நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association of Democratic Reforms)தெரிவித்துள்ளது. இந்த வித்தியாசம் ஏதோ 10 ஆயிரம், 20 ஆயிரம் வாக்குகளில் அல்ல, ஏறத்தாழ 6 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
தேர்தலில் 362 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தமாக பதிவான வாக்குகளை விட 5,54,598 வாக்குகள் குறைவாக எண்ணப்பட்டதாக அதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 5 லட்சம் வாக்குகள், வாக்கு எண்ணும் அதிகாரிகளால் எண்ணப்படாமல் விடுபட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. 176 தொகுதிகளில், பதிவான வாக்குகளைவிட, 35,093 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டதாகவும் ஏடிஆர் தரவுகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கையின் இறுதித் தரவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடாமல் இருப்பது சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிகாந்த் செந்தில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் வாக்களிக்கும் இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 14,30,738. ஆனால், 14,13,947 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. மொத்தமாக 16,791 வாக்குகள் எண்ணப்படாமல் விடுபட்டுள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்ட விவகாரத்தில், முதலிடத்தில் இருப்பது அசாம் மாநிலத்தின் காரிம்கஞ்ச் தொகுதி. இங்கு பாஜக வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை விட 18,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு மொத்தமாக 11,36,538 வாக்குகள் பதிவாகியிருக்க , எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையோ 11,40,349 ஆக உள்ளது. அதாவது, 3811 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 542 தொகுதிகளில் அம்ரேலி, அட்டிங்கல், லட்சத்தீவு மற்றும் டாமன் டையூ ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டுமே பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. அதாவது குளறுபடிகளும் காணப்படவில்லை. எஞ்சியுள்ள 538 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பதிவான மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையேயான வித்தியாசம் என்பது 5,89,691 வாக்குகள் வரை இருப்பதாக ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.
Discrepancies between the votes cast and the votes counted in the 2024 Lok Sabha election: Multiple Perspectives#ADRReport: https://t.co/rSEYBMz5iq
To donate to ADR, click here: https://t.co/lK9cQpq1Ui#LokSabhaElections2024 pic.twitter.com/slCVCCLu63
— ADR India & MyNeta (@adrspeaks) July 30, 2024
இந்நிலையில் இந்த குளறுபடி குறித்து ஏடிஆர் நிறுவனர் ஜக்தீப் சோக்கர் தெரிவித்துள்ளதாவது, “தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரங்கள் பதிவான வாக்குககளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காட்டுகிறது. இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவதில் மிதமிஞ்சிய தாமதம், பிரிக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடி புள்ளிவிவரங்கள் முழுமையான எண்ணிக்கையில் இல்லாதது போன்றவை தேர்தல் முடிவுகளின் மீது பொதுமக்களின் சந்தேகத்தை எழுப்பியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், 2019 தேர்தலின் போதும் இதேபோன்றதொரு முறைகேடு நிலையில், அதுதொடர்பாக ADR அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்து. அந்த மனு மீது இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை. அப்போதே முறைகேடுகளை தீர்த்து உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது எனவும், இதனால் 2024 மக்களவைத் தேர்தல் வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை தேர்தல் ஆணையம் மக்கள் தேர்தலின் முழு தரவுகளை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி, வாக்காளர் வாக்குப்பதிவு விபரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், “வாக்காளர்களின் வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என கூறியது. இந்நிலையில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும், வாக்காளர்கள் அளித்த வாக்குகளிலும், எண்ணிக்கையிலும் முரண்பாடுகள் உள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான குரேஷி தெரிவித்துள்ளார்.