சே.மெ.மதிவதனி

அறிவுசார் மரபு (Intellectual Legacy)
பொதுவாக, சொத்தினைப் பற்றியோ அல்லது பாகப்பிரிவினை பற்றியோ விவரிக்கும் நேரத்தில், பாரம்பரிய சொத்து அல்லது மரபு வழி என்பதைக் குறிப்பதாக legacy என்ற சொல் பயன்படும். ரத்த சொந்தங்கள் மூலமாகவோ மரபணுரீதியாகவோ ஏற்படும் உறவு முறைகளை அல்லது பாரம்பரியத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. உலக வரலாற்றில் இரத்த சம்பந்தப்பட்ட மரபு ரீதியான பாரம்பரியத்தைக் கடந்து, அறிவுசார் கொள்கைவழி பாரம்பரியத்தைக் கட்டமைத்த ஒரே இயக்கம், திராவிடர் இயக்கம்.

அந்த அறிவுசார் கொள்கைவழி பாரம்பரியத்தின் மையமும் தொடக்கமும் தலைவர் தந்தை பெரியார் தான். வர்ண ஜாதி முறையும் அடிமைத்தனமும் பின்னிப்பிணைந்து இருந்த சமூகத்தில் சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு ஆகியவற்றைப் பரப்புகின்ற சுமை மிகுந்த பணியைத் தந்தை பெரியார் அவர்கள் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் மேற்கொண்டார். நூறாண்டுகள் கடந்தும் இந்த இயக்கம் இருக்கும்; உயிர்ப்புடன் இயங்கும்; இதன் வழித்தோன்றல்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இயக்கத்தின் தீர்மானங்களையெல்லாம் சட்டமாக நிறைவேற்றுவார்கள்; அதன் நூற்றாண்டு விழா லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரை கொண்டாடப்படும் என்ற எவ்வித கனவுக் கோட்டையுடனும் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவிக்கவில்லை.
மாறாக, தானே கொள்கையை வகுத்து, அதைப் பரப்ப ஒரு இயக்கம் கண்டு, அதன் கொள்கைகளை விளக்க பத்திரிகைகள் நடத்தி, அவரே எழுதி, திரும்பும் திசையெல்லாம் பிரச்சாரம் செய்து, தன்னை மட்டுமே நம்பி, மனிதர்களுக்கான இயக்கமாகச் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். யார் ஆட்சிக்கு வந்தாலும் தனது கொள்கையை வெற்றி அடையச் செய்ய குரல் எழுப்பவும் போராட்டங்கள் நடத்தவும், சிறை செல்லவும் இலட்சிய வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லவும் அவர் தயாராகவே இருந்தார்.
ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை எரிக்கும் போராட்டமும் அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களும்தான் மேற்சொன்ன பெரியாரின் கொள்கை வேட்கையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வரலாறு நமக்கு அளிக்கும் மிகப்பெரிய சான்று.”
குற்றங்களில் ஒன்றல்ல; குணங்களில் ஒன்று!
1957ல் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்ததால் திராவிடர் கழகம் பல அடக்குமுறைகளையும் உயிர்ப்பலிகளையும் சந்திக்க நேர்ந்தது. காமராஜர் ஆட்சியாக இருந்தபோதிலும், பெரியாரை எப்படியும் இதைக் காரணமாகக்கொண்டு வீழ்த்திவிட வேண்டும் என்ற ஆரியத்தின் குரல் சட்டமன்றம் வரை ஒலித்தது. பேரறிஞர் அண்ணா அவர்களும் அய்யாவும் பிரிந்து இருந்த காலகட்டம் அது. இருப்பினும், அண்ணா அவர்கள் 1963 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உரையிலேயே, DMK is an offshoot of the DK’ என்று பதிவுசெய்ததற்கு ஒப்ப, கிளைபரப்பி நின்றாலும் வேர் ஒன்றுதானே. வேரின் சுயமரியாதைச் சிந்தனையால் ஊறித்திளைத்த கிளை, சட்டமன்றத்தில் வேரினைத் தாங்கி நின்றது.
அண்ணாவை எள்ளி நகையாட காத்திருந்த கூட்டம் அவரின் ஆழமான பதில்களைக் கேட்டு அலறியது. தேசிய அவமதிப்பு தடைச் சட்டத்தைத் தாக்கல்செய்த அன்று, ‘தேசியக்கொடியும் சட்டமும் அவமதிக்கப்பட்டால், அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் பக்தவத்சலம் கருதுவதுபோல் பெரியாரை அடக்க நீங்கள் கடுமையான சட்டம் கொண்டுவந்தால், மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதையும் தயவுசெய்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
மக்களின் மனதில் தந்தை பெரியார் என்ற தலைவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும் பெரியாருக்கு இருந்த மக்கள் செல்வாக்கையும் பதிவுசெய்தார். தொடர்ந்து, தந்தை பெரியாரின் நோக்கத்தில் உள்ள நியாயத்தை விளக்கிவிட்டு, இறுதியில் ‘சட்டத்தை நிறுத்திவையுங்கள்; இல்லையென்றால், அவர் என்ன சொல்லுவார் என்று எனக்குத் தெரியும். எண்பது வயதாகிவிட்டது. மூன்று வருடங்கள் தானே சிறை, போகிறேன் என்ன நட்டம் என்பார்’ என்று பேசினார். சிறைக்கு அஞ்சா பெரியாரின் போர்க்குணம் பற்றி நன்கு அறிந்த தளபதியாக விளங்கிய அண்ணர், அவர் வழியிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த நேரத்திலும் தமிழர் உரிமை, தமிழ் மொழி உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி, தனது தம்பிகளை சிறைக்குச் செல்ல தயாராக இருங்கள்! என்றே அழைத்தார்.
தந்தை பெரியாருக்கு வலி குறைந்தது! தமிழருக்கு வழி பிறந்தது!
சிறைக்குச் செல்வதில் மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்த பிறகும் தந்தை பெரியாரின் சீரிய சீர்திருத்தக் கருத்துகளுக்கு சட்ட அங்கீகாரம் பெறுவதில் அறிஞர் அண்ணா முழு மூச்சில் செயல்பட்டார். தங்களின் இருப்பை தமிழர்களின் இல்லத்தில் நிரந்தரமாக நிறுத்திக்கொள்ளவும், சுயமாக சிந்திக்காமல் வேதம், மந்திரம், வர்ணம், பாலின பேதம் என்ற கட்டுக்குள் நிரந்தர அடிமைகளாகத் தமிழர்களை மாற்றவும், திருமணச் சடங்கு – சம்பிரதாயங்களை மிக ஆழமாக ஆரியம் பதியவைத்திருந்தது. அதனை நுட்பமாக உணர்ந்து, அடிமை விலங்கொடிக்க அறிவு விடுதலை முக்கியம் என்ற நிலையில் சுயமரியாதைத் திருமணங்களைத் தந்தை பெரியார் அறிமுகம்செய்து, ஆயிரக்கணக்கில் நடத்திக்கொண்டிருந்தார்.
மக்கள் மையப்படுத்தவும் அடுத்த தலைமுறைக்குச் சென்றடையவும், பண்பாட்டுப் படையெடுப்பைத் தகர்த்தெறியவும் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து, இனிவரும் திருமணங்கள் மட்டுமல்ல இச்சட்டம் வருவதற்கு முன்பு நடைபெற்ற திருமணங்களும் செல்லும் என்ற வரலாற்றுச் சாதனையை அண்ணா நிகழ்த்திக் காட்டினார்.
உயரப் பறங்கள் என்பது திராவிடம்; உயர்ந்தே விடாதீர்கள் என்பது ஆரியம்! அப்படி தமிழ்நாட்டுப் பிள்ளைகள் உலக நாடுகளுக்கு பயணித்து, உலகச் செய்திகளை அறிந்துவிடக் கூடாது என்ற உணர்வுடன் இன்றளவும் தமிழுக்கு எதிராக ஆங்கிலத்தை நிறுத்தும் சூழ்ச்சியை அவர்கள் செய்யத் தவறுவதே இல்லை. ஆனால், பரந்துபட்ட பார்வையுடனும் பகுத்தறிவு நோக்குடனும் தமிழுக்கு எதிராக இந்தியும் சமஸ்கிருதமும்தான் செயல்பட்டுவந்திருக்கிறது என்பதை தந்தை பெரியார் தமிழ்ச் சமூகம் முழுவதும் பரப்புரை செய்தார்.
முதல் இந்தி எதிர்ப்புத் தீயை பெரியார் தான் பற்றவைத்தார். அந்தத் தீ பற்றி அணையும் நெருப்பு அல்ல; அணையாத கொள்கைச் சுடர் என்பதை உணர்த்தும் வகையில் பேரறிஞர் அண்ணா இரு மொழிக் கொள்கைதான் இனி தமிழ்நாட்டில் என்று சட்டம் தந்தார்.
‘தமிழ் தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சிசெய்து வெற்றிபெற்று விட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ எனது கழகத்தினுடையாவோ என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை’ என்று தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயரிடும் தனது நோக்கத்தினை உருக்கமாகப் பதிவிட்டார்.
தமிழ்நாடு வாழ்க ! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என்று சட்டமன்றத்தில் பெரியாரின் நோக்கத்தை மட்டுமின்றி தமிழர்களின் கனவையும் ஒருங்கே நனவாக்கிக் காட்டினார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.
திரைப்படங்களின் தொடக்கக் காட்சிகளில் சண்டையிட்டுக் கொண்ட இருவர், இறுதிக் காட்சியில் அவர்கள் இருவரும் சேர்ந்துதான் அனைத்து காரியங்களையும் செய்தார்கள் என்று தெரியவருவது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுப்பது போல், பிரிந்து இருக்கிறார்கள் என்று நினைத்தோம், சேர்ந்தே இவ்வளவையும் சிந்தித்து இருக்கிறார்கள் என்று ஆரியத்தை அதிர்ச்சி அடையச் செய்த சம்பவங்கள் இவை.
தந்தை பெரியார் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நேரம், சென்னை சட்டமன்றத்தில் தியாகி மானியம் பற்றி ஒரு கேள்வி-பதில் எழுகிறது. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் முனுஆதி அவர்கள், ‘தந்தை பெரியார் அவர்களுக்கும் இந்த அரசு தியாகி மானியம் அளிக்குமா?’ என்று ஒரு துணைக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள், “இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்டுள்ள காணிக்கையாகும்” என்று குறிப்பிட்டார்.
‘சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே! என்ற நூலின்மூலம் இச்செய்தியை நமக்கு அழகுற கொண்டுசேர்த்த தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மேலும் நெகிழ்ச்சியான ஒரு செய்தியை அந்நூலில் பதிவுசெய்கிறார். மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த தந்தை பெரியார் அவர்களிடம் சட்டமன்றத்தில் நடந்தவற்றை தெரிவித்தபோது, படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து மகிழ்ச்சியுடன் “இதனால் என் பாதி வலி குறைந்தது” என்று மனப்பூர்வ மகிழ்ச்சியையும் தெரிவித்ததன்மூலம், தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு ஒப்புதல் அளித்தார் என்கிறார். ஆம், பெரியாருக்கு வலி குறைந்தது; நமக்கு வழி பிறந்தது!
வெற்றுக் கூச்சல்கள் அல்ல; கொள்கை வெற்றிகள்!
தந்தை பெரியார் அவர்கள் ஆழமாகப் பற்றி நின்ற ‘சுயமரியாதை’ எனும் வேரினில் இருந்து வெளிவந்த கிளையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் அதனைச் சரியான இடத்தில், சரியான நேரங்களில் அந்தக் கொள்கையின் முகமாகத் தங்களைப் பொருத்திப் பார்க்கத் தவறியதே இல்லை. நாம் பேசும் நூறாண்டுப் பெருமையோ, 75 ஆண்டுக்கால பெருமிதமோ வெற்றுக்கூச்சல்களால் நிறைந்தது அல்ல; மாறாக, கொள்கை வெற்றிகளால் நிறைந்தது.
அரசின் கொள்கை முடிவுகள் தொடங்கி சட்டமன்றங்களில் நிறைவேறும் சட்டங்கள் வரை தந்தை பெரியார் என்ற தத்துவத் தலைமை வழங்கிய கொள்கையைச் சுற்றியே அமைந்தன. அவை மட்டுமின்றி உச்சரிக்கும் சொற்களிலும் பேசும் பேச்சிலும்கூட அண்ணாவுக்குப் பின் வந்த கலைஞர் அந்த நோக்கத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.
“பெரியார் அவர்கள், கடவுளை நம்புவது முட்டாள்தனம் என்கிறார்கள். நாங்கள், ‘வணங்குவதுதான் வணங்குகின்றீர்கள் தமிழில் பாடி வணங்குங்கள்’ என்று கூறுகின்றோம். அதற்குச் சட்டமும் கொண்டு வந்திருக்கிறோம். இதை எதிர்த்துப் பேசுகிறவர்களும் இங்கு இருக்கிறார்கள். தமிழை வேண்டாம் என்று கூறுகிற கடவுளுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை? என்று கேட்கிறேன்.” மேற்சொன்ன கருத்து ஒரு இயக்கத்தவராலோ அல்லது கட்சியின் உறுப்பினராலோ கூறப்பட்டது அல்ல. 1972 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் மாநாட்டில் முதலமைச்சராகப் பங்கேற்ற கலைஞர் அவர்களின் உரையின் ஒரு பகுதிதான் இது.
தமிழ் மொழியில் அர்ச்சனை என்பது மொழி சம்பந்தப்பட்ட சிக்கலோ கடவுள் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ மட்டுமல்ல. மாறாக, பண்பாட்டுப் படையெடுப்பின் ஓர் அங்கமாகத் தெருக்களில் தொடங்கி கோயில் கருவறை வரை சமஸ்கிருதமயமாக்கப்பட வேண்டும் என்ற ஆரிய கோட்பாட்டிற்கு எதிரான சமத்துவ நடவடிக்கை ஆகும். மேலும், அந்த உரையில், ‘அர்ச்சகராக வருபவர்கள் அதற்குரிய பயிற்சி பெற்றால் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் அர்ச்சகராகலாம் என்று நாம் சட்டம் கொண்டுவந்தது பற்றிய வழக்கில் ‘ஆகம விதிகளின்படி இல்லாத நடவடிக்கை செல்லாது’ என்று சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியிருக்கிறது.
நான் மத்திய ஆட்சியை இந்த மாநாட்டின் வாயிலாக வலியுறுத்திக் கேட்கிறேன்; ஜாதிக்கு ஆதரவளிக்கும் இந்தப் பகுதியைத் திருத்தி, எந்த ஜாதிக்காரர்களாக இருந்தாலும் உரிய பயிற்சி பெற்றால் அர்ச்சகராவார் என்று அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். அப்படி ஆகின்ற பதிலில்தான் நமது தன்மான உணர்ச்சி அடங்கி இருக்கிறது’ என்றார்.

அவரின் சொற்களில் உள்ள கூர்மையைக் கவனித்தால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் சாதி ஒழிப்புக்கான முயற்சி என்பது மட்டுமின்றி, அதனுள் தன்மான உணர்ச்சியும் தந்தை பெரியார் தமிழ் மண்ணில் விதைத்த சுயமரியாதை உணர்வும் தென்படும். ஆரியம் புகுந்த இடங்களில் எல்லாம் அதனை எதிர்த்துக் குரல் எழுப்ப முடிந்த திராவிடத்தால், தீண்ட முடியாத இடமாகக் கோயில் கருவறை தான் இருந்தது.
ஆகமம், விதிகள், ஆச்சாரம் என்று ஆயிரம் வியாக்கியானங்களை எடுத்து இயம்ப ஆரியம் தனது கூலிகளைத் தயார்ப்படுத்திய நேரத்தில், ‘அனைவருக்கும் அனைத்தும் என்ற பெரியாரின் தன்மான வேரினை கலைஞர் தாங்கிநின்று சட்டம் இயற்றினார். கடவுள் நம்பிக்கை கொண்ட பலருமே கருவறைக்குள் செல்லவேண்டியது நமது வேலை அல்ல என்று எதிர்த்து நின்றார்கள்: வாக்கு அரசியலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தவும் அவர்கள் தயங்கவில்லை. தேர்தல் அரசியலில் வாக்குகளைக் கடந்து, இதனை சாதி ஒழிப்புக்கான – தன்மான உணர்வுக்கான ஒரு முன்னெடுப்பாக இதைக் கலைஞர் கருதினார்.
கம்பீரத்துடன் நின்ற பெரியாரின் பேரன்!
“பல காலமாக ஒரு வளர்ந்த கட்சியில் இருந்தவர்கள் புதிதாகக் கட்சி துவக்கியவரைப் பார்த்து, ‘உனக்கு ஒரு கட்சியா?’ என்று கேட்பார்கள். அதன் பிறகும் அந்தக் கட்சி வளர்ந்தால், ‘இன்னும் எத்தனை நாளைக்கு வளரப்போகிறாய்? என்பார்கள். அதன் பிறகும் வளர்ந்தால், இன்னுமா அந்தக் கட்சி என்பார்கள். மேலும் வளர்ந்தால், அந்தக் கட்சி என்ன ஆகப்போகிறது பாருங்கள்’ என்று ஆரூடம் கூறுவார்கள், அதையும் தாண்டி வளர்ந்தால், அந்தக் கட்சியும் இருந்துவிட்டு போகட்டும்’ என்பார்கள்.
இப்படி அரசியல் கட்சிகளுக்குப் பல கட்டங்கள் உண்டு அவற்றில் நாம் இப்பொழுது சாபம் பெறும் கட்டத்தில் இருக்கிறோம் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 1961ல் குறிப்பிட்டார்.
புதிதாக ஆரம்பிக்கப்படும் கட்சிகளின் நிலையைக் குறித்து அண்ணா அவர்கள் கூறிய கருத்தாக இது இருப்பினும், கட்சி தொடங்கியபோது மட்டுமின்றி, பல வெற்றிகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்து, ஆறு முறை ஆட்சியில் அமர்ந்த பின்னும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது ஒன்றுதான் நோக்கம் என்று அதையே குறிக்கோளாக, கொள்கையாகக் கொண்டு பழையவர்களும் புதியவர்களும் பக்கவாட்டில் வந்து நிற்க, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று ஒரே நேர்க்கோட்டில் நாங்கள் பயணிக்கிறோம் என்று இன்றைய முதல்வர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் சூளுரைக்கிறார்.
அதே உணர்ச்சியுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆம் ஆண்டு நிறைவினைக் கருப்பு சிவப்புக் கொடியுடன் கடமையாற்றும் உடன்பிறப்புகளை அடித்தளமாய்க் கொண்டு கொண்டாடி மகிழ்கின்றார். தமிழர் கழகம் என்று பெயரிடாமல், ‘திராவிடர் கழகம்’ என்று பெயரிட்டதற்கு தந்தை பெரியார் கூறிய காரணத்தையும், செல்லும் இடங்களில் எல்லாம் ‘திராவிட மாடல்‘ ஆட்சிதான் நமது ஆட்சி என்று முதல்வர் கூறுவதிலும்தான் தமிழ்நாட்டின் அரசியல் அடங்கியிருக்கிறது. அரசியலைக் கடந்த கொள்கை உணர்வும் ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும், ஆரிய திராவிட போரின் வெளிப்பாடும் அதில் புலப்படுகிறது.
சொற்களில் மட்டுமின்றி, உலக அரங்கில் தந்தை பெரியார் என்ற வேரினைத் தாங்கி நிற்கும் கொள்கைப் பேரனாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 4, 2025 அன்று முதல்வர் உரையாற்றினார்.

‘தமிழ்நாட்டு முதலமைச்சர், தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான தி.மு.க. தலைவர் என்ற தகுதியோடு மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு நிற்கிறேன்’ என்ற அவரின் குரல், தந்தை பெரியாரின் கொள்கை வெற்றிக்கான மற்றுமொரு மணிமகுடம்.
இந்தியாவின் இன்றைய அரசியல் சூழலில் பாசிச இருள் தமிழ்நாட்டை எப்படியும் சூழ்ந்துவிடலாம் என்ற நோக்கத்தில், பல கட்டமாக வலம் வருகின்ற நேரத்தில், சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு, அறிவியல் நோக்கு, மதச்சார்பற்ற அரசியல், பெண்கள் முன்னேற்றம், என்பதில் கவனம் கொண்டு, பால் பேதமற்ற ரத்த பேதமற்ற மனிதநேய உணர்வுடன் இந்த ஆட்சி செயல்படும் என்பதற்கான சூளுரைதான் அவரின் உரை. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியாரின் பிறந்தநாளை ‘சமூக நீதி நாளாக’ அறிவித்தது தொடங்கி, 21 மொழிகளில் தந்தை பெரியாரின் நூல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்ற திட்டம் தொட்டு, உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை நிறுவியது வரை வேரினைக் கிளை தாங்கிநிற்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
அடுத்த நூற்றாண்டுக்கும் திராவிடப்படை தயார்!
75 ஆண்டுகளை நிறைவுசெய்தோம் என்பது அல்ல செய்தி, 76 ஆம் ஆண்டை வீரியத்துடன் ஆரம்பிக்கிறோம்; இன்னும் நூற்றாண்டுகள் இது தொடரும் என்பதை உறுதிபட கூறுவதற்காகத் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை, கொள்கை உணர்வுகொண்ட இளைஞர்களை உருவாக்குதல், தேர்ந்தெடுத்த இளைஞர்களைக் கொள்கை வழியில் பேச்சாளர்களாகக் கூர்தீட்டுதல், களமும் தளமும் தயார் என்பதை விளக்க சமூக வலைதளப் பயிற்சி என்று அடுத்த நூற்றாண்டுக்கான செயல் திட்டத்தோடு நான்காம் தலைமுறையாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் களம் காண்கிறார். கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்று, தனது பேச்சின் ஒரு சொல்லிலிருந்துகூட பின்வாங்க மாட்டேன் என்று உறுதிபட உரைப்பது தந்தை பெரியார் என்ற துணிச்சல்மிகு வேரினை இன்னும் நூறாண்டு கிளைகள் தாங்கிநிற்கும் என்பதற்கான நம்பிக்கை ஒளி!
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!


