spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - வித்தியாசமாகச் சிந்தியுங்கள் – ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – வித்தியாசமாகச் சிந்தியுங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

உங்கள் மனத்தில் உள்ளவற்றைச் செயல்படுத்துவதற்கான திறமைதான் மேதமை. இதை வேறு எப்படியும் விவரிக்க முடியாது” – எஃப்.ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டுதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள்  - வித்தியாசமாகச் சிந்தியுங்கள் – ரயன் ஹாலிடேஸ்டீவ் ஜாப்ஸைப் பலர் “எதார்த்தங்களைத் திரிக்கின்ற வசீகரத்தைக் கொண்டவர்” என்று வர்ணிக்கின்றனர். “இது சாத்தியப்படாது,” “இதற்குக் கூடுதல் அவகாசம் தேவை,” போன்ற பதில்களை அவர் ஆணவத்துடன் நிராகரித்ததற்கு அவருடைய இக்கண்ணோட்டம்தான் காரணம்.

எதார்த்தம் என்பது விதிமுறைகள் மற்றும் சமரசங்களால் தவறாக அலங்கரிக்கப்பட்ட ஒன்று என்பதாகச் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை இளமையிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டுகொண்டார். அதனால், எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பது குறித்த ஒரு முரட்டுத்தனமான அணுகுமுறையை அவர் சுவீகரித்துக் கொண்டார். அவரைப் பொறுத்தவரை, சரியான முன்னோக்கும் தொழில் நேர்த்தியும் இருந்தால் வாழ்க்கை இணக்கமானதாக இருக்கும்.

we-r-hiring

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தபோது, புதிய ‘மௌஸ்’ ஒன்றை உருவாக்க விரும்பினார். அது குறித்து அவர் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தார். அவர் கற்பனை செய்து வைத்திருந்த மௌஸ் எந்தத் திசையில் வேண்டுமானாலும் நகரக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்போது அப்படிப்பட்ட மௌஸ் நடைமுறையில் இருக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு மௌஸ் வர்த்தகரீதியாகச் சாத்தியமில்லை என்றும், ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்புவது நடைமுறைச் சாத்தியமற்றது  என்றும், அதைத் தயாரிக்க முடியாது என்றும் அத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த வடிவமைப்பாளா்களில் ஒருவர் தலைமைப் பொறியாளரிடம் கூறினார். அடுத்த நாள் அந்தத் தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் அந்த வடிவமைப்பாளரை வேலையிலிருந்து நீக்கியிருந்ததை அறிந்தார். அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருந்த புதிய வடிவமைப்பாளரின் வாயிலிருந்து வெளிவந்த முதல் வாக்கியம், “என்னால் இந்த மௌஸை உருவாக்க முடியும்,” என்பதுதான்.

எதார்த்தம் குறித்து ஸ்டீவ் ஜாப்ஸ் கொண்டிருந்த கண்ணோட்டம் அது. அதைப் பைத்தியக்காரத்தனமானது என்று வர்ணிக்கமுடியாது. ஒன்றைச் சாதிக்கவேண்டும் என்ற வெறி அவருடைய முரட்டுத்தனமான தன்னம்பிக்கைக்குப் பின்னால் இருந்தது. இலக்கைத் தாழ்த்திக் கொள்வது என்பது சராசரித்தனத்திற்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம் என்று அவர் நம்பினார். ஆனால் விண்ணளாவிய ஓர் இலக்கைக் கொண்டிருந்தால், அசாதாரணமான ஒன்றைப் படைக்க அங்கு வாய்ப்பு இருக்கிறது. நெப்போலியன் இத்தாலிமீது படையெடுத்துச் சென்றபோது ஆல்ப்ஸ் மலையைக் கடக்க வேண்டியிருந்தது. பீரங்கிகள் போன்ற கனமான தளவாடங்களுடன் அதைக் கடப்பது சாத்தியமல்ல என்று அவருடைய படைத்தளபதிகள் கூறியபோது, அதற்கு நெப்போலியன், “சாத்தியமல்ல என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே உள்ள வார்த்தை. என் வழியில் ஆல்ப்ஸ் என்ற ஒன்று கிடையவே கிடையாது!” என்று முழங்கினாராம். அதே போக்கைத்தான் ஸ்டீவ் ஜாப்ஸும் பிரதிபலித்தார்.

நம்மில் பெரும்பாலானோருக்கு அப்படிப்பட்டத் தன்னம்பிக்கை அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அது புரிந்து கொள்ளப்படக்கூடியதுதான். நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அசட்டுத் துணிச்சலுடன் ஒரு காரியத்தில் இறங்கக்கூடாது என்றும், இன்னும் ஒருபடி மேலே போய், ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கின்ற படகைக் குலுங்க வைக்கக்கூடாது என்றும் எண்ணற்ற மக்கள் நமக்கு போதித்துள்ளனர். பெரிய விஷயங்களை நாம் முயற்சி செய்து பார்க்க விரும்பும்போது இது நமக்குப் பெரும் இடைஞ்சலாக இருக்கும். நம்முடைய சந்தேகங்கள் நமக்கு நியாயமானவைபோலத் தோன்றினாலும், எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதைத் தீர்மானிப்பதில் அவற்றுக்கு எந்தப் பங்கும் கிடையாது.

நாம் யார் என்பதையும், நம்மால் எவற்றைச் சாதிக்க முடியும், எவற்றைச் சாதிக்க முடியாது என்பதையும் தீர்மானிப்பதில் நம்முடைய கண்ணோட்டங்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், நம்முடைய எதார்த்தத்தையே அவைதாம் தீர்மானிக்கின்றன. நம்முடைய இலக்கைவிட நாம் எதிர்கொண்டுள்ள முட்டுக்கட்டையை நாம் அதிகமாக நம்பினால், எது இறுதியில் வெற்றி பெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அதனால்தான், பிறர் கூறுவதை நாம் காது கொடுத்துக் கேட்கக்கூடாது. நம்முடைய தலைக்குள் நச்சரித்துக் கொண்டிருக்கும் உட்குரலுக்கும் இது பொருந்தும். அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் விளையாது.

திறந்த மனத்தோடு இருங்கள். கேள்வி கேளுங்கள்.

எதார்த்தத்தை நாம் கட்டுப்படுத்துவது இல்லை என்றாலும், நம்முடைய கண்ணோட்டத்தால் அதன்மீது தாக்கம் ஏற்படுத்த முடியும்.

முதல் ஆப்பிள் கணினிகள் சந்தைக்கு அனுப்பப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அந்நிறுவனத்தின் பொறியாளர்கள், ஸ்டீவ் ஜாப்ஸிடம், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடுவுக்குள் கணினிகளைத் தயார் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். முக்கியமானவர்கள் அடங்கிய ஒரு சந்திப்புக்கூட்டம் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில், கணினிகளைத் தயார் செய்யத் தங்களுக்கு மேலும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று பொறியாளர்கள் ஸ்டீவ் ஜாப்ஸிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டுக் கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ், அமைதியாக, “உங்களால் அதை இரண்டு வாரங்களில் செய்து முடிக்க முடியும் என்றால், கண்டிப்பாக ஒரு வாரத்தில் செய்து முடிக்க முடியும். மேலும், ஒரு வாரத்திற்கும் இரண்டு வாரத்திற்கும் இடையே பெரிய இடைவெளி ஒன்றும் இல்லை. இவ்வளவு சிரமப்பட்டு உழைத்துச் சிறப்பாகச் செயல்பட்டுள்ள உங்களால், இதை நாம் ஒப்புக் கொண்டுள்ள காலக்கெடுவுக்குள் கண்டிப்பாகச் செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார். ஸ்டீவ் ஜாப்ஸின் வற்புறுத்தல், தங்களால் முடியாது என்று நம்பியதை மீறி அப்பொறியாளர்களைச் செயல்பட வைத்தது.

சரி, நமக்கு மேலேயுள்ள யாரோ ஒருவர் நம்மிடம், கிட்டத்தட்ட இயலாத ஒரு காலக்கெடுவுக்குள் ஒரு காரியத்தைச் செய்து முடிக்கும்படி கூறினால், பொதுவாக நாம் அதற்கு எவ்வாறு செயல்விடை அளிப்போம்? குறை கூறுவோம். கோபப்படுவோம். கேள்வி கேட்போம். ”அவர்களால் எப்படி அவ்வாறு கேட்க முடியும்? அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்று நாம் மருகுவோம். அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று நம் மனம் அலைபாயும். நம்மீது நாம் கழிவிரக்கம் கொள்வோம்.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள்  - வித்தியாசமாகச் சிந்தியுங்கள் – ரயன் ஹாலிடேஆனால் இது எதுவும் நம்முடைய எதார்த்தமான காலக்கெடுவின்மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தங்களுடைய சொந்த வெற்றித் திறனின்மீது நம்பிக்கை இல்லாதவர்களை சகித்துக் கொள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் மறுத்தார்.

அவர் உருவாக்கிய புதுமையான பொருட்களின் ஆற்றலும் அவை தோற்றுவித்த வியப்பும் அவருடைய அந்த குணத்தைப் பிரதிபலித்தன. பிறர் சாத்தியமற்றது என்று நினைத்த விஷயங்களில் தீவிரமாக இறங்கியதன் மூலம் அவரால் முற்றிலும் புதிய பொருட்களை உருவாக்க முடிந்தது. ஆப்பிள் உருவாக்கியிருந்த பொருட்களை அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடியும் என்று எவரும் நம்பியிருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவருடைய சொந்த நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களே அவருடைய திட்டம் பைத்தியக்காரத்தனமானது என்று கருதினர்.

அதனால்தான், அவர் தோற்றுவித்த நிறுவனத்திலிருந்து 1985ல் அவரையே அவர்கள் தூக்கியெறிந்தனர். ஆனால் அந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களின் முடிவு தவறு என்பதை வரலாறு நிரூபித்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் தன் ஊழியர்களிடமிருந்து வந்த ஆட்சேபனைகளையும் மறுப்புகளையும் ஒதுக்கித் தள்ளத் தயங்கவில்லை. ஏனெனில், அவை பெரும்பாலும் பயத்தில் ஊறிப் போயிருந்தன என்பதை அவர் அறிந்திருந்தார். ஆப்பிள் தன்னுடைய முதல் ஐபோனை வெளியிட இருந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் அதற்கு ஒரு தனித்துவமான கண்ணாடியைப் பயன்படுத்தத் தீர்மானித்தார். ஆனால் அக்கண்ணாடியைத் தயாரித்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர்கள், ஸ்டீவ் ஜாப்ஸ் விதித்தக் காலக்கெடுவைக் கண்டு அதிர்ந்து போயினர். “இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் கண்ணாடிகளைத் தயாரிக்கும் அளவு வளவசதி எங்களிடம் இல்லை,” என்று அவர்கள் கூறியபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களிடம், “உங்களால் கண்டிப்பாக முடியும். உங்கள் மனத்தை அதில் செலுத்துங்கள். இது கண்டிப்பாக நிறைவேறும்,” என்று அடித்துக் கூறினார். வெகு விரைவிலேயே அத்தயாரிப்பாளர்கள் தங்களுடைய தொழிற்சாலையை விரிவுபடுத்தி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஸ்டீவ் ஜாப்ஸ் கேட்ட எண்ணிக்கையில் அவர் விதித்திருந்த காலக்கெடுவுக்குள் அக்கண்ணாடிகளைத் தயாரித்துக் கொடுத்தனர்.

ஒரு விஷயத்திற்கு நாம் எப்படிச் செயல்விடை அளிக்க வேண்டும் என்று நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதற்கு நேரெதிரானது இது. “எதார்த்த நிலையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்; பின்னூட்டக்கருத்துகளுக்குச் செவிசாயுங்கள்; ஊரோடு ஒத்து வாழுங்கள்; விட்டுக்கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.” இப்படித்தான் நமக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஊரிலுள்ளவர்கள் சரியில்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? வழமையான ஞானம் பிற்போக்குத்தனமானதாக இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? குறை கூறுவது, தள்ளிப்போடுவது, ஒட்டுமொத்தமாகக் கைகழுவிவிடுவது போன்றவைதான் நம்மை இழுத்துப் பிடிக்கின்றன.

இதுவரை இல்லாத ஒன்றைத் தங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள்தாம் தொழில்முனைவோர். அவர்களைப் பொறுத்தவரை, இதற்கு முன்பு அதை வேறு எவரும் செய்திருக்கவில்லை என்பது ஒரு நல்ல செய்தியாகும். சாத்தியமற்ற ஒரு காலக்கெடுவுடன்கூடிய ஒரு வேலை தங்களிடம் ஒப்படைக்கப்படும்போது, தங்களுடைய உண்மையான பலத்தைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகச் சிலர் அதைப் பார்க்கின்றனர். அதில் வெற்றியடைவது கடினமாக இருக்கும் என்று தெரிந்தும் அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள அவர்கள் தயங்குவதில்லை.

முட்டுக்கட்டைகள் எந்த இடத்தில் புதிய வாய்ப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனவோ, அந்த இடத்திலிருந்துதான் நம்முடைய சிறந்த யோசனைகள் வருகின்றன.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (8) – ரயன் ஹாலிடே

MUST READ