கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துக்கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் 8 மாதக் காலம் இருக்கிறது. அந்த தேர்தலில் எப்படியாவது தங்களுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியின் தலைவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் திமுக – அதிமுக – பாஜகவை எதிர்த்து எங்களுடைய ஒரே இலக்கு “முதலமைச்சர்” பதவிதான் என்கிற முழக்கத்தை முன் வைத்து வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய்யை நேரில் பார்க்க கூட்டம் அதிகமாக கூடியுள்ளது. மேலும் காலையில் இருந்து குடிக்க தண்ணீர் இல்லாமல், உணவு கிடைக்காமல் சோர்ந்து போன தொண்டர்கள் மாலை விஜய் வந்ததும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அதில் இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடிவந்து காலில் மிதிப்பட்டு இறந்துப் போனவர்களையும், உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுடன் காவல்துறையினர், திமுகவினர், அதிமுகவை சேர்ந்தவர்கள், பாஜக தொண்டர்கள் என்று ஏராளமானோர் இணைந்து மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.
ஆனால் கூட்டத்தை கூட்டி, நெரிசலை உருவாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்திய தவெக தலைவர் விஜய்யோ, அதற்கு அடுத்த கட்ட நிர்வாகிகளோ, மாவட்ட பொறுப்பாளர்களோ ஒருவர் கூட சம்பவ இடத்தில் இல்லை. தவெக தலைவர் விஜய் இரவோடு இரவாக விமானத்தைப் பிடித்து சென்னை சென்றுவிட்டார். அக்கட்சியின் அடுத்த கட்ட நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் என்று எல்லோரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
திரையுலகில் ஸ்டார் என்கிற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடந்து விட்ட பின்னர் களத்தில் நிற்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச பொறுப்பு கூட இல்லாமல் ஓடிவிடுவது தான் சினிமா மோகத்தின் அரசியல். ஏற்கனவே திட்டமிட்டதைப் போன்று தவெகவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட சம்பவ இடத்தில் இல்லாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
கரூரில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரக் கூட்டம் நடந்த அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் தவெக தலைவர் விஜய் பகல் 12 மணி அளவில் கூட்டம் நடக்கின்ற இடத்திற்கு வந்துவிடுவேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினால் ரசிகர்கள், தொண்டர்கள் காலையில் இருந்து வரத்தொடங்கி உள்ளனர்.
மாலையில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற்றவர்கள், எதற்காக முற்பகல் 12 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்துவிடுவேன் என்று பதிவிட வேண்டும்? அப்படி பதிவிட்டு விட்டு இரவு 7 மணிக்கு வரவேண்டிய காரணம் என்ன? சம்பவம் நடந்தப் பின்னர் கூட்டத்தை ஒருங்கிணைத்த அந்த குழு எங்கே போனது? இப்படி ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இந்த நாட்டை சீரழித்ததில் பெரும் பங்கு சினிமாவுடையதுதான். கூத்தாடிகளுக்கு மன்றங்கள் வைக்காதீர்கள். எங்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள்… நாங்கள் சினிமாவின் அழுவதும், சிரிப்பதும் நல்லது செய்வதும், கெடுப்பதும் நாட்டுக்காக அல்ல.. காசுக்காக; சினிமாவில் புகழ் வெளிச்சத்தில் இருந்தப் படியே, சினிமா துறையைப் பற்றி இப்படி பேசுவதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்.. அது இயற்கையாகவே நடிகவேள் எம்.ஆர்.ராதாவிடம் இருந்தது.