செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிகழ்வை நிறுத்த வலியுறுத்தினார். ஆனால் அதற்கு செங்கோட்டையன் மறுத்துவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்தும், கட்சியில் அடுத்து நடைபெற உள்ள அதிரடி மாற்றங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- செங்கோட்டையன், அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலம் முதல் அதிமுகவில் இருப்பவர் செங்கோட்டையன். 9 முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அந்த காலகட்டத்தில் ஜனதா தளம் கட்சியில் ஒன்றிய செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியை, அதிமுகவுக்கு அழைத்து வந்தவர் செங்கோட்டையன் தான். பிற்காலத்தில் அவரை சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக்கி விட்டார். எடப்பாடி பழனிசாமி அமைச்சர் ஆன போதும், செங்கோட்டையனை மீறி எதுவும் பேச மாட்டார். செங்கோட்டையனை பார்த்து, நாம் இப்படி எல்லாம் வர மாட்டோமா? என்று கனவு கண்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. தற்போது அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று இன்று பலரும் சொல்கிறார்கள். அரசியலில் ஒருவர் நம்மை வளர்த்துவிட்டார் என்பதற்காக அவருடனே செல்ல வேண்டிய கட்டாயம் இல்லைதான். ஆனால், மனிதர்களுக்கு விசுவாசம் என்ற ஒன்று அவசியம் இல்லையா?
இதனிடையே, செங்கோட்டையனுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ” செய்தியாளர் சந்திப்பில் என்ன பேச போகிறீர்கள்?” என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், “நான் என்ன வேண்டும் என்றாலும் பேசுவேன். அதை எப்படி உங்களிடம் சொல்ல முடியும். உங்கள் கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு”, என்று தவிர்த்து விட்டார். பின்னர் மீண்டும் செங்கோட்டையனை தொடர்பு கொண்ட நிர்மலா சீதாராமன், “தயவு செய்து செய்தியாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று சொல்லியுள்ளார். ஆனால் செங்கோட்டையன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழலில் நேற்று செங்கோட்டையனின் வீட்டிற்கு சாரை சாரையாக ஆட்கள் வந்து கொண்டிருந்தனர். தன்னெழுச்சியாக ஆண்களும், பெண்களும் வந்து கொண்டிருக்கின்றனர்.
அதிமுக நிச்சயமாக தற்போது கலகலத்து போய் கிடக்கிறது. அது ஒருங்கிணைந்து, அதற்கு செங்கோட்டையன் தலைமை ஏற்று ஒன்றுபட்ட அதிமுக வரப் போகிறதா? அல்லது இந்த விவகாரத்தை வைத்து கேம் மட்டும் ஆடுகிறார்களா? என்பது விரைவில் தெரியவரும். ஆனால் செங்கோட்டையன், 10 நாள் காலக்கெடு விதித்துள்ளார். அதற்குள்ளாக எடப்பாடி பழனிசாமி அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், மோதல் பெரிய அளவில் ஏற்படலாம். அதிமுக உட்கட்சி விவகாரம் ஒவ்வொரு நாளும் மாற்றங்களை கண்டு வருகிறது. அரசியல் பரபரப்பில் அதிமுக என்கிற பெயரே அழிந்துவிட்டது. அது குறித்த பேச்சே இல்லை. எடப்பாடி பழனிசாமி, பேருந்தை எடுத்துக்கொண்டு ஐ.டி. விங்கிற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தினமும் அங்கு சென்றார், இங்கு சென்றார் என்று வீடியோ போட்டு, யூடியூபில் லைவ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தான் அந்த கட்சி உள்ளது. ஆனால் மக்கள் செல்வாக்கை அந்த கட்சி இழந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியும் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்.
இத்தகைய சூழலில் கட்சியை கொண்டுவர வேண்டும் என்றால் அதிரடியான பல மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். வெளியே சென்றவர்களை எல்லாம், ஒன்று சேர்க்க வேண்டும் என்பதுதான் பலருடைய கோரிக்கையாக உள்ளது. அதனை முன்னிலைப்படுத்தி தான் செங்கோட்டையன் களமிறங்கி உள்ளார். இந்நிலையில், செங்கோட்டையன், அதிமுக தலைமைக்கு 10 நாள் கெடு விதித்துள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி அந்த தலைமை என்ன ஜெயலலிதாவா?, அல்லது எம்ஜிஆர் -ஆ? அவருக்காக தான் கூட்டம் கூடுகிறதா? எடப்பாடி பழனிசாமி என்ன நட்சத்திர தலைவரா? ஊடகங்கள் மூலம் பிரபலம் ஆவது வேறு. அரசியலில் தமிழர்களை முன்னெடுத்துச் சென்று தலைமை வகிக்கக்கூடிய ஒரு தலைவராகவா எடப்பாடி பழனிசாமி பிரபலமாகி உள்ளார்? அவரை அரசியல் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மற்றபடி அவர் ஒரு நட்சத்திர தலைவர் எல்லாம் கிடையாது. இந்த நிலையில், இன்னும் 10 நாட்களில் என்ன ஆகப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதிமுகவில் இன்னும் பல அதிரடிகள் காத்திருக்கின்றன. அதிமுக ஒன்றாக இருக்கப் போகிறதா? எடப்பாடி பழனிசாமி என்ன ஆகப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.