உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்
முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை அமைதிப்படுத்திக் கொள்வதுதான் அவனுக்குத் தேவை. பயிற்சியின் மூலமாக மட்டுமே அவனால் அதை அடைய முடியும் – தியோடார் ரூஸ்வெல்ட்
அமெரிக்க அதிபர் யுலிசீஸ் எஸ்.கிரான்ட் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக மிகப் பிரபலமான புகைப்படக் கலைஞரான மேத்யூ பிராடியின் முன்னால் அமர்ந்தார். புகைப்படக்கூடம் இருட்டாக இருந்ததால், மேத்யூ தன் உதவியாளரை மொட்டை மாடிக்கு அனுப்பி, அந்த அறையின் கூரையின் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிச் சன்னலைத் திறக்குமாறு பணித்தார். மேலே சென்ற உதவியாளர் கால் தடுக்கி விழுந்ததில் அக்கண்ணாடிச் சன்னல் உடைந்து பல துண்டுகளாகச் சிதறிக் கீழே விழத் தொடங்கியது. கத்திமுனைபோலக் கூராக இருந்த பல துண்டுகள் அதிபரைச் சுற்றி அபிஷேக மழை பொழிந்தன.

கடைசித் துண்டு கீழே விழுந்ததும், மேத்யூ அதிபா் இருந்த இடத்தை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார். யுலிசீஸ் ஆடாமல் அசையாமல் ஒரு சிலைபோல அப்படியே அமர்ந்திருந்தார். நல்லவேளையாக அவர்மீது எந்த கண்ணாடித் துண்டும் விழுந்திருக்கவில்லை. யுலிசீஸ் மேலே ஏறிட்டுப் பார்த்துவிட்டு, எதுவுமே நடக்காததுபோலம் கேமராவைப் பார்த்துப் புன்னகைத்தார்
வேறொரு முறை, அமெரிக்க உள்நாட்டுப் போர் அமெரிக்க நடந்து கொண்டிருந்தபோது, அப்போது இராணுவத் தளபதியாக இருந்த யுலிசீஸ் தன்னுடைய படைகளைப் பார்வையிடச் சென்றிருந்தார். அவர் இருகண் நோக்கியின் வழியாக எதிரிப் படைகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிரி வீசிய ஒரு பிரங்கிக் குண்டு அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வெகு அருகே வந்து விழுந்து வெடித்தது. அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த குதிரை அதில் கொல்லப்பட்டது. ஆனால் யுலிசீஸ் தன் இருகண் நோக்கியிலிருந்து தன் கண்களை அகற்றவேயில்லையாம். யுலிரீஸைப் பற்றி இப்படிப்ப கதைகள் கூறப்படுவதுண்டு.
தன்னை நிலையாக வைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதர் அவர். தான் எடுத்துக் கொண்ட காரியத்தை முடிக்கும்வரை அதிலிருந்து தன் கண்களை அகற்றாதிருந்த மனிதர் அவர். அதுதான் துணிச்சல்.
இப்போது நாம் நிகழ்காலத்திற்கு வரலாம்.
நாம் இதற்கு நேர்மாறாகப் பதற்றத்தின் மொத்த உருவமாக இருக்கிறோம்.
நம்முடைய தொழிலைச் சுற்றிலும் போட்டியாளர்கள் நிறைந்துள்ளனர். திடீர்த் திடீரென்று பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. நம்முடைய சிறந்த ஊழியர் சொல்லாமல் கொள்ளாமல் வேலையிலிருந்து நின்றுவிடுகிறார். நாம் அளிக்கின்ற வேலையின் சுமையைத் தாங்க முடியாமல் நம்முடைய கணினி அமைப்புமுறை மிகவும் திணறுகிறது. நம்முடைய சௌகரிய வட்டத்திற்கு வெளியே நாம் தள்ளப்படுகிறோம். நம்முடைய மேலதிகாரி நம்மீது மட்டும் அதிகமான வேலைகளைத் திணிக்கிறார். நம்மால் இதற்கு மேல் தாங்க முடியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் உடைந்து நொறுங்கி நம்மீது கொட்டிக் கொண்டிருக்கின்றன.
இவற்றை எப்படிக் கையாள்வது? ஓரிரு முறை கண்களைச் சிமிட்டிவிட்டு நம்முடைய கவனக்குவிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டுமா? அல்லது, அதனால் வெலவெலத்துப் போய் உட்கார்ந்துவிட வேண்டுமா?
உங்களை மாட்டிவிட உலகில் சிலர் காத்துக் கொண்டிருப்பர் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் உங்களை பயமுறுத்த விரும்புவர். நீங்கள் எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு முன்பாகவே தீர்மானம் எடுப்பதற்கு உங்களை உந்தித் தள்ளுவர். உங்கள் விருப்பப்படி அல்லாமல், தங்கள் விருப்பப்படி நீங்கள் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பர்.
இப்போது உங்கள் முன் இருக்கின்ற கேள்வி, அதை நீங்க அனுமதிக்கப் போகிறீர்களா என்பதுதான்.’
நாம் உயரமான இலக்கைக் குறி வைத்தால், அங்கு கண்டிப்பாக அழுத்தங்கள் தோன்றத்தான் செய்யும். நாம் முற்றிலும் எதிர்பார்த்திருக்காத சமயங்களில் விஷயங்கள் திடீரென்று முளைத்து நம்மை அச்சுறுத்தத்தான் செய்யும். இனிமையற்ற ஆச்சரியங்களை நாம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். நம்மைத் திக்குமுக்காட வைக்கப் போகின்ற ஆபத்து அங்கு எப்போதும் உண்டு.
இப்படிப்பட்டச் சூழல்களில் பெரிதும் தேடப்படுகின்ற ஒன்றாக இருக்கப் போவது திறமை அல்ல. சலனமின்மையும், நயமும்தான் அங்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஏனெனில், மற்ற அனைத்துத் திறமைகளையும் களமிறக்குவதற்கான வாய்ப்பு உருவாவதற்கு முன்பாக அங்கு தோன்றப் போவது இவைதாம். மார்ல்பரோவின் முதல் டியூக்கின் மாபெரும் இராணுவ வெற்றிக்குப் பின்னாலுள்ள இரகசியத்தைப் பற்றி வோஸ்ட்டேர் இவ்வாறு கூறியுள்ளார்: “கொந்தளிப்புக்கு நடுவே இருக்கின்ற சலனமற்றத் துணிச்சலும், ஆபத்திற்கு நடுவே உதயமாகின்ற ஆத்ம அமைதியும்தான் அது.”
உண்மையில் நம்முடைய ஆபத்து எந்த அளவுக்கு இருந்தாலும் சரி, நம்முடைய மன அழுத்தம், பயத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின்பால் நம்மைத் தள்ளிவிடும்.
நயம், சலனமின்மை, மன அமைதி போன்றவை மேட்டுக்குடியினரின் மென்மையான குணங்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். எது எப்படி இருந்தாலும், பதற்றப்படாமல் இருப்பது என்பது இறுதியில் கட்டுப்பாட்டையும் எதிர்த்து நிற்பதையும் பற்றியதே.
இதற்கான எடுத்துக்காட்டுகள்:
நான் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்.
நான் மிரட்டப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இது ஒரு தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ளத் தோன்றும் சபலத்தை நான் எதிர்க்கிறேன்.
பதற்றப்படாமல் இருப்பது என்பது ஏற்றுக் கொள்ளுதலைப் பற்றியதும்தான். அதற்கான எடுத்துக்காட்டுகள்:
சரி, இனி இதை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் ஆடிப் போய் உட்கார்ந்துவிடுகின்ற நிலையில் நான் இல்லை.
என்னை நம்பி ஏராளமானோர் இருக்கின்றனர்.
எதிர்த்து நிற்பதும் ஏற்றுக் கொள்வதும் பின்வரும் இக்கொள்கையில் செம்மையாகக் கைகோர்த்து நிற்கும். எல்லாச் சூழ்நிலைகளிலும் எப்போதும் ஏதாவது ஒரு வழி பிறக்கும். எனவே, மனக்கலக்கம் அடைய வேண்டிய தேவையில்லை. இப்பாதை எளிதாக இருக்கும் என்று ஒருபோதும் கூறப்பட்டிருக்கவில்லை. ஆனால், நீங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில், அங்கு ஒரு பாதையும் தயாராக இருக்கும்.
நாம் செய்ய வேண்டியது இதுதான். அது கடினமாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். சில சமயங்களில், அது நம்மை வெகுவாக பயமுறுத்தக்கூடச் செய்யலாம்.
ஆனால் அதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம். அதில் நாம் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். எந்தவிதமான மிரட்டலுக்கும் நாம் அடிபணியப் போவதில்லை.
நாம் நம்முடைய முழு ஆற்றலுடன் இதில் இறங்குவதற்கு ஏற்ற விதத்தில், நம்முடைய சூழலின் எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, நம் மனத்தை அமைதிப்படுத்திக் கொள்ள நாம் தயாராக வேண்டியது அவசியமாகிறது. நமக்கு நடக்கின்ற மோசமான விஷயங்களை உதறித் தள்ளிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி நடைபோட வேண்டும்.
நீங்கள் பதற்றப்படாமல் இருந்தால், உண்மையில் அங்கு எதுவும் நடக்காது. பெரிய பின்விளைவுகளுடன்கூடிய எதுவும் நடக்காதபடி நம்முடைய கண்ணோட்டம் பார்த்துக் கொள்ளும்.


