விஜய், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவர்களால் 22 சதவீதத்திற்கு மேலாக வர முடியாது. இது ஆளுங்கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டிருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- காங்கிரஸ் சார்பில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விஜயுடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது காங்கிரஸ் கட்சி நம்முடன் தான் இருக்கும் என்று சொன்னார். உதயநிதி, கை எப்போதும் நம்முடன்தான் இருக்கும் என்று சொன்னார். காங்கிரசில் எப்போதும் இரண்டு கோஷ்டிகள் இருக்கின்றன. திருச்சி வேலுசாமி, எப்போதும் திமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர். பாஜக போல தனித்து போட்டியிட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். அதேபோல் காங்கிரசுக்குள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் கள சூழல் அப்படி தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் வெற்றி பெறும் அளவுக்கு கிடையாது என்பது தான் உண்மை.


ஜோதிமணி எம்.பி., விஜய் காங்கிரசில் இணை திட்டமிருந்தார் என்று சொல்கிறார். அதே ஜோதிமணி திமுக வாக்குகள் இல்லாமல் எப்படி அவருடைய தொகுதியில் வெற்றி பெற முடியும்? எம்.பி ஆகிவிட்டார். தற்போது கவலை கிடையாது. 2029 தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார்? கள எதார்த்தம் இவ்வளவுதான். அரசியல்வாதிக்கு வெற்றி பெறுவதுதான் இலக்கு. அப்போது விஜயுடன் கூட்டணி என்பது ஒரு ஆசையின் வெளிப்பாடு தானே தவிர, நிதர்சனத்தின் வெளிப்பாடு அல்ல. ஒருவேளை ஆட்சியில் பங்கு என்கிற விஜயின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டால் காங்கிரஸ், டிடிவி, கிருஷ்ணசாமி, தேமுதிக போன்ற கட்சிகள் தான் வரும். இதில் விஜயக்கு சராசரியாக 15 சதவீதம் வாக்குகளும், காங்கிரசுக்கு 4 சதவீத வாக்குகளும் இருக்கும். அப்போது இவர்கள் எல்லோரும் சேர்ந்தாலும் ஒட்டுமொத்தமாக 22 சதவீதம் வாக்குகளை தான் வாங்குவார்கள். இது திமுகவுக்கு தான் லாபமாகும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அதாவது வாக்களிக்கும் உரிமை என்பது அடிப்படை உரிமை கிடையாது. அது நமக்கு சட்டம் வழங்கியிருக்கும் உரிமையாகும். ஆனால் வாக்களிக்க நாம் குடிமகனாக இருக்க வேண்டும். யார் வாக்களிக்க வேண்டும் என்கிற உரிமையை அரசு தான் முடிவு செய்கிறது. 18 வயது வந்தோருக்கு வாக்களிக்கும் உரிமை என்பது சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாகவே வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தால் முடக்க முடிகிறது. இன்றைய தேதிக்கு 2022 வாக்காளர் பட்டியல் தான் இருக்கிறது. நாம் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க பிஎல்ஓக்கள் மூலம் தேர்தல் ஆணையம் உதவி செய்கிறது. ஆனால் அது போதவில்லை. எஸ்.ஐ. ஆர் நடவடிக்கையால் முடக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் மீண்டும் நம்முடைய பெயரை சேர்க்க நாம் முயற்சி செய்திட வேண்டும். இந்த வேலையை செய்வதற்கான கட்டமைப்பு அரசியல் கட்சிகளிடம் இருக்க வேண்டும். அந்த கட்டமைப்பு இல்லாத தவெகவை எப்படி அரசிய்ல கட்சி அளவுக்கு கொண்டு வருவார்கள். உங்கள் கட்சி செய்ய வேண்டிய அடிப்படை வேலைகளை செய்வதற்கு ஆட்கள் இல்லையே.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டபோதும், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இது குறித்து பல்வேறு வகைகளில் அரசு விளம்பரம் செய்து வருகிறது. விண்ணப்ப வினியோக பணிகள் தான் முடிவடைந்துள்ளது. ஆனால், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதை டிஜிட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன. ஒரு ஆளுநரும், ஜனாதிபதியும் மசோதா மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு மட்டும் காலக்கெடு நிர்ணயிக்கிறார்கள். இதற்கு ஒரு வருட காலம் அவகாசம் வழங்கக்கூடாதா? 30 நாட்களுக்குள்ளாக 3 முறை வீடுகளுக்கு செல்வது சாத்தியமில்லை. கட்சிகள் தான் உதவிட வேண்டும் என்கிறார்கள் தேர்தல் ஆணையம். இந்த பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காங்கிரஸ், தவெகவுக்கு வாக்குச்சாவடி முகவர்களே கிடையாது. பாஜகவுக்கே சொற்ப அளவிலான முகவர்கள் தான் இருக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


