” நாம் அனைவரும், ஒன்று, உழைத்து ஓடாய்ப் போக வேண்டும் அல்லது துருப்பிடித்துத் தேய்ந்து போக வேண்டும். நான் முன்னதைத் தேர்ந்தெடுக்கிறேன்” – தியோடார் ரூஸ்வெல்ட்
அமீலியா இயர்ஹார்ட் ஒரு தலைசிறந்த விமானியாக ஆக விரும்பினார். ஆனால் 1920களில், பெண்கள் பலசாலிகள் அல்லர், இத்தகைய விஷயங்களுக்கு ஏற்றவர்கள் அல்லர் என்ற சிந்தனை மக்களிடம் மேலோங்கியிருந்தது. அமெரிக்காவில் 1920களில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமையே கிடைத்தது.
அமீலியாவால் ஒரு முழுநேர விமானியாக ஆக முடியவில்லை என்பதால், அவர் ஒரு சமூக சேவகராகப் பணியாற்றி வந்தார். பின் ஒருநாள் அவருடைய வீட்டுத் தொலைபேசியில் அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் ஒரு விநோதமான யோசனையை அமீலியாவின் முன் வைத்தார். “ஒரு பெண்மணி முதன்முறையாக விமானத்தின் மூலம் அட்லாண்டிக் கடலைக் கடக்கும் முயற்சிக்கு நிதியுதவி அளிக்க எங்கள் நிறுவனம் தயாராக உள்ளது. ஆனால் அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. முதலாவது, நீங்கள் அந்த விமானத்தில் தனியாகச் செல்ல மாட்டீர்கள். உங்களுடன் ஆண் விமானிகள் இருவரை நாங்கள் அனுப்புவோம். அவர்களுக்கு இதற்காகப் பணம் வழங்கப்படும். ஆனால் உங்களுக்கு எந்தப் பணமும் வழங்கப்பட மாட்டாது. இதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்திருந்த முதல் பெண்மணி இத்திட்டத்திலிருந்து விலகிவிட்டார். நீங்கள் இதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” உங்களுக்கு

அமீலியா இதற்கு உடனே சம்மதித்துவிட்டார்.
தங்களுக்குச் சாதகமாக இல்லாத ஒரு சூழ்நிலையை முறியடிக்க விரும்புகின்ற நபர்கள் இப்படித்தான் செயல்படுவா். அப்படித்தான் மக்கள் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கின்ற ஏதாவது ஓரிடத்திலிருந்து அதை எப்படியாவது தொடங்குகின்றனர். சூழ்நிலை செம்மையாக இருக்கிறதா என்று அவர்கள் கவலைப்படுவதில்லை. ஏனெனில், ஏதாவது ஓரிடத்திலிருந்து தொடங்கிய பிறகு சிறிது வேகமெடுத்துவிட்டால், தாங்கள் நினைத்திருப்பதைவிட அதிக வேகமாகத் தங்களால் தங்கள் இலக்கை அடைந்துவிட முடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
அமீலியாவின் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. அப்பயணம் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு உள்ளாகவே, அமீலியா அட்லாண்டிக் கடலை விமானத்தின் மூலம் தனியாகக் கடந்த முதல் பெண் விமானி என்ற பெயரைப் பெற்றார். உலகில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவராகவும், எல்லோராலும் மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு பெண்மணியாகவும் அவர் உருவெடுத்தார்.
ஆனால், தன்னை அவமானப்படுத்துகின்ற விதத்தில் தனக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்க அமீலியா மறுத்திருந்தாலோ அல்லது தன்னுடைய நிலைமையை எண்ணிப் புழுங்கிக் கொண்டிருந்திருந்தாலோ, இது எதுவும் அவருக்குச் சாத்தியமாகியிருக்காது. அவர் அந்த முதல் விமானப் பயணத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் இது சாத்தியப்பட்டிருக்காது. அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டதோடு, மேலும் முன்னோக்கிச் செல்கின்ற காரியங்களில் இறங்கினார். அவைதான் அவருக்கு வெற்றியை ஈட்டித் தந்தன.
வாழ்க்கை விரக்தியூட்டுவதாக இருக்கக்கூடும். பெரும்பாலான சமயங்களில் நமக்கு நம்முடைய பிரச்சனைகள் என்னவென்று தெரியும். அவற்றை தீர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் செயல்நடவடிக்கையில் இறங்குவது அதற்கான அனுபவம் நமக்கு இல்லையென்றோ, அல்லது அது செலவுமிக்கது என்றோ அது நாம் எதிர்பார்த்ததுபோல இல்லையென்றோ நாம். அஞ்சுகிறோம். அதைவிட மேலான ஒன்று வருமென்று நாம் நம்புகிறோம் அல்லது நாம் திட்டமிட்டுள்ள நடவடிக்கை சரியாக வேலை செய்யாது என்று நாம் கருதுகிறோம்.
இதன் விளைவாக நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? நாம் ஒன்றுமே செய்வதில்லை.
“அதற்கான நேரம் கடந்துவிட்டது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. மணி அடிக்கப்பட்டுவிட்டது. உடனடியாகச் செயலில் இறங்கு. உடனே தொடங்கு”, என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.நம்முடைய மந்த நடைக்கு ஏற்றாற்போலவே உலகமும் நடைபோட்டுக் கொண்டிருப்பதாக நாம் நம்புகிறோம். எப்போது தொடங்க வேண்டுமோ அப்போது நாம் தாமதிக்கிறோம். எப்போது வேகமாக ஓட வேண்டுமோ அப்போது நாம் ஆமை நடை போடுகிறோம். பிறகு, பெரிதாக எதுவும் நிகழாதபோது, வாய்ப்பு வலிய வந்து நம்முடைய வாசற்கதவைத் தட்டாதபோது, முட்டுக்கட்டைகள் நம்முடைய வீட்டின் முற்றத்தில் குவியத் தொடங்கும்போது நாம் அதிர்ச்சியடைகிறோம்.
எதிரிகள் நமக்கு எதிராகக் கைகோர்த்துக் கொள்ளத் தொடங்கும்போது நாம் அதிர்ச்சியடைகிறோம். அவர்கள் சுதாரித்துக் கொள்ள அவகாசம் கொடுத்தது யார்? நாம்தானே? அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியது நாம்தான்.
அதனால் முதலில், நீங்கள் உங்களுடைய தோளில் ஒய்யாரமாக வைத்திருக்கும் மட்டையை எடுத்துச் சுழற்றுங்கள். நீங்கள் ஆட்டத்தைத் தொடங்கியாக வேண்டும், இங்கிருந்து நகர்ந்தாக வேண்டும்.
ஏற்கனவே அதற்கு அச்சாரம் போட்டுவிட்டீர்களா? நல்லது. அப்படியெனில், நீங்கள் பலரைவிட முன்னால் இருக்கிறீர்கள். ஆனால் இன்னும் அதிகமானவற்றைச் செய்ய நீங்கள் தயாரா? உங்களால் முடியும். குறைந்தபட்சம் அதற்கான முயற்சிகளிலாவது ஈடுபடுவீர்களா? நீங்கள் ஆட்டத்தைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் நீங்கள் இன்னும் முழுமூச்சாக அதில் இறங்கியாக வேண்டும்.
அது உங்களுடைய விளைவுகள்மீது தாக்கம் ஏற்படுத்துமா? அதிலென்ன சந்தேகம்?
இரண்டாம் உலகப் போரின் தொடக்கக் காலகட்டங்களில், வட ஆப்பிரிக்கப் போர்முனைக்கு அனுப்பப்படுவதைவிட மோசமான தண்டனை வேறு எதுவும் இருக்க முடியாது என்று இராணுவ வீரர்கள் கருதினர். எதையும் ஒழுங்குமுறையுடன் செய்வதற்குப் பெயர் பெற்றிருந்த ஆங்கிலேயர்களால், வட ஆப்பிரிக்காவின் தட்பவெப்ப நிலையும் கொடுமையான நிலப் பகுதியும் தங்களுடைய திட்டத்தைக் குட்டிச்சுவராக்கியதையும் தங்களுடைய இயந்திரங்களை நாசமாக்கியதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை.
ஆனால் ஜெர்மானியப் படைத்தளபதியான ஜெனரல் எர்வின் ரோமெல் அதே சூழ்நிலையைப் பெரிதும் விரும்பினார். அவர் போரை ஒரு விளையாட்டாகப் பார்த்தார். ஆபத்தான, முரட்டுத்தனமான, அலங்கோலமான ஒரு விளையாட்டாக அதைப் பார்த்தார். எல்லாவற்றையும்விட, அவர் இப்போரில் படுஉற்சாகத்துடன் கலந்து கொண்டார், முன்னே செல்லுமாறு தன்னுடைய படையினரை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தார்.
“ரோமெல் இருக்குமிடம்தான் போர்முனை,” என்ற ஒரு சொற்றொடர் ஜெர்மானியரிடையே பிரபலமாக இருந்தது.
ஆனால் இன்றைய தலைவர்களில் பெரும்பாலானோரைப் பற்றி அப்படி நம்மால் கூற முடியாது. கொழுத்தச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்ற பெருநிறுவன முதன்மை நிர்வாக அதிகாரிகள் நீண்ட விடுமுறைகளில் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், அந்த முதன்மை நிர்வாக அதிகாரியின் தொழிலை நிர்மூலமாக்குவதற்கு ஏதோ ஒரு கணினி நிரலாளர் தினமும் பதினெட்டு மணிநேரம் உழைத்து ஒரு நிரலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். பிரச்சனைகளை எதிர்கொள்வதைப் பொறுத்தவரை, நம்மில்
பெரும்பாலானோர், அந்த முதன்மை நிர்வாக அதிகாரியின் அணுகுமுறையையே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
மின்னஞ்சல்களை அனுப்புவது, சந்திப்புக்கூட்டங்களில் கலந்து கொள்வது, இணையத்தில் மேய்வது என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நீங்கள் நாளடைவில் மென்மையானவராக ஆகிவிடுகிறீர்கள். உங்களிடம் முன்பிருந்த ஊக்கமும் உத்வேகமும் இன்று இல்லை. நீங்கள் முன்னே செல்ல முன்புபோலத் துடிப்பாக இல்லை. ஏன் உங்களால் முன்புபோல வேகமாக இயங்க முடியவில்லை என்பதற்கு நீங்கள் ஒரு நூறாயிரம் காரணங்களைத் தயாராக வைத்திருப்பீர்கள். இதன் காரணமாக, உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்கின்ற முட்டுக்கட்டைகள் உங்களுக்கு பூதாகரமாகத் தெரிகின்றன.
என்ன காரணத்திற்காகவோ, ஆக்ரோஷமாகச் செயலில் இறங்குதல், ஆபத்துடன் துணிந்து கைகுலுக்குதல், முண்டியடித்து முன்னே செல்லுதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை இப்போது நாம் குறைத்து மதிப்பிட்டு வருகிறோம். ஒருவேளை, அது வன்முறையுடனும் ஆண்மை முறுக்குடனும் ஓர் எதிர்மறையான விதத்தில் தொடர்புபடுத்தப்படுவது அதற்கான காரணமாக இருக்கலாம்.
ஆனால் அது உண்மையல்ல என்பதை அமீலியா நிரூபித்தார். நீங்கள் சென்று கொண்டிருக்கின்ற வேகத்தை நீங்கள் குறைத்தால் நீங்கள் மோதிவிடுவீர்கள் என்று அவர் கூறினார். திட்டவட்டமாகச் செயல்பட வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், எப்போதும் நீங்கள் முன்னோக்கிச் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
அதுதான் கடைசிப் பகுதி. இயக்கத்தில் இருப்பது. எப்போதும் இயக்கத்தில் இருந்து கொண்டேயிருப்பது.
அமீலியாவைப்போல ரோமெலும், பிரச்சனைகளையும் சரி, வாழ்க்கையையும் சரி, யார் துடிப்புடனும் ஆற்றலுடனும் தாக்குகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுகின்றனர் என்பதை வரலாற்றிலிருந்து அறிந்து வைத்திருந்தார். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படையினரை அவர் இப்படித்தான் நிர்மூலமாக்கினார்.
சைரனைக்கா, டோப்ருக், துனிசியா ஆகிய இடங்களில் ரோமெல் முன்னேறித் தாக்கி வென்றது, நவீனப் போர் வரலாற்றில் நிகழ்ந்த நம்புதற்கரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முனைவதற்கு முன்பாகவே ரோமெல் தன்னுடைய தாக்குதல்களைத் தொடங்கினார். உலகில் மிகவும் மோசமான தட்பவெப்ப நிலை நிலவிய ஒரு பகுதியில் இதை அவர் சாதித்துக் காட்டினார். கடுமையான வெயில், கண்களைக் குருடாக்கிய மணல் சூறாவளிகள், நீரின்மை ஆகியவை இருந்தும் அவர் நெடுந்தூரங்களைப் படுவேகமாகக் கடந்தார். அவர் எங்குமே நிற்காமல் சென்றதுதான் அதற்குக் காரணம்.
அதனால் நீங்கள் உங்களுடைய இலக்கை அடைய முயற்சிக்கின்றபோது விரக்தி ஏற்பட்டால், உங்களுடைய முட்டுக்கட்டைகளைப் பற்றிக் குறை கூறிக் கொண்டு ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்காதீர்கள்.
சமுதாய அளவில் நாம் துணிச்சல் பற்றி நிறையப் பேசுகிறோம், ஆனால் தனிநபர் என்று வரும்போது, நாம் செயலில் இறங்கத் தயங்குகிறோம்.
சூழ்நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதாலோ அல்லது நீங்கள் தயாராகி இருக்கவில்லை என்று நீங்கள் நினைப்பதாலோ, நீங்கள் எதிர்கொண்டுள்ள முட்டுக்கட்டைகளை உங்களால் கடக்க முடியாது என்று அர்த்தமில்லை. நீங்கள் போக வேண்டிய வேகத்தை நீங்கள் அதிகரித்துக் கொள்ள விரும்பினால், அதை நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை இப்போதே தொடங்குங்கள்.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – செயலில் இறங்கத் தயாராகுங்கள் – ரயன் ஹாலிடே


