spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!

கரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!

-

- Advertisement -

கரூர் துயர சம்பவம் குறித்து திமுகவை சேர்ந்த யாரிடமும் சிபிஐ விசாரிக்காததன் மூலம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாட்டை மக்கள் யாரும் நம்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில் சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு, உயர்நீதிமன்ற மேற்பார்வையிலான எஸ்ஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கை என்பது சாத்தியமில்லாதது. சிபிஐ விசாரணை 4-5 வாரமாக நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி வரப் போகிறார். சிபிஐ அதிகாரி தாகூர் வந்துவிட்டார்.

கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் என்றும், சாட்சியங்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. இந்த வழக்கில் கரூர் போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரை வைத்துதான் ஓடுகிறது. விஜய் தரப்பில் கவுன்டர் எப்.ஐ.ஆர் அளிக்கவில்லை. இந்த எப்ஐஆர் தற்போது திருச்சி நீதிமன்றத்திற்கு வந்துவிட்டது. வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

கரூர் துயர வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

கரூர் சம்பவம் நடைபெற்று 90 நாட்களுக்குள்ளாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாக வேண்டும். டிசம்பர் 27க்குள் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே குற்றப்பத்திரிகையை ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி இறுதி செய்திட வேண்டும். எனவே இந்த நேரத்தில் வழக்கை எஸ்.ஐ.டிக்கு மாற்றுவது சாத்தியமில்லாதது. அதேநேரத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாட்டை சேர்ந்தவர், சேராதவர் என்று பிரிப்பது தவறு. அதை மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். ஆனால் சிபிஐ விசாரணை ரத்து, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணைக்கு உத்தரவிடுவது சாத்தியமற்றது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்படும் என்றுதான் நினைக்கிறேன்.

ஐபிஎஸ் அதிகாரிகளை, சொந்த மாநிலத்துக்கார்கள், வெளி மாநிலத்துக்காரர்கள் என்று பிரிப்பதே தவறு. அதற்கான முடிவு வெகு விரைவில் வந்துவிடும். அதற்குள்ளாக கருர் விவகாரத்தில் விசாரணையே முடிந்துவிடும். சிபிஐ ஆரம்பத்தில் விசாரிக்க தொடங்கியதே தாமதம் தான். அதற்கு முன்னதாகவே எஸ்.ஐ.டி எல்லாவற்றையும் விசாரித்துவிட்டது. அந்த ஆதாரங்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

கரூர் விவகாரம் தொடர்பான விசாரணையில் விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் தான் புதிய விஷயமாகும். கரூர் போலீஸ், எஸ்ஐடி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை கேட்டு சம்மன் அனுப்பியபோது விஜய் தரப்பு வழங்கவில்லை. தற்போது மூன்றாவதாக சிபிஐ சம்மன் அனுப்பியதும் வழங்கினார்கள். சிபிஐக்கான ஆதாரங்கள் என்பது கரூர் போலிசாரும், எஸ்ஐடியும் கொடுத்தது தான். அதை தாண்டி அவர்களிடம் ஆதாரங்கள் கிடையாது. சிபிஐ தரப்பில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சில பேரிடம் கூடுதலாக விசாரணை நடத்தி இருப்பார்கள். அது கூடுதல் சாட்சிகளாக இருக்கும். அவர்களில் எத்தனை பேர் சாட்சிகளாவர் என்பது தெரியாது.

தவெக மற்றும் அதிமுக தரப்பில் அரசியல் ரீதியாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அதிமுக சார்பில் சிபிஐயிடம் நேரில் ஆஜராகி அதை சொல்லவில்லை. அதேவேளையில் திமுக தரப்பிலும் யாரிடமும் விசாரிக்கவில்லை. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் யாரும், செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்களை திரட்டி வந்து கலவரம் செய்ததாக பரப்பப்பட்ட சதிக் கோட்பாடுகளை நம்பவில்லை என்பதுதான் அர்த்தமாகும். கூட்டத்திற்கு முதல் நாள் அனுமதி வழங்கியபோது அதில் எப்படி சதிக் கோட்பாடு இருக்கும்?

விஜய், அதிமுக – பாஜக கூட்டணிக்கு சென்றிருந்தால், அவர்கள் அரசியல் ரீதியாக கையில் எடுத்து அடுத்தக்கட்டத்திற்கு சென்று இருப்பார்கள். விஜய், செல்லாததால் அவர்கள் இது தவெக பொறுப்பு என்று ஒதுங்கிவிட்டனர். எனவே இந்த விவகாரம் பழைய நிலையை நோக்கித்தான் செல்கிறது. விஜய்க்கு அரசியல் ரீதியாக எந்த ஆதரவும் கிடையாது. மூன்றாவதாக கூட்டநெரிசல் சம்பவத்தில் சிபிஐ புதிதாக எதையும் கண்டுபிடித்ததாகவும் தெரியவில்லை. புதிதாக கண்டுபிடிக்க உண்மையில் விஷயம் இருக்க வேண்டும் அல்லவா? கூட்ட நெரிசல் சம்பவத்தில் அதிகபட்சமாக காவல்துறை பாதுகாப்பை இன்னும் அதிகரித்து இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும்.

ஒரு நபர் ஆணையத்தின் வரம்புகளில் எதிர்காலத்தில் இதுபோன்ற கூட்டநெரிசல் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சிபிஐ விசாரணை என்பது, குற்ற விசாரணைதான். ஒருநபர் ஆணையம் போட்டால் தான் இந்த வழிமுறைகளை சொல்ல முடியும். ஆனால் அதற்கு வழியில்லை. அஜய் ரஸ்தோகி வழக்கை மேற்பார்வையிடும் நபராக மட்டும்தான் இருக்கிறார். அவர் எந்த ஆலோசனைகளையும் வழங்கப் போவது கிடையாது. அப்போது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணைகள் முடிந்த பிறகு நீதிமன்றம் வேண்டுமெனில் எந்த உத்தரவும் பிறப்பிக்கலாம். ஆனால் இதற்கு பல மாதங்கள் ஆகும். தேர்தலுக்கு முன்பாக எந்த உத்தரவும் வரப்போவது கிடையாது. அப்படி வந்தாலும் அது, விஜய்க்கு தான் அரசியல் சாதகம். எனவே எதிர் தரப்பு அடக்கி வாசிக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ