மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் ஒரு பொருத்தமான பட்டியல் என்றும், இதில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் வேட்பாளர் தேர்வு மற்றும் அதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது :- தமிழ்நாட்டில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. ஒரு பொருத்தமான பட்டியல் என்று கூட இதை பார்க்கலாம். அதற்கு முதன்மையான காரணம் என்பது வில்சன், ஆளுநருக்கு எதிராக வழக்குகள் முதற்கொண்டு பல்வேறு உரிமைகள் சார்ந்த வழக்குகளை நடத்துவதில் முதன்மையானவராக உள்ளார். அதுபோக அவர் ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர். ஒரு மதச்சார்பற்ற கட்சியை நடத்தக் கூடியவர்கள் அனைத்து சமுதாயங்களுக்கான வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். நடைமுறையில் சாதி, மதத்தை ஒட்டு மொத்தமாக அழிப்பது என்பது சாத்தியமில்லை.
அப்போது தேர்தல் அரசியலில் செய்ய வேண்டியது என்ன என்றால் அனைத்து சமுதாயத்திற்கான முக்கியத்துவத்தை முதன்மை படுத்துவதாகும். வக்பு வாரிய சட்டத்தை உருவாக்குகிற பாஜகவில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை.இஸ்லாமியர்களே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களே இல்லாத சட்டமன்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்திய நாட்டிலே எல்லாருக்குமான பிரதிநிதித்துவம் என்கிற இடத்தை வெறுமனே மேடை முழக்கமாக இல்லாமல், கவிஞர் சல்மா இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர், வழக்கறிஞர் வில்சன் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்கிற ஒரு மதச்சார்பற்ற கூட்டணிக்கான தேர்வு அங்கே உள்ளது.
கவிஞர் சல்மா ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்து பெரிய அளவில் கல்வி பெற முடியாமல் ஒரு சராசரி இஸ்லாமிய பெண் என்கிற பின்னணியில் இருந்து வந்தவர். பெண்களும் ஊராட்சி தலைவராகலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, அவர் ஊராட்சி மன்றத் தலைவராக வருகிறார். அங்கிருந்து தொடங்குகிற பயணம் எழுத்து, இலக்கியம், கவிதைகள் வழியாக தான் சல்மா அறியப்படுகிறார். தொடர்ச்சியாக அவர்களின இயங்குதல் காரணமாக சல்மாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2006ல் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
கலைஞர், அவரை சமூக நலத்துறை அமைச்சராக ஆக்க விரும்பினார். அவர் தோல்வி அடைந்ததால் சமூக நலத்துறையில் வாரிய தலைவராக நியமித்தார். அதன் பின்னர் உட்கட்சி அரசியல் காரணமாக சல்மா பின்னடைவுக்கு உள்ளாகினார். இந்த வாய்ப்பை சல்மாவே எதிர்பார்க்க வில்லை. 15 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், சல்மாவுக்கு தற்போது திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. சல்மாவை வைத்து பெரிய வாக்கு வங்கியை கொண்டுவரவோ, பெரிய பொருளாதார பின்புலத்தை அவர் கட்சிக்கு வழங்கிவிடுவார் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனாலும் அவர் முதன்மை படுத்தப்படுகிறார் என்கிறபோது அறிவுசார் அரசியலில் சல்மா அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
திமுக என்பது பேச்சால் வளர்ந்த கட்சி என்பார்கள். சிறு பத்திரிகை இலக்கியங்களில் இருந்துதான் இந்த கட்சி தொடங்கியது. அங்கிருந்து வருகிறபோது அதன் அடித்தளத்தை இழந்துவிடாமல் உள்ளது. பாரதிதாசனை போற்றிய இயக்கம் திமுக. பின்னாளில் புதுக்கவிதை தோன்றியபோது கவிஞர் மீரா, மு.மேத்தா, நா.காமராசன், கவிக்கோ அப்துல் ரகுமான், வைரமுத்து போன்றவர்களை ஆதரித்தது. மதுரை வீதிகளில் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்த தமிழ்குடிமகன் என்கிற சாத்தையாவை, கலைஞர் அரசியலுக்கு கொண்டுவந்து சபாநாயகர், அமைச்சர் ஆக்கி அழகுபார்த்தார். கவிக்கோ அப்துல் ரகுமான் என்னிடம் தனிப்பட்ட முறையிலான உரையாடல்களில் பலமுறை பகிர்ந்து கொண்டுள்ளார். நேரடி அரசியலுக்கு வருமாறு கலைஞர் பலமுறை அழைத்தும், அவர் இணக்கம் காட்டவில்லை. வைரமுத்து, கலைஞர் காலத்திலேயே நினைத்திருந்தால் அவர் தென் மண்டலத்தின் தளபதியாகி இருப்பார். அதற்கான சமூக பின்னணி, பேச்சாற்றல் போன்றவை அவரிடம் இருந்தது. அப்போது அறிஞர்கள் உடனான உறவை திமுக எப்போதும் தொடர்ந்து வருகிறது. ஆனால் அந்த அறிவார்ந்த ஆளுமைகளை வளர்த்தெடுக்கிற இடம் அதிமுகவில் இல்லாமல் போய்விட்டது. திமுகவில் சிந்தனை வறட்சி என்பதே எப்போதும் கிடையாது.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி, அவர் தேர்தல் அரசியலில் வெல்ல முடியாத நிலை வந்தபோது எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் ராஜ்யசபா எம்.பி.க்கு வாய்ப்பு பெற பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார்கள். மேல்மட்டத்தில் இருந்து எல்லாம் அணுகினார்கள். கமல் நினைத்திருந்தால், இளையராஜாவை போல பாஜக மூலம் ராஜ்யசபா எம்.பி. சீட்டை பெற்றிருக்க முடியும். கமல்ஹாசன் அடிப்படையில் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்த குடும்பம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிடம் நேரடியாக கண்டனக்குரலை தெரிவித்தார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். கமலஹாசனை வெறுமனே சாதியக் குடுவைக்குள் அடைக்கக்கூடாது. அவருக்கு இந்தியா கூட்டணி மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஜனநாயக அம்சமாகும். நாம் எல்லோரையும் ரங்கராஜ் பாண்டேவாக பார்க்க வேண்டாம். கமல்ஹாசன் ஒரு முற்போக்கு சக்தியாக இந்தியா கூட்டணியின் மதச் சார்பற்ற அணியின் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறார். அதை திமுக அங்கீகரித்துள்ளது.
மற்றொரு வேட்பாளராக சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கடைசியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார். அப்படி பட்டசூழலில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் இருந்தார். 40க்கு, 40 வெற்றி தடைபடக் கூடாது என்பதற்காக அவரை தவிர்த்தார்கள். ஆனால் ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் கொங்கு மண்டலத்தில் திமுக செல்வாக்கு செலுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. அந்த அடிப்படையிலும் சிவலிங்கம் எம்.பியாக வர இருப்பது வரவேற்க தக்கதாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.