இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடினார். அந்த உரையாடலுக்கு பிறகு இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்கா 50 சதவீதம் வரி விதிப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து முன்னாள் ஐ.நா. அதிகாரி ஐ.நா.கண்ணன்
பிரபல தொலைக் காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:- பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சீனாவுக்கு சென்றுள்ளார். நெருக்கடி காரணமாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசியுள்ளனர். இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே 60 ஆண்டுகளாக எல்லையில் சிக்கல் நிலவி வருகிறது. 1950களில் அக்சாய் சின் பகுதியில் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா கைப்பற்றியிருந்தது. லடாக்கில் 38 ஆயிரம் கிலோ மீட்டர் பகுதியையும் கைப்பற்றி உள்ளது. 2020ல் கல்வானில் மோதல் நடைபெற்றது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக வந்துள்ளதால் பல நாடுகள் நெருக்கடியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது இந்தியா. இந்தியா – அமெரிக்க நாடுகள் நெருங்கிய நண்பர்கள் என்று நினைத்தோம். தற்போது நடப்பது எல்லாம் மிகவும் விச்சித்திரமாகவும், எதிர்பாராத விதமாகவும் இருக்கிறது. நம்மை மட்டும் தனிமைப்படுத்தி, 50 சதவீத வரி விதித்துள்ளார். இதே அளவு வரி விதிப்பு பிரேசிலுக்கு மட்டும்தான் உள்ளது. இந்தியாவுக்கு இது ஒரு மிகப்பெரிய நெருக்கடியான நிலையாகும்.

அமெரிக்கா என்கிற மிகப்பெரிய சந்தை நமக்கு எட்டாத தூரத்துக்கு சென்றுவிட்டது. சீனாவில் இருந்து கிட்டத்தட்ட 90 பில்லியன் டாலருக்கு மேலான பொருட்களை நாம் வாங்குகிறோம். ஆனால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு வல்லமை இந்தியாவுக்கு இல்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் 2017ஆம் ஆண்டு இந்திய உறுப்பினர் ஆனது. அதேநேரத்தில் பாகிஸ்தானும் அந்த அமைப்பின் உறுப்பினர் ஆகியது. பாகிஸ்தான் இருக்கின்ற அந்த அமைப்பு ஒரு பொது இலக்கை நோக்கி செல்லும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. டிரம்பினுடைய இரண்டாம் வருகைக்கு பிறகு, உலக நாடுகளின் தலைவர்கள் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய நிகழ்வு இதுவாகும். அதற்கு நம்முடைய பிரதமர் போக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். அதற்கு முன்னதாக சீன தூதர் 2 நாட்கள் வந்து தங்கியிருந்தார்.சீனர்கள், நமக்குள் இருக்கும் எல்லைப் பிரச்சினை நம்முடைய உறவை தீர்மானிக்கும் விஷயமாக இருக்கக்கூடாது. அதை தள்ளி வைத்துவிட்டு நாம் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதையே தான் நாமும் விரும்புகிறோம்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக திருப்பூரில் மட்டும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், சூரத்திலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய 3 நாடுகளும் இணைந்து அமெரிக்காவை எதிர்த்து பெரிய அளவில் பொருளாதார உறவுகளை வளர்த்துவிட முடியாது. அதற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும். டிரம்ப் இன்னும் 3.5 ஆண்டுகளில் போய்விடுவார் என்று எலான் மஸ்கே சொல்லியுள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு கெட்டுபோய்விட்டதாக நாம் நினைக்கக்கூடாது. இந்தியாவுக்கு அமெரிக்கா தான் நிரந்தர தோழன் என்பது என்னுடைய கருத்தாகும். நம்முடைய 40 ஆயிரம் கிலோ மீட்டர் சதுரபரப்பை பிடித்து வைத்துள்ள சீனா, நம்முடைய நிரந்தர நண்பனாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.
இந்தியா – சீனா இடையே நட்புக்கு வாய்ப்பு இல்லை. முதலில் ஒரு முறை ஏமாந்து விட்டோம். 1962க்கு முன்பாக சீனா நம் சகோதரர்கள் என்கிற முழக்கத்தை முதன் முதலாக நாம் தான் வைத்தோம். அவர்கள் சிரித்துக்கொண்டே 30 நாட்கள் படையெடுத்தனர். நாம் அவர்களை தடுப்பதற்கு திராணி அற்று நின்றிருந்தோம். அவர்களே போனால் போகட்டும் என்று திரும்பி போய்விட்டார்கள். இதெல்லாம் வரலாறு காட்டுகிற நிகழ்ச்சி. இதில் இருந்து நாம் படிப்பினையை கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகுதான் நமது ராணுவம் பலப்படுத்தப்பட்டது. அதில் மனமுடைந்த பிரதமர் நேரு, மறைந்துவிட்டார். முன்பு செய்த தவறை நாம் திருப்பி செய்யக்கூடாது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சர்வதேச ஒழுங்கை சிதைத்துவிட்டார். அந்த சிதைவுகளில் இருந்து புதிய ஒழுங்கு உருவாகி கொண்டிருக்கிறது. ரஷ்யர்களும், சீனர்களும் பெரிய நண்பர்கள் கிடையாது. இது காலத்தின் கட்டாயம். ரஷ்யாவிடம் நிறைய எரிசக்தி, இயற்கை வாயுக்கள் உள்ளது. உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோரான சீனாவுக்கு அது தேவை. அடுத்தபடியாக அந்த எரிசக்தி இந்தியாவுக்கு தேவைப் படுகிறது. எனவே ரஷ்யாவின் நட்பும், ஆதரவும் நமக்கு தேவையாகும். செயல்தந்திர சுதந்திரம் நமக்கு வேண்டும். நாம் எந்த ராணுவ அணிகளிலும் இருந்தது கிடையாது. அதனால் நம்மால் அனைத்து நாடுகளுடனும் பழக முடியும். யாரை நம்பியும் நாம் போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு அப்படியான தேவை உள்ளது. இப்படியான நெருக்கடியை டிரம்ப் உருவாக்கி இருக்கிறார். அதை ஒவ்வொருவரும் தங்களுடைய பார்வையில், இதை எப்படி சாதமாக மாற்றிக் கொள்வதாக பார்க்கிறார்கள்.

புதிய உலக ஒழுங்கில் ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் இணைந்து எந்த வித மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இன்றைய கால கட்டத்தில் உலகில் ஒரு வல்லசுதான் இருக்க முடியும். ஆனால் இன்னும் 50 ஆண்டுகளில் பல வல்லரசுகள் இருக்கக்கூடும். அந்த பலமுனை உலகில் இந்தியாவுக்கும் ஒரு இடம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சீனா ஏற்கனவே அந்த இடத்திற்கு வந்துவிட்டது. நாம் அந்த இடத்திற்கு செல்ல விரும்புகிறோம். ஆனால் அதற்கு இன்னும் நிறைய நாட்கள் ஆகும். அதற்கு நிறைய உழைப்பும் தேவை. சீனாவில் ஜனநாயகம் இல்லை என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆதாயமாகும். அவர்கள் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அதை அப்படியே செயல்படுத்த ஆட்கள் உள்ளனர். சீன கம்யூனிசம் என்பது மிகவும வித்தியாசமானது. டெங்ஜீயோ பிங் வந்த பிறகு பொருளாதாரத்தை தனியாருக்கு திறந்துவிட்டார். இன்றைக்கு சீனாவில் வறுமையில் இருப்பவர்கள் யாரும் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. பல கோடி மக்களை வறுமையில் இருந்து மேலே கொண்டு வந்துவிட்டனர். சீனா உலகின் தொழிற்சாலையாக மாறிவிட்டது. இந்தியா சேவைத்துறையில் முன்னணியில் உள்ளது. ஆனால் அதற்கான தேவை இருக்கும் வரைதான் அதை செய்ய முடியும். பிரதமர் மோடியின் இந்த பயணம், 3 தலைவர்களும் 3 கோணங்களில் ஒரு முடிவு எடுத்து செல்கின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


