தேர்தல் அரசியல், கொள்கை சித்தாந்தம், திட்டங்கள் என அனைத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதே அவரை கண்டு எதிரிகள் அச்சப்பட காரணமாக உள்ளது என பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் ஒன்றாம் தேதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரை கண்டு அரசியல் எதிரிகள் அச்சமடைவதற்கான காரணங்கள் குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:- மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர மாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சொன்னார். அவர் கட்டங்களை, ஜாதகங்களை எல்லாம் பார்த்து சொன்னார். இதேபோல் எடப்பாடி சொன்னார், ஓபிஎஸ் சொன்னார், அன்புமணி, பாஜக தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள். ஆனால் மிகவும் அமைதியாக இருந்து ஒரு மாபெரும் வெற்றியை பெற்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று அவர் பொறுப்பேற்றார் பாருங்கள் அந்த நாளை மறக்க முடியுமா? கலைஞர் மீது இல்லாத கோபம் ஏன் ஸ்டாலின் மீது வருகிறது என்பது முக்கியமான கேள்வி. இதற்கு மு.க.ஸ்டாலினின் தேர்தல் அரசியல், அவரது கொள்கை சித்தாந்தம், அவர் செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களே காரணம் ஆகும்.

திமுக வெற்றி பெறவே பெறாது என்று எதிர்க்கட்சிகள் சொல்லிக் கொண்டிருந்தபோது 2019 நாடாளுமன்றத் தேர்தல் இமாலய வெற்றி. அதன்பின்னர் வந்த உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றி. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பெரும் வெற்றி. பின்னர் 2021 சட்டமன்றத் தேர்தலில் இமாலய தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். பின்னர் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலிலும் பெரும் வெற்றி. 2019ஆம் ஆண்டிற்கு பின்னர் பெரிய அளவிலான வெற்றியை ஸ்டாலின் தொடர்ந்து பெற்று கொண்டிருக்கிறார். அப்படி என்றால் எதிர்க்கட்சிகளால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும். தமிழ்நாட்டோடு நிறுத்திக்கொண்டாரா? என்றால் இல்லை. இந்தியா கூட்டணியை வலிமையாக கட்டி அமைப்பதில் பெரும் பங்கு வகித்தார். அதனுடைய விளைவு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனது. அதற்கு ஸ்டாலின் பங்கு மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டோடு நிற்காமல் மற்ற மாநிலங்களிலும் சென்று பாஜகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தினார். அதனால் பாஜகவினருக்கு ஆத்திரம்.
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் நலத்திட்ட உதவிகளை செய்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் சித்தாந்த ரீதியாக ஸ்டாலின் மிகவும் வலிமையாக உள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம், திராவிட இயக்க சித்தாந்தத்தின் நீட்சி ஆகும். கலைஞர் கொண்டுவந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை நீதிமன்றத்திற்கு சென்று சட்ட ரீதியாக தடை வாங்கிக் கொண்டிருந்தார்கள். இடையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டார்கள் என்று சொன்னால் ஹெச்.ராஜாவால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இத்துடன் நிறுத்தவில்லை. மத்திய அரசால் மூடப்பட்ட கீழடி அகழாய்வு தளத்தில் மீண்டும் ஆய்வுகளை தொடங்கினார். அத்துடன் அங்கே அருங்காட்சியகத்தையும் கட்டி எழுப்பி, தமிழர்களின் பெருமையை உலகிற்கு உறக்கச் சொன்னார். சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்மணியை பகுப்பாய்வை ஆய்வுசெய்தபோது அது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தது.
அப்போது,தமிழன் 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முறையாக வேளாண்மை செய்து வாழ்ந்து வந்த சமுதாயம் என உலகிற்கு பறைசாற்றினார். வேதகால நாகரிகத்தை விட தமிழர் நாகரிகம்தான் தொன்மையானது என்பதை நிறுவிகிறார். இவற்றை எல்லாத்தையும் விட இரும்பின் காலம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது என்று உலகிற்கு அறிவித்தார். ஆரியர்களுக்கு முன்பாகவே இரும்பை பயன்படுத்தும் அறிவை பெற்றிருந்தவர்கள் தமிழர்கள் என்பதை உரக்கச் சொன்னார். இந்தி திணிப்பிற்கு எதிராக மிக உறுதியாக தனது போர்க்குணத்தை வெளிப்படுத்தினார். சரி ஆளுநரை வைத்து மிரட்டலாம் என்று பார்த்தார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை என்றுவிட்டார். ஆளுநர் உரையில் என்ன இருக்கிறதோ அதைதான் வாசிக்க வேண்டும். ஆளுநர் மாற்றி வாசித்தபோது, அவை குறிப்பில் இடம்பெறாது என்று உறுதிபட தெரிவித்தார்.

எழுவர் விடுதலையை சாத்தியப்படுத்தினார். நீண்டகாலமாக சிறையில் இருந்த இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை சாத்தியப்படுத்தினார். பெண்கள் கல்வியை அடுத்தக்கட்டத்திற்கு நகர வேண்டும் என்று முடிவு செய்து கல்வி உரிமை தொகையை மாதம் ஆயிரம் வழங்கினார். தமிழ் புதல்வன் என்ற பெயரில் ஆண்களுக்கு நிதியுதவி வழங்கினார். பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணம் மூலம் அவர்களுக்கான வாசல் திறக்கப்பட்டது. கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மினி டைடில் பார்க் இவை எல்லாம் இந்த அரசின் மிகப்பெரிய சாதனைகள் ஆகும். பெண்களுக்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் வன்முறைகள் கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரங்களில் சென்னைக்கு முதலிடம் என்றால் அதையும் நிருவிக்காட்டியுள்ளார். மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் முதலியவற்றில் தமிழ்நாடு முன்னிலை வகித்தது. அதனால்தான் மக்களால் விரும்பப்படும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.