கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்களை இணையதளம் மூலம் நீக்க முயற்சித்த நபர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம், கர்நாடக காவல்துறைக்கு வழங்கிட வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டது குறித்த ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:-கர்நாடகா மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டது குறித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த விவகாரம தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாகூர், ராகுல்காந்தி தோல்வி விரக்தி காரணமாக ஆதாரமற்ற முறையில் குற்றம்சாட்டுவதாக விமர்சித்துள்ளார். முதலில் ராகுல்காந்தியின் கேள்விக்கு, அனுராக் தாகூர் பதில் அளிக்கும்போதே தேர்தல் ஆணையமும், பாஜகவும் கூட்டு களவாணிகளா? என்கிற கேள்வி வரும். ராகுல்காந்தி குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக சொல்கிறார். கோதாபாய் என்கிற பெயரில் பலரின் பெயரை நீக்கியுள்ளனர். ஆனால் அவர் தான் அப்படி யாரையும் நீக்கவில்லை என்று சொல்கிறார். இவை எல்லாம் ஆன்லைனில் போன் செய்ததன் மூலம் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி சொல்கிறார். எனவே அப்படி ஆன்லைனில் போன் செய்தவர்களின் ஐ.பி. அட்ரஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.

குறிப்பாக கர்நாடகாவில் இருந்து பெயர்களை நீக்க ஆந்திராவில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் போன் செய்துள்ளதாகவும் ராகுல்காந்தி சொல்கிறார். அப்படி வாக்காளர்களின் பெயர்களை நீக்கியவர்களின் ஐ.பி. அட்ரசை தேர்தல் ஆணையத்தால் சொல்ல முடியும். அதை சொல்லாமல் தேர்தல் ஆணையம் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள் என்றால்? யாருடைய குற்றத்தையோ தேர்தல் ஆணையம் ஏன் மறைக்க வேண்டும் என்கிற சந்தேகம் எழும். இந்த நிலையில், தேர்தல் ஆணையம், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், ஆன்லைன் மூலம் வாக்காளர்களை நீக்குவது இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் தரப்பில் 2019ல் இணையதளம் வாயிலாக வாக்காளர்களை நீக்கலாம் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கும் ஆணையம் பதில் அளிக்கவில்லை. மேலும், இணைதளம் வாயிலாக வாக்காளர்களை நீக்க முயற்சித்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடக மாநில சிபிசிஐடி போலீசார் 18 முறை கேட்டும் இந்த விவகாரம் தொடர்பான விவரங்களை வழங்க மறுப்பது ஏன்? மேலும் இந்த விவகாரத்தில் 7 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் ஐ.பி. அட்ரஸ் விவரங்களை கர்நாடக காவல்துறைக்கு வழங்கிட வேண்டும் என்றும் ராகுல் கெடு விதித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி, மத உணர்வுகளை தூண்டுகிற விதமாக வெளிப்படையாக பேசினார். அவர் பிரச்சாரம் செய்ய உடனடியாக தடை விதித்து இருக்க வேண்டும். சரியான தேர்தல் ஆணையர் இருந்திருந்தால் அப்படி தடை விதித்து இருப்பார். மோடியின் மதவெறி பிரச்சாரத்தை பார்த்து தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் என்றைக்கு வாய் மூடி மவுனமாக இருந்தாரோ அன்றைக்கே தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை போய்விட்டது. ஞானேஸ்குமார், ராகுல்காந்திக்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய பிறகு அவர் மீது எப்படி நம்பிக்கை வரும். தேர்தல் ஆணையத்தில் உள்ள சில நேர்மையான அதிகாரிகள் தான் முறைகேடுகள் குறித்த விவரங்களை வழங்கியதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அப்போது அரசு அந்த அதிகாரிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தொல்லை கொடுக்க முயற்சிக்கும்.

இந்த விவகாரத்தில் உறுதியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது. தேர்தல் ஆணையமும் அது குறித்த தெளிவான பதிலை வழங்காது. ராகுல்காந்தி ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்காவிட்டால் ராகுல்காந்தி நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றம் தான் நமக்குகான இறுதி வாசல்படி. ராகுல்காந்தி, வாக்கு திருட்டு மோசடி இளைஞர்களின் எதிர்காலம் குறித்த விஷயம், நான் சொல்வதை சொல்லிவிட்டேன். இது குறித்து அடுத்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொன்னார். இதற்கு பாஜக எம்.பி. நேபாளத்தை போன்று அரசுக்கு எதிரான சூழ்நிலையை ராகுல் ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறார்.

பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், பாஜக – தேர்தல் ஆணையம் எதாவது சொல்லி தப்பிவிடலாம். ஆனால் கர்நாடாகவில் ராகுல் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமானது. இந்த ஆதாரங்களுடன் ராகுல்காந்தி நீதிமன்றத்திற்கு சென்றார் என்றால்? நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவாகரத்தை காங்கிரஸ் சாமர்த்தியமாக கையாளுகிறது. ராகுல்காந்தி தன்னிடம் ஹைட்ரஜன் பாம் உள்ளதாக சொல்வதன் மூலம் இன்னும் தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை கொண்டுவரப் போகிறார் என நினைக்கிறேன். தவறு எங்காவது நடைபெற்றால் விசாரிக்கிறோம் என்றாவது தேர்தல் ஆணையம் சொல்லலாம். ஆனால் அதை மறுக்கிறார். எனவே தேர்தல் ஆணையம் வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


