அதிமுக, பாஜக, தவெக கூட்டணி திமுகவுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும், இதனோடு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையத்தை வைத்து என்ன செய்ய போகிறார்கள்? என்பது தான் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


தவெக – அதிமுக கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் துயர சம்பவம் விஜய்க்கு ஒரு அதிர்ச்சியையும், அரசியல் ரீதியாக அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டது. அதன் காரணமாகவே அவர்கள் கரூர் சம்பவம் குறித்து எந்த விதமான அறிக்கையையும் விடவில்லை. சிபிஐ விசாரணையோ அல்லது வேறு யாரோ? விசாரிக்க வேண்டியது குறைவான வேலைதான். எல்லாமே ஊடகங்களில் பதிவாகிவிட்டது. விஜயினுடைய விக்கிரவாண்டி மாநாடு முதல் கரூர் பொதுக்கூட்டம் வரை தவெகவுக்கு காவல்துறை முழுமையான ஒத்துழைப்பையும், பாதுகாப்பையும் வழங்கியது. இதை நான் சிபிஐயிடம் சொல்வதற்கும் தயாராக உள்ளேன்.
அமித்ஷாவுக்கு தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டலத்தில் இருந்து 30 பாஜக எம்எல்ஏக்களை பெற வேண்டும் என்பது தான் திட்டம். அதற்காக தற்போது அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட் என்பது, பழைய என்டிஏவை தக்க வைத்துக்கொள்வதாகும். நயினார், வைஜெயந்த் பாண்டே மற்றவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். காரணம் என்டிஏ கூட்டணிக்கு என்று தொகுதிகளை பெற்று, மற்றவர்களுக்கு இடங்களை அவர்கள்தான் பிரித்து தருவார்கள். தொகுதி பங்கீடு என்பது டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேசிய போதே முடிவு செய்யப்பட்டுவிட்டது.

கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்று நினைக்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கு, பெரிய ஆப்ஷனாக என்டிஏ கூட்டணி கட்சிகள் இல்லை. விஜய் தான் அந்த ஆப்ஷனாக இருக்கிறார். அதற்கான வாய்ப்பை கருர் சம்பவம் கொடுத்தது. அதில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் விஜய் தன்னுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என்று எடப்பாடி சொல்கிறார். அதிமுக, பாஜக, தவெக கூட்டணி சேர்ந்தால் 200 இடங்கள் வரை வெல்லலாம் என்று சொல்கிறார்கள். இவர்கள் சொல்கிற கணக்கில் எங்கே தமிழ்நாடு மக்களின் சிந்தனை உளவியல் உள்ளது. எனவே அவர்கள் போடுகிற கணக்கு ஒருபோதும் வராது.
முன்பு யாரெல்லாம் விஜய் வருவார் என்று சொன்னார்களோ, அவர்கள் தற்போது இல்லை என்பார்கள். காரணம் கரூர் சம்பவத்தின் போது விஜய் விட்டுவிட்டு ஓடிவிட்டார். இவர்களுக்கு முன்னோடியாக இருக்கும் எம்ஜீஆர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் விட்டுவிட்டு ஓடியிருப்பார்களா? என்று மக்களிடம் கேள்வி எழும். விஜய் ரசிகர்கள், அவரை ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் அவரை ஒரு மாற்று சக்தியாக நினைப்பவர்கள் தற்போது மாறிவிட்டார்கள். அதனால் தான் விஜய் தனியாக போட்டியிட தயங்குகிறார்.

தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். எஸ்.ஐ.டி விசாரணை ஒரு வாரம் நடந்திருந்தால் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருப்பார்கள். அதற்குள் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பார்கள். விஜய் மாட்டியிருப்பார். அதனால் தான் வேக வேகமாக சிபிஐ விசாரணைக்கு கொடுத்தார்கள். சிபிஐ விசாரணை என்பது இறந்தவர்களுக்கு நியாயம் கிடைப்பது அல்ல. ஆனால் அதற்கான விலையை விஜய் கொடுக்கிறார். லாபத்தை பாஜக பார்க்க போகிறது.
இவர்கள் எல்லாம் சேர்ந்து வெற்றி பெற்றுவிட்டால், தமிழ்நாட்டை மூன்றாக பிரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். காஷ்மீரை போன்று தமிழ்நாட்டை யூனியன் பிரதேசமாக மாற்ற இவர்களுக்கு எவ்வளவு நேரமாகும். அவர்களின் திட்டத்தை உணர்ந்து நாம் அரசியலை முன்னெடுக்கிறோம். விஜயின் தயக்கம் என்பது, பாஜக கூட்டணிக்கு செல்வதால் தன்னுடைய அரசியல் அடிபட்டு போய்விடும் என்பதுதான். விஜய் செய்ததே அஜெண்டா அரசியல் தான். திமுக மீது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி செய்ய முடியாததை விஜய் செய்தார்.

தவெக தற்போது பாஜக – அதிமுக கூட்டணியில் சேர வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். கடைசியில் தேர்தலை பொறுத்தவரை திமுகவை ஒழிப்பதற்காக கூட்டணிக்கு செல்கிறோம் என்பார்கள். அதுதான் கிறிஸ்துமஸ் பார்ட்டியாகும். ஸ்டாலின் செல்வாக்கு என்பது ஆட்சி பலம் தானே தவிர, அரசியல் பலம் கிடையாது. அறிவுஜீவிகள் எல்லோருக்கும் மத்திய அரசின் துரோகங்கள் எல்லாம் தெரியும். அவர்கள் எல்லாம் ஸ்டாலின் பக்கம் தான் நிற்பார்கள். ஜெயலலிதா பெண்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்தார். அவரை அம்மா என்று சொன்னார்கள்.
இன்றைக்கு பெண்கள், மாணவர்கள் எல்லோருக்கும் நலத்திட்டங்களை செய்து அப்பாவாகிவிட்டார். அப்படி இருக்கையில் அவரை விட்டு மக்கள் எப்படி செல்வார்கள். அதனை பாஜக விமர்சித்தார்கள். ஆனால் ஸ்டாலின் அதை கண்டுக்கொள்ளவில்லை. 2017-21 வரையிலான எடப்பாடியின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு எப்படி இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். ஒட்டுமொத்தமாக பாஜக, விஜய், அதிமுக முன்னெடுக்கும் அரசியலை வைத்து திமுகவை அச்சுறுத்த முடியாது. இவர்கள் இந்த கூட்டணியை வைத்துக்கொண்டு, வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் திமுகவுக்கு அச்சுறுத்தலாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


