கடிதம் -2
அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் அருமையாக இருந்தது. படித்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கடிதத்தில் குழந்தைகளிடம் எவ்வித அடையாளங்களையும் சொல்லிக் கொடுக்க கூடாது என்று எழுதி இருக்கிறீர்கள். அப்படி என்றால் என்னுடைய பாரம்பரியத்தை, என் குலத்தின் அடையாளத்தை என் பிள்ளைகளிடம் சொல்லி கொடுக்க கூடாது என்றும் பெற்றோர்களின் கொள்கைகளை, சிந்தனைகளை குழந்தைகள் மீது திணிப்பது மாபெரும் குற்றம் என்றால் நான் எதை சொல்லி என் குழந்தைகளை வளர்ப்பது? வேறு எப்படி குழந்தையை வளர்ப்பது? என் போன்ற தாய்மார்கள் தனக்கு தெரிந்ததை தான் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பார்கள். எதுவும் சொல்லி கொடுக்காமல் குழந்தைகள் வளர்ப்பு எப்படி சாத்தியம் என்பதை கொஞ்சம் புரியும் படி விளக்கமாக எழுதவும்.
இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்
ரம்யா.

அன்பு மகளே,
ஒரு சரியான சமுதாய அமைப்பு சிறந்த பெற்றோர்களிடம் இருந்தும் ஆசிரியர்களிடம் இருந்தும் தான் தொடங்குகிறது. ஆனால் நமது சமுதாய அமைப்பில் அப்படிப்பட்ட பெற்றோர்களும் ஆசிரியர்களும் இல்லாதது வறுத்தத்திற்குறியது.
ஒருவர் மருத்துவராகுவதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. வழக்கறிஞராகுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் பெற்றோராகுவதற்கு எவ்வித பயிற்சியும் கொடுப்பதில்லை. நல்ல சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியும், அதற்கான பயிற்சியும் இல்லாமல் போனதால் சமூகத்தில் இவ்வளவு வன்முறைகளும் கலவரங்களும் நிகழ்கிறது.
ஆடு,மாடு போன்ற விலங்கினங்கள் பிறந்தவுடன் எழுந்து நடக்க தொடங்கிவிடுகிறது. ஒட்டகச்சிவிங்கி குட்டி போட்டதும் உயரத்தில் இருந்து விழும் குட்டியை நாக்கால் நக்கி, எட்டி உதைத்து ஓட வைக்கிறது. பறவை இனங்களில் இறக்கை முளைக்கிற வரை தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது.
மனித இனத்தில் ஒருவருக்கு குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை பெற்றோர்களின் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதன் பின்னர் தான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பக்குவப்பட்டு யாரையும் சாராமல் இயங்க முடியும். அந்த 20 வருடம் குழந்தைக்கு நாம் என்ன சொல்லி கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியமானது.
அன்பு மகளே, நீ எழுதிய கடிதத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கவும். அடையாளங்களை, பெருமைகளை சொல்லி கொடுப்பதை தவிர்த்து குழந்தை வளர்ப்பில் உனக்கு எதுவுமே தெரியவில்லை.
மனிதன் பிறக்கும் போது எவ்வித அடையாளங்களும் இல்லாமல் சுதந்திரமாகத் தான் பிறக்கிறான், ஆனால் வாழும் காலத்தில் பல்வேறு சங்கிலிகளில் சிக்கிக் கொள்கிறான் என்கிறார் ரூசோ. ஒரு குழந்தை பிறக்கும்போது அது குழந்தையாகவே இருக்கிறது. அதற்கு பெயர் இல்லை. ஊர் இல்லை. சாதி இல்லை. மதம் இல்லை. ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது திருநங்கையாகவோ அதனுடைய பிறப்பு இயற்கையாக நிகழ்கிறது.
அதன் பின்னர் பெற்றோர்களை வைத்து அந்த குழந்தைக்கு சாதியும், மதத்தையும் சமுதாயம் திணிக்கிறது. அடையாளம் இல்லாமல் பிறக்கும் குழந்தைக்கு அடையாளத்தை திணிப்பதற்காகவே சடங்குகள் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது.
அடையாளங்கள் நமக்கு பாதுகாப்பானவை என்று நினைக்கின்றோம். அதுதான் மனித இனத்திற்கு ஆபத்தை உருவாக்கக் கூடியவை என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறோம். தனிநபர் மோதலில் தொடங்கி ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர் தொடுப்பது வரை அடையாளங்களில் இருந்து தான் அழிவு ஆரம்பமாகிறது.
நம்முடைய சமுதாய அமைப்பில் உள்ள தவறுகளை இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் ஐந்து வகையாக பிரித்து இருக்கிறார். முதல் தவறு அடையாளத்தை உருவாக்கியது. அடுத்த தவறு அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள குழந்தைகளை பழக்கப்படுத்துவது. மூன்றாவது அந்த அடையாளத்தை காப்பாற்ற போராட கற்றுத் தருவது. நான்காவது அடையாளம் அனைத்து நடைமுறைகளிலும் மேன்மையானது என்று நம்பவைப்பது. ஐந்தாவது இவர்கள் எல்லாம் நம்முடைய அடையாளத்திற்கு எதிரானவர்கள் என்று சிலரை கற்பனை செய்து கொண்டு அவர்களை வெறுக்க செய்வது என்று வகைப்படுத்தி யுள்ளார்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிஞ்சு மனதின் நெஞ்சில் நஞ்சைத் திணிப்பது தான் நம்முடைய வளர்ப்பு முறை. தற்போது யாரை பார்த்தாலும் வெறுப்போடு பார்க்கிறார்கள். வன்மத்தை கொட்டுகிறார்கள். ஒருவர் இடத்திலும் அன்பு இல்லை.
குழந்தைகள் வழிகாட்டுதல கேட்கிறார்கள். ஆனால் வழிக்காட்டக் கூடிய பெற்றோர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அடையாளங்களுடன் குழப்பமும், குறுகிய மனமும், சாதி,மதப்பற்றும் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுடைய குழந்தைகளும் மாணவர்களும் அவர்களைப் போன்றே வளர்கிறார்கள். எனவே சமுதாயம் மேலும் குழப்பமடைந்து சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்ததாக அமைகிறது.
முதலில் நமது சமுதாயத்தில் உள்ள அனைத்து கருத்துகளையும், தத்துவங்களையும், சடங்குகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
ஒரு கூடை ஆப்பிள் நம் முன்னே இருக்கின்றன. அவற்றில் சில அழுகி இருக்கின்றன. அப்போது அழுகியதை அப்புறப்படுத்தி விட்டு மற்ற ஆப்பிளை காப்பாற்ற நினைக்கிறோம்.
அழுகியதை அப்புறப்படுத்த எல்லாவற்றையும் கீழே கொட்டி களைப்பதை விட ஒவ்வொரு ஆப்பிளையும் பொறுக்கி எடுத்து அழுகியதை தூக்கி வீசுவோம். நல்லதை வைத்துக் கொள்வோம். இது நாம் கற்றுக் கொண்டது. கடைப்பிடித்தும் வருகிறோம்.
நாம் ஒரு ஆப்பிள் பழத்தை தரம் பிரித்து நல்லதாக தேர்ந்தெடுக்க தெரிந்து கொண்டோம். ஆனால் நம்மிடம் இருக்கும் அடையாளங்கள், சடங்குகள் சரியானதா, சமுதாய நலனுக்கு ஏற்றதா என்று ஒரு முறை கூட சிந்திக்க மறுக்கிறோம். ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து, அதன்படி வாழ்வதுதான் வாழ்க்கை. உன் வாழ்க்கை முறை தான் உன் குழந்தைக்கு பாடம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் நினைவு படுத்துகிறேன்… குழந்தைகள் வழிகாட்டுதலை மட்டும் விரும்புகிறார்கள்.
(தொடர்ந்து பேசுவோம்)
– என்.கே.மூர்த்தி..