spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபொங்கல் - புதிய பண்பாட்டின் தொடக்கம்!

பொங்கல் – புதிய பண்பாட்டின் தொடக்கம்!

-

- Advertisement -

பொங்கல் வெறும் பண்டிகை மட்டுமல்ல, இது உழைப்பின் பெருமையையும், இயற்கையை மதிக்கும் உயரிய தமிழர் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இதனை சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மகிழ்வுடன் அனைவரும் கொண்டாடுவோம்!பொங்கல் - புதிய பண்பாட்டின் தொடக்கம்!இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், திராவிட இயக்கம் தனக்கென்று ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது என்றாலும், தொடங்கப்பட்ட காலத்தில் அது ஒரு சமூகப் பண்பாட்டு இயக்கமே!

சாதிப் பட்டத்திற்கு மாறாகக் கல்விப் பட்டம், பெண் அடிமைத் தனத்தைப் போக்கப் பாலினச் சமத்துவம், வைதீகத்திற்கு எதிராகப் பகுத்தறிவு, சமஸ்கிருதம் கோலோச்சிய இடத்தில் தமிழ் என்னும் இத்தகைய பண்பாட்டு எதிர்வுகளே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்! இதனைத்தான் சுருக்கமாக, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என நாம் கூறுகிறோம்!

we-r-hiring

இந்த இயக்கம் தம் கோட்பாட்டினை மக்களிடையே பரப்ப பல்வேறு இயக்கங்களை நடத்தியது! எழுதியும், பேசியும் கருத்துகளை மக்கள் முன் வைத்தது! இந்த வடிவங்களில் இருந்து சற்று வேறுபட்டு, ஒரு விழாவை தமிழர்களின் விழாவாக – புராணக் கலப்பற்ற விழாவாக நிறுத்த முற்பட்டது திராவிட இயக்கம்! அந்த விழாவே பொங்கல் விழா!பொங்கல் - புதிய பண்பாட்டின் தொடக்கம்!

பொங்கல் விழா என்பதைத் தமிழர் திருநாள் என்று பேராசிரியர் கா.நமச்சிவாயனார் அழைக்கத் தொடங்கினார். அது ஒரு நல்ல மாற்றமாக இருந்தது. ஆனால் அதனைத் திராவிட இயக்கத் தலைவர்களே மக்கள் மொழியாக விழாவாக மாற்றினார்கள்!

அய்யா பெரியார் அவர்கள். அறிவுத்தளத்திலேயே இயங்கினார். ஆனால் மக்களிடம் உணர்வார்ந்த ஓர் எழுச்சி தேவைப்பட்டது! அதனை அறிஞர் அண்ணாவும், அவரைப் பின்பற்றி வந்த தலைவர்களும் புரிந்து செயல்பட்டனர். புராணக் கதைகளிலிருந்து மக்களை விடுபட வைத்து, இனம், மொழி என்னும் அடித்தளத்தில் பொங்கல் விழாவினைக் கட்டி எழுப்பினர்!

பொதுவாகவே உழைக்கும் மக்களுக்கு விழாக்கள் தேவைப்படுகின்றன. அதிகாலை தொடங்கி இரவு மட்டும் உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களுக்கு ஓய்வு ஒரு மாறுதலும், கண்டிப்பான தேவையும் ஆகும்! அதனை விழாக்கள்தான் அவர்களுக்குத் தருகின்றன!

இதனைப் புரிந்துகொண்ட ஆரியம், அவர்களை மூட நம்பிக்கை விழாக்களில் மூழ்கடித்தது! மக்களை மேம்படுத்த நினைத்த திராவிடம், இனம், மொழி சார்ந்த தமிழர் திருநாள் விழாவை மக்களிடம் கொண்டு சென்றது!

அதனைத்தாண்டி, உழைப்பை குறிப்பாக வயல்களில் பாடுபட்டு அறுவடையைச் செய்து முடித்திருக்கும் உழவர் பெரு மக்களை இந்த விழா கொண்டாடியது! அவர்களுக்குத் துணையாக இருந்த கால்நடைகளுக்கும் சேர்த்து விழா எடுத்தது! இவ்வாறு, ஒரு புராண அடிப்படையிலான விழா, மக்கள் விழாவாக திராவிட இயக்கத்தினால் மாற்றப்பட்டது!

உழைத்த மக்களுக்கும், விளைத்துக் கொடுத்த நிலத்திற்கும் நன்றி சொல்லும் விழாவாக அது உருப்பெற்ற போது, பொங்கல் விழா பொருளும் பொருத்தமும் உடையதாக ஆயிற்று! ஆம், திராவிட இயக்கம் உருவாக்கிய புதுப் பண்பாட்டின் தொடக்கமே பொங்கல் விழா!பொங்கல் - புதிய பண்பாட்டின் தொடக்கம்!

அரசியலில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு முன்பு, பண்பாட்டுத் தளத்தில் நாம் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிடுவார் சீனப் புரட்சியாளர் மாவோ! புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்பார் அவர்! அப்படித் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் உருவாக்கிய, புராணக் கலப்பற்ற, புதிய பண் பாட்டுப் புரட்சிதான் பொங்கல் விழா!

வாருங்கள் பொங்கல் விழாவை, தமிழர் திருநாளை அனைவரும் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மகிழ்வுடன் அனைவரும் கொண்டாடுவோம்!

இருள்விலகி விடியச் செய்யும் உதயசூரியன் போல்…தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சமாய் கழக ஆட்சி தெடரும் – முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து!!!

MUST READ