விஜயை, பாஜக கூட்டணிக்கு கொண்டு செல்ல முயற்சிப்பது அந்த கூட்டணிக்கு பின்னடைவைதான் ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் குறித்து விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் நடிகர் விஜயின் பெயரை சேர்க்க வேண்டும் என்பது வழக்கறிஞராக எனது தரப்பு வாதம். இல்லாவிட்டால் குற்றப்பத்திரிகையில் நிற்காமல் போய்விடும். கவனக்குறைவால் ஏற்பட்ட மரணங்கள் இது. கிரிமினில் நெகிலிஜன்ஸ்-ஐ நிருபிப்பது மிகவும் கடினமாகும். விஜய்யின் வாகனத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கேட்டு, ஆதவ் அர்ஜுனாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த காட்சிகள் 8k என்று சொல்வதால் காட்சிகள் மிகவும் துல்லியமாக இருக்கும். அந்த வாகனத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில் முகங்கள் இன்னும் தெளிவாக தெரியும். அதை அவர்கள் காவல்துறைக்கு கொடுக்க வேண்டும்.

ஆதவ் டெல்லி சென்று, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்கிற போது, வண்டியின் சிசிடிவி காட்சிகளை கொடுக்க மாட்டேன் என்கிற நிலைப்பாட்டை அவர் எடுக்க வேண்டும். ஏனென்றால் அந்த வீடியோக்களை கொடுத்தால் நிறைய விஷயங்கள் விஜய்க்கு எதிராகத்தான் முடியும். சம்மன் உடனடியாக வழங்கிவிட்டதால் அது ஆதாரமாகி விட்டது. வீடியோ காட்சிகளை அவர் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால், குற்ற விசாரணை நடைபெறுகிறபோது அதற்கு இடையூறு ஏற்படுத்தினால், அதுவே பெரிய குற்றமாகும். தனி விமானத்தில் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ள நிலையில், அவருடன் சென்றவர்களின் பெயர் பட்டியலில் என்.எஸ்.ஜி கமாண்டோ அதிகாரிகளின் பெயர்களும் உள்ளன. உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கினால் தான் என்எஸ்ஜி கமோண்டோக்களை அனுப்ப முடியும். அப்படி தனி விமானத்தில் டெல்லிக்கு போக வேண்டிய அவசரம் என்ன என்பதும் கேள்விக்குறியதுதான்.
கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக தமிழக பாஜகவில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகிறது. முதலாவது நயினார் நாகேந்திரன் சொன்னபோது அரசியல் ரீதியாக மாறவில்லை. அண்ணாமலை வந்த பிறகுதான் அரசியல் ரீதியாக மாறியது. அதன் பிறகு ஹேமாமாலினி குழு வந்தது. இதே ஹேமாமாலினி உ.பி. கும்ப மேளா இறப்புகளுக்கு என்ன விதமான கருத்துக்களை தெரிவித்தார் என்பது வீடியோ ஆதாரமாகவே உள்ளது. பாஜக குழு வருகைக்கு அரசியல் நோக்கம் இருப்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன். விஜயை இழுப்பதுதான் அரசியல் நோக்கம் என்றால்? பாஜக மிகப்பெரிய தவறை செய்கிறது. இது வேலைக்கு ஆகாது.
விஜயை பொருத்தவரை பாஜகவை பாசிச கட்சி என்று சொல்லியாகிவிட்டது. விஜய்க்கு திமுக ஆதரவு சிறுபான்மையினர் வாக்கு வங்கியில் ஒரு பகுதி போய்விடும் என்று சொல்லி வருகிறோம். தற்போது பாஜகவை நோக்கி விஜய் பயணப்பட்டு விட்டார் என்கிறபோது, சிறுபான்மையினர் வாக்கு வங்கி திமுகவுக்கு முழுமையாக வந்துவிடும். அது திமுகவுக்கு தான் லாபமாகும். 2 சதவீதம் வாக்குகள் என்கிறபோது 4 ஆயிரம் வாக்குகள். அது குறைந்தால் ஒரு தொகுதியே போய்விடும்.
மாஸ் லீடர்ஷிப் என்பது வெறும் பாப்புலாரிட்டியால் மட்டும் வருவது அல்ல. பெருந்திரள் கூட்டத்தை நீங்கள் எப்படி கையாள போகிறீர்கள் என்பதும்தான். சினிமாவில் இருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அப்படி யார் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். விஜயால் மக்களை கையாள முடியவில்லை என்று எதார்த்தத்தில் நிரூபித்துள்ளார். கரூரில் இருந்து திருச்சி வருகிற ஒன்னே கால் மணி நேரத்தில் அவரிடம் என்ன சிந்தனை இருந்தது? ஏன் அவர் திருச்சியில் இதே சதி கோட்பாடு. திமுக தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லவில்லை? ஏன் ஓடுகிறார்?
விஜயிடம் தலைமைப் பண்பு இல்லை. 3 நாட்களாக வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாரா? ஹேமாமாலினி வந்த பிறகு, எதற்காக வீடியோ வெளியிடுகிறார்? அப்படி எதிர்வினை ஆற்றுகிறபோது, அவர் பாஜகவை நோக்கி செல்கிறார் என்கிற போது அவருடைய வாக்கு வங்கி பாதிக்காதா? சிந்தனையே இல்லை. அரசியல் தொலைநோக்கே இல்லாத ஒரு சினிமா பிரபலத்தால் என்ன சாதிக்க முடியும்? விஜய், கரூர் இந்த புள்ளியில் ஏதோ ஒரு இடத்தில் பாஜக இணையப் பார்க்கிறது. எந்த இடத்தில் பிரச்சனை என்றால் அப்படியே பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தாலும், அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டும். அது விஜய்க்கு சாத்தியப்படுமா? அப்போது பாஜக என்ன கணக்கு போடுகிறார்கள். அவர்கள் கணக்குப் பாடத்தில் பெயில்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கலாம். ஆனால் அப்படி ஜாமின் கேட்பதன் மூலமாக அவர்களுக்கான அரசியல் பலம் குறையும். விஜயே, என்னை வேண்டுமானல் பழிவாங்குங்கள். எனது தொண்டர்களை விட்டு விடுங்கள் என்று சொல்கிறார். உங்களை எங்கு பழிவாங்குவது? உங்களுடைய தொண்டர்களை தான் நீங்கள் பவுன்சர்களை வைத்து தூக்கிவீசுகிறீர்களே. நீங்கள் ஏதோ தொண்டர்களுக்கு பாதுகாப்பு மாதிரி பேசுகிறீர்கள். முதலமைச்சரை பொறுத்தவரை அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். மரணத்தை அரசியலாக்க கூடாது என்பதுதான் அது. எந்த தலைவர்களும் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். நான் அரசியலாக்க விரும்பவில்லை என்றும் சொல்லிவிட்டார். அதே நிலைப்பாட்டை தான் நிர்மலா சீதாராமனும் சொன்னார்கள்.
அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்கள் இந்த நிலைப்பாட்டை தான் எடுப்பார்கள். சதி கோட்பாடு என்று சொன்னது தவெக தான். அப்படி சதிக் கோட்பாடு என்று வந்திருந்தால் அதை எதிர்கொள்ள வேண்டியது உள்ளுர் தவெக தான். ஆனால் அங்கே எதுவும் ஆகவில்லை. ஏதோ ஒரு வகையில் இதற்கு திமுக, அல்லது தவெக தான் காரணம் என்றால் அதை மக்கள் பிரதிபலித்து இருப்பார்கள் அல்லவா? ஆளுங்கட்சியான திமுக சிக்காவிட்டாலும், தவெக சிக்கி இருக்கும் அல்லவா?
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜய் 2 வாரம் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார். 3வது வாரம் தொடங்குவாரா? என்பது தெரியாது. அடுத்து மழைக்காலம் தொடங்க உள்ளது. விஜய் பயணத்தை ஒத்திவைத்திருப்பதன் மூலம் அவருக்கு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிற திறமை இல்லை என்பது தெரிந்துவிட்டது. கரூருக்கே அவரால் போக முடியவில்லை. அல்லது ஆறுதல் தெரிவித்து வீடியோ போட முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு போன் செய்தாவது பேசி இருக்கலாம்? இறந்துபோன 41 பேரில் 21 பேர் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் என்று செந்தில் பாலாஜி சொல்கிறார். விஜயோட அரசியல். அவர் சொல்கிற விஷயங்கள் எல்லாம் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக டிசைன் செய்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என்பதுதான் இதில் உள்ள சிக்கல்.
விஜய் என்பவர் திரைப்பட நடிகராக வந்தார். அவரை பார்க்க நிறைய பேர் வந்தார்கள். அவர்கள் எல்லாம் வாக்குகளாக மாறுவார்களா? நடிகராக விஜயை பார்க்க வந்த ரசிகர்கள் அடுத்த அடுத்த கூட்டங்களுக்கு வருவதற்கு மிகவும் தயங்குவார்கள். விஜய்க்கே ஒரு தயக்கம் வந்துவிடும். காரணம் தவெகவுக்கு அமைப்பு ரீதியான கட்டமைப்பு இல்லை என்பது தற்போது தெரிந்துவிட்டது. கரூரில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உள்ளூர் தவெக நிர்வாகிகள் சென்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும். ஆனால் ஆபீசையே மூடிவிட்டார்கள். என்னுடைய புரிதல் என்ன என்றால் இனி விஜய் அரசியலில் நீடிக்கலாம். பாஜக அதை விரும்புகிறது. ஏனென்றால் விஜய் வாங்குகிற வாக்குகள் எல்லாம் திமுகவுக்கு எதிரான வாக்குகள் தான். அது அவர்களுக்கு லாபம்தான். திமுக என்ன நினைக்கிறது என்றால்? எதுவாக இருந்தாலும் நமக்கு எதிரான வாக்குகள் தானே. அதுநமக்கு தானே லாபம் என்று நினைக்கிறது. இரண்டு வகையான எண்ண ஓட்டங்கள் இதில் தெரிகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.