண்ணின் தந்தை வனராஜா ஆகியோருடன் போனில் பேசியதற்கான அழைப்பு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

பூவை ஜெகன்மூர்த்தி மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவர் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே காவல்துறையினர் மிகவும் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டனர். காவல்துறை விசாரணைக்கு சென்றபோது கூட அவர் தலைமறைவாகி விட்டார். தற்போதும் தலைமறைவாகி உள்ளார். ஜெகன்மூர்த்தியின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடியதால் அதிகளவில் காவல்துறையினரை குவித்து தள்ளுமுள்ளு போன்ற பிரச்சினைகள் எல்லாம் ஏற்பட்டது. அதிமுக கூட்டணி எம்எல்ஏவும், பாஜகவின் கூட்டணி தலைவருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது காவல்துறை அவ்வளவு எளிதாக நடவடிக்கை எடுக்க முடியாது. தன்னை திமுக கூட்டணிக்கு அழைப்பதற்காக இதுபோன்று செய்கிறார்கள் என்று ஜெகன் குற்றம்சாட்டுகிறார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் மக்கள் ஆதரவு கிடையாது. பூந்தமல்லி பகுதிகளில் மட்டும் இவருக்கு செல்வாக்கு உள்ளது.
அங்குள்ள தொழில் நிறுவனங்களில் கட்டப்பஞ்சாயத்துக்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். 1990களில் மூர்த்தியார் உருவாக்கிய கட்சி புரட்சி பாரதம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் செல்வாக்குடன் இருந்த கட்சி, அவருக்கு பின்னால் கட்சி வளரவில்லை. அதே கால கட்டத்தில் தோன்றிய விசிக இன்றைக்கு மிகப் பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துவிட்டது. ஆனால் மூர்த்தியார் உருவாக்கிய கட்சியை, ஜெகன் காப்பாற்றி இருந்தால் கூட 3 மாவட்டங்களில் செல்வாக்குடன் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அத்தகைய செல்வாக்கு கிடையாது. அதிமுகவின் ஆதரவுடன் எம்.எல்.ஏ ஆக ஆகியுள்ளார். அதுவும் பூந்தமல்லி இல்லாமல் கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சென்னையில் ஆம்ஸ்ட்ராங், பூவை ஜெகன் போன்ற தலித் தலைவர்கள் ஒடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய யாரும், அரசியல் பின்னணி கொண்டவர்கள் கிடையாது. அவர்கள் எல்லாம் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர். ஆம்ஸ்ட்ராங் அவ்வளவு பெரிய அரசியல் தலைவராக உயர்ந்துவிடவும் கிடையாது. அவர் தேர்தலில் வென்று ஒரு முறை கூட எம்எல்ஏ ஆக வில்லை. பெயருக்கு தேர்தலில் போட்டியிடுவார் அவ்வளவு தான். ஜெகன்மூர்த்தி, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் எம்எல்ஏ ஆகினார். அதன் மூலம் தன்னுடைய ஆதரவு சக்திகளை காப்பாற்றி கொண்டார். அம்பேத்கரிய அரசியல் கட்சியான புரட்சி பாரதம், இந்துத்துவா கட்சியான பாஜகவின் கூட்டணியில் உள்ளார். அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இதேபோல், அரக்கோணத்தில் தலித் கொலை செய்யப்பட்ட வழக்கில் வன்னியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். தலித் மக்களுக்காக தமிழகம் முழுவதும் விசிக போராடி வருகிறது. ஆனால், பூவை ஜெகன் தலித்துகளுக்காக போராடினாரா? ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக வழக்கு நடத்தினாரா? ஆனால் திருமாவளவன் முதலமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுத்தார். அதனால்தான் வழக்கு இவ்வளவு விரைவாக நடைபெற்றது. பூவை ஜெகன் தன்னுடைய ஆட்களை அனுப்பியுள்ளார். ஏடிஜிபி தன்னுடைய போலீஸ் காரை அனுப்பியுள்ளார். பெண்ணின் தந்தை வனராஜாவிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு அம்பேத்கரிய இயக்கம், இன்றைக்கு கூலிப்படையாக மாறிபோய் நிற்பது வேதனை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து அதிகாரத்திற்கு வருவது என்பது கடினமானது. ரவிகுமார், திருமா போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்கு கல்வி நிதியுதவி குறைத்து வருவது தொடர்பாக தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்.

அண்மையில் கனிமொழி எம்.பி வெளியிட்ட பதிவில் தகுதி வாய்ந்த 60 பிஹெச்.டி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பை ரத்து செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்று தலித்துகளுக்கு எதிரான எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அதில் எதுவுமே பங்கெடுக்காதவர் பூவை ஜெகன்மூர்த்தி. இந்த விவகாரத்தில் ஒரு அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி, ஒரு வழக்கறிஞர் என இத்தனை பேர் சேர்ந்து ஒரு சிறுவனை கடத்தியுள்ளனர். காதலை பிரித்துவைக்கும் வேலையை செய்திருக்கிறார்கள். சிறுவன் கடத்தல் விவாகரத்தில் தனுஷுக்கு, அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க உதவியவர்கள், அந்த பகுதியை சேர்ந்த தலித் இளைஞர்கள். அவர்கள் புரட்சி பாரதம் கட்சியின் ஆதரவாளர்கள் ஆவர். தற்போது தனது கட்சியின் தொண்டர்களுக்கு எதிராகவே பூவை ஜெகன்மூர்த்தி செயல்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


