ஹமாஸ் அமைப்பினர் வசம் பிணைக்கைதிகள் இருப்பதுதான் காசா மீதான போருக்கான தார்மீக காரணமாக இருப்பதாகவும், அதனை ஹமாஸ் முடிவுக்கு கொண்டுவரும்போது இந்த போருக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போருக்கான தீர்வுகள் என்ன? என்பது குறித்து முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஐக்கிய நாடுகள் சபையை பொருத்தமட்டில் பாலஸ்தீனம் என்பது ஒரு ஆக்கிரமிப்பு நிலப்பகுதியாகும். அந்த நிலையில்தான் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில் இருக்கின்றனர். அப்படி ஆக்கிரமிப்பாளர்களாக இருக்கும் இஸ்ரேலியர்களுக்கு சில பொறுப்புகள் உள்ளன. அவற்றில் இருந்து அவர்கள் மீறுகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள், தங்களுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு உணவு, இருப்பிடம் போன்றவற்றுக்கு எந்தவிதமான இடையூறுகளையும் ஏற்படுத்தக்கூடாது. ஆனால் தற்போது காசாவை முழுமையாக முற்றுகையிட்டு அந்த மக்களுக்கு உணவு, குடிநீர், இருப்பிடம் என எந்த அடிப்படை உரிமைகளையும் கிடைக்காமல் இஸ்ரேல் செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான் உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
1947 ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானம் 181, பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து இஸ்ரேல் என்ற தனி நாடாகவும், பாலஸ்தீன அரபுகளுக்கு என்று ஒரு தனிநாடும், ஜெருசலேம் சர்வதேச காட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகவும் மாற்ற வலியுறுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக 1967ஆம் ஆண்டில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் 1967 போரின்போது இஸ்ரேல் பிடித்த பகுதிகளை எல்லாம் பாலஸ்தீனத்திடம் திருப்பி கொடுத்துவிட்டு தங்களுடைய பழைய எல்லைக்கு போய்விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட நாடுகள் என்கிற முடிவை மறைமுகமாக வலியுறுத்தியது. ஜெருசலேம் நகரம் மட்டும்தான் பிரச்சினைக்குரிய இடமாகும். ஜெருசலேமின் கிழக்கு பகுதி முழுக்க முழுக்க பாலஸ்தீனர்கள் இருக்கும் பகுதியாகும். அங்குதான் புகழ்பெற்ற இஸ்லாமிய புனித தலமாகிய அல்-அக்சா மசூதி அமைந்துள்ளது. அதேபகுதியில் தான் யூதர்களின் புனித தலமாகிய கோயில் மவுண்ட் அமைந்துள்ளது. அங்குதான் யூதர்களின் திரு தூதர் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார் என்று நம்பப்படுகிறது. இவை அனைத்தும் தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றை எல்லாம் இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
பாலஸ்தீனர்கள் பாரம்பரியமாக வாழுகிற பகுதிகளில், ஐ.நா. சபை பாலஸ்தீனம் என்று ஒப்புக் கொண்டிருக்கிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான யூதர்கள் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியின் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பென்ஜமின் நெதன்யாகு அரசு வந்த உடன் இது பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு கொள்கை முடிவாக எடுத்து இஸ்ரேல் அரசு செயல்படுத்துகிறது. இஸ்ரேலியர்களுக்கு இரண்டு நாடுகள் என்கிற ஐ.நா. தீர்மானத்தில் நம்பிக்கை கிடையாது. இரு நாடுகள் அமைவது தங்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எனவே அப்படி அமைகிற பாலஸ்தீனம் ராணுவத்தை வைத்துக்கொள்ளும் உரிமை கொண்டதாக இருக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அமைதி பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் தயாராகவே உள்ளது. ஆனால் இரண்டு நாடுகள் அமைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை இருக்கக்கூடாது. அந்த பேச்சுவார்த்தை எங்கே போய் முடிகிறது என்று பார்க்கலாம் என்கிறார்கள்.
2026ல் பாலஸ்தீன தேர்தல் நடத்தலாம். அந்த தேர்தலில் ஹமாஸ் பங்கேற்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு வெற்றி பெற்ற உடன் எகிப்தியர்கள் பொருளாதார தடைகளையே விதித்தனர். ஹமாஸ் இன்னும் போய்விடவில்லை. இருக்கிறது. அதுதான் நிஜம். ஹமாசுக்கு ஆதரவாக அரபுநாடுகள் எல்லாம் செயல்படவில்லை. அவர்களை கண்டு அஞ்சிய அரபு நாடுகளும் இருந்தன. ஆனால் காசாவில் தற்போது இருக்கும் பிரச்சினை அது குறித்து அல்ல. அங்கு இருக்கின்ற பரிதாபகரமான மனிதாபிமான சிக்கல்களாகும். அது குறித்து உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் கவலை உள்ளது. அமெரிக்காவிலேயே இஸ்ரேலுக்கு முன்பு இருந்த ஆதரவு தற்போது கிடையாது. அவர்கள் மீது அதிருப்தி அதிகமாகவே உள்ளது. இஸ்ரேல் இதற்கு முன்பாகவே போரை நிறுத்தி இருக்க வேண்டும். இந்நிலையில், தற்போதாவது போரை நிறுத்த வேண்டும்.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 22 பிணைக் கைதிகள் உயிருடன் இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் பிணைக்கைதிகளாக இருக்கும் வரை இஸ்ரேல், காசாவின் மீது போரிடுவதற்கு ஒரு தார்மீக காரணம் இருந்துகொண்டு இருக்கும். எனவே பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக கத்தார், எகிப்து, அமெரிக்கா போன்றவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அமெரிக்கா, ஹமாஸ் அமைப்புடன் நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தியது. அதேபோல், இறந்துபோன பிணைக் கைதிகளின் உடல்களும் ஹமாஸ் வசம் உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஹமாசிடம் கிட்டத்தட்ட 51 பேர் பிணைக் கைதிகளாக இருந்த சூழலில் அவர்களில் 22 பேர் உயிருடன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பிணைக் கைதிகள் விவகாரத்தை ஹமாஸ் இயக்கம் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டால், காசா மீது போரிடுவதற்கான எந்த ஒரு தார்மீக உரிமையும் இஸ்ரேலுக்கு இருக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.