கர்நாடகாவில் ஒரே வீட்டில் 80 பேர் தங்கியிருந்த அறையில் இந்தியா டுடே நடத்திய ஆய்வில், அது மோசடியானது என்று தெரியவந்து விட்டதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் மோசடி தொடர்பாக ராகுல்காந்தி, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும், அவற்றின் உண்மை தன்மை குறித்தும் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ராகுல்காந்தி மகாதேவ்புரா தொகுதியில் பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதை ஒரு புலனாய்வு பத்திரிகையாளர் போன்று செயல்பட்டு கண்டுபிடித்துள்ளார். மகாதேவ்புரா தொகுதியில் 6.5 வாக்காளர்கள் இருக்கும் நிலையில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் அங்கே சேர்க்கப்பட்டு உள்ளனர். 10,452 பேர் ஒரே முகவரியில் வசித்து வருகின்றனர். ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டில் 89 பேர் வசித்து வந்துள்ளனர். முறையான புகைப்படங்கள் இல்லாமல் 4,132 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான பார்ம் 16-ல் மோசடி செய்து 33,692 வாக்காளர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளது.
ஒரு தொகுதியில் பாஜக தேர்தல் ஆணையம் இணைந்து இவ்வளவு மோசடி செய்து இருக்கிறது. அப்போது, மகாராஷ்டிராவில், ஹரியானாவில் என்ன என்ன மோசடி செய்திருப்பீர்கள் என்று பார்த்தால் நெஞ்சே பதறுகிறது. இந்த மோசடியை தான் ராகுல்காந்தி அம்பலப்படுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் கர்நாடக தேர்தல் ஆணையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர். ஆனால் தற்போது வரை இந்த மோசடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுக் கொண்டதா? பாஜக பொறுப்பேற்றுக் கொண்தா? அல்லது மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதா? என்று பார்த்தால் யாருமே பொறுப்பேற்கவில்லை.
இந்த நிலையில், ராகுல்காந்தி மகாதேவ்புரா தொகுதியில் ஒரே வீட்டில் 80 பேர் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதை இந்தியா டுடே ஆங்கில ஊடகம், கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த முகவரி பெங்களூரு முனிரெட்டி காடன், எண்.35ஆம் வீடு என்பது தெரியவந்தது. 10க்கு, 15 சதுர அடி பரப்பளவிலான அந்த வீட்டில் 80 வாக்காளர்கள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அதில் இந்தியா டுடே நிருபர் சோதனை செய்தனர். ஆனால் அங்கே மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி இருக்கிறார். அவரும் கடந்த மாதம் தான் அந்த அறைக்கு வந்துள்ளார். அந்த நபரிடம் விசாரித்தபோது வீட்டின் உரிமையாளரான ஜெயராம் ரெட்டி, பாஜகவை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. ஜெயராம் ரெட்டியிடம் விசாரித்த போது, அந்த வீட்டில் லீசுக்கு பலர் தங்கியுள்ளதாகவும், அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டு, பெரும்பாலானோர் பின்னர் வெளியேறி விட்டாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது ராகுல்காந்தி சொன்ன எதுவும் பொய் கிடையாது. வீட்டில் 80 பேர் உள்ளனர். ஆனால் அவர்களை நிரந்தரமாக தங்க வைக்க முடியவில்லை. அவர்களில் பலர் பீகார், ஒடிசா, மேற்குவங்கம் போன்ற வெளி மாநிலங்களையும், மண்டியா போன்ற வெளி மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் சிலர் தேர்தலின்போது வாக்களிக்க வருகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கும் போது அதற்கு பொறுப்பேற்றுக் கொணடு சரிசெய்வதாக தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலையை, இன்றைக்கு ராகுல்காந்தி செய்திருக்கிறார். போலி வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை நீக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலையாகும். ஆனால் தேர்தல் ஆணையம் இதை அனுமதிக்கிறதோ? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்தித்து, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கலாம் அல்லவா?
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் அதைதான் கேட்கிறார். பிரதமர் மோடி, 15 வருடங்களில் ஒரு முறை கூட செய்தியாளர்களை சந்தித்து பேசியது கிடையாது. தற்போது ஓட்டு போடுவதிலேயே பிரச்சினைகள் வந்துவிட்டன. ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொன்னால் என்ன? இந்திய தேர்தல் ஆணையத்திடம் டிஜிட்டல் முறையிலான வாக்காளர் பட்டியலை கேட்டால் அவர்கள் பிடிஎப் போன்று தருகிறார்கள்.
இவ்வளவு பெரிய மோசடிகள் நடந்துவிட்டன. இனி பீகார் தேர்தலை எப்படி நடத்துவீர்கள்?. தற்போது தேர்தல் ஆணையம் வைத்துள்ள வாக்காளர் பட்டியலை வைத்து தேர்தலை நடத்துகிறீர்கள் என்றால்? அப்போது அந்த தேர்தலுக்கு என்ன அர்த்தம் இருக்கும்? ராகுல்காந்தி தேர்தல் மோசடிகளை கண்டுபிடிக்காவிட்டால் கர்நாடகாவில் இதே வாக்காளர் பட்டியலை வைத்து தானே தேர்தலை நடத்தி இருக்கும். நீங்கள் தருவதுதானே வாக்குப்பதிவு நிலவரம். மகாராஷ்டிராவில் 5 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்ற சிசிடிவி காட்சிகளை வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்கிறார். அங்கு முறைகேடு நடைபெறவில்லை என்றால் சிசிடிவி காட்சிகளை காண்பித்து அப்படி முறைகேடு நடக்கவில்லை என்று சொல்லலாம் தானே. ஆனால் ஏன் சிசிடிவி காட்சிகளை தர மறுக்கிறீர்கள்?. அப்படி தருவது தேர்தல் ஆணைய நடைமுறைகளிலேயே இல்லை என்று சொல்கிறீர்கள்.
தேர்தல் ஆணையத்தின் மோசடிகள் குறித்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்? மகாராஷ்டிராவில் 3 மாதத்திற்கு முன்பு மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தியா கூட்டணி, 3 மாதங்களுக்கு பிறகு மிகப் பெரிய படுதோல்வியை சந்திக்கிறது என்றால்? அப்போது என்ன நடைபெற்றது. மேற்கு வங்கத்திலும் மம்தா பானர்ஜிக்கு அந்த பயம் உள்ளது. பீகாரில், செய்து முடித்து விட்டனர். கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் இப்படி நடைபெற்றுள்ளது என்றால், நாடு முழுவதும் என்ன என்ன வேலைகள் செய்திருப்பீர்கள். போதிய விழிப்புணர்வு இல்லாத வடஇந்திய மாநிலங்களில் நீங்கள் என்ன என்ன செய்திருப்பீர்கள். ராகுல்காந்தி, இந்தியா டுடே, நடிகர் பிரகாஷ் ராஜ் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு பிரதமர் மோடி, செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் மோசடி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். நாடே அதைதான் எதிர்பார்க்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.