தமிழக மக்களால் புரட்சித்தலைவி, அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜெ. ஜெயலலிதா. இவர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஐ போல் மறைந்தும் மறையாத புகழ்பெற்றவர். ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் இன்று.
கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கர்நாடக மாவட்டத்தில் கோமளவல்லி என்ற இயற்பெயர் உடைய ஜெ. ஜெயலலிதா , 1961 ஆம் ஆண்டு முதல் 1980 காலகட்டங்கள் வரை திரைத்துறையில் பயணித்தவர். ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாத இவர், தனது 15 வயதிலேயே கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் 1965 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது இரண்டாவது படத்திலேயே எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன்படி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமும், அதில் இடம்பெற்ற பாடல்களும் இன்று வரையிலும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. அதன் பிறகு அடிமைப்பெண், தேடி வந்த மாப்பிள்ளை, குடியிருந்த கோவில், காவல்காரன் உள்ளிட்ட பல படங்கள் ஜெயலலிதாவிற்கு வெற்றி படங்களாக அமைந்தன. எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், முத்துராமன், சிவக்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் ஜெயலலிதா. திரைத்துறையில் கிட்டத்தட்ட 127 படங்களில் நடித்த இவர் எம்ஜிஆர் உடன் மட்டுமே 28 படங்களில் நடித்திருக்கிறார்.
அதே சமயம் ஜெயலலிதா தமிழ், கன்னடம் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1972 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றிருக்கிறார். இவருடைய நடிப்புத் திறமையின் காரணமாக ‘கலைச்செல்வி’ என்னும் பட்டத்தையும் பெற்றார். மேலும் பல படங்களில் பாடல்களை பாடியதன் மூலம் ஒரு பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றவர்.

அதைத்தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு தமிழக அரசியலிலும் முதல் அடியை எடுத்து வைத்தார். அ இ அ தி மு க வில் கொள்கை பரப்புச் செயலாளராக இடம்பெற்றார். தீவிர அரசியலில் பம்பரமாய் சுழன்று பங்காற்றிய இவரை அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி நேரில் அழைத்து பாராட்டினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அ இ அ தி மு க இரண்டாக பிரிந்தது. அதில் ஒரு அணிக்கு ஜெயலலிதா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அரசியலில் பல இன்னல்களை சந்தித்து 1991 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக முடிசூடினார். மக்களால் அன்போடு ‘அம்மா’ என்றும் அழைக்கப்பட்டார்.
ஒரு பெண்ணாக பெண்களின் அனைத்து பிரச்சனைகளையும் புரிந்து கொண்ட ஜெயலலிதா பெண்களை முன்னிறுத்திய பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகள் கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்,இலவச சானிடரி நாப்கின் திட்டம், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தாலிக்கு தங்கம் திட்டம், மகளிர் சுய உதவி குழுக்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் என எனது மகளின் நலனுக்காக இவர் தொடங்கிய திட்டங்கள் எண்ணற்றவை. பெண்கள் நலத்திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியதன் மூலம் நிலைத்த புகழை பெற்றார்.
இவ்வாறு ஆறு முறை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த செல்வி ஜெ ஜெயலலிதாவிற்கு 5 முறை கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இத்தகைய பெருமைகளை உடைய ஜெயலலிதா, டிசம்பர் 5, 2016ஆம் நாளில் உயிரிழந்தார். இரும்பு பெண்ணாக தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா. ஒரு இரும்பு பெண்மணியாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து தமிழ் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெருமையையும் புகழையும் எண்ணி அவரை வாழ்த்தி வணங்குவோம்.