விஜய்க்கு ஜாதகப்படி வி என்று தொடங்கும் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாகவும், அனேகமாக அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டப்பட்டு இருக்கிறது. சென்னை அல்லது திருச்சியில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேவேளையில் தவெக – காங்கிரஸ் உறவை எப்படியாவது வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரசில் உள்ள சில எம்.பி-க்கள் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விஜய்க்கு 25 சதவீதம் வரை வாக்குகள் உள்ளதாகவும், தவெக உடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிடும் என்று சொல்கிறார்கள். காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். மேலும் காங்கிரசில் இருக்கும் ஆர்எஸ்எஸ் ஆட்கள் விஜயும், ராகுல்காந்தியையும் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய அளவில் திமுகவின் தேவை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், மாநில அரசியலுக்காக அதை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள்.

இந்நிலையில், கரூரில் கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்டவர்களுடன் ராகுல்காந்தியை சந்திக்க வைக்க, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி முயற்சி மேற்கொண்டு வருகிறார். ராகுல்காந்தி, விஜய் சந்திப்பு என்பது இனி சாத்தியமற்றது. விஜய் அந்த கட்டத்தை தாண்டி பாஜகவின் கைகளுக்குள் சென்றுவிட்டார். வழக்கு சிபிஐக்கு மாற்றப் பட்டதும், அதை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளும் இதை உறுதி படுத்துகின்றன. 1977 முதல் தமிழ்நாட்டில் 10 சதவீதம் பேர் மாற்று சக்திகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர். அப்படி விஜயையும் மாற்று சக்தி என்று நினைத்தார்கள். திமுக எடுத்த ரகசிய கருத்துக்கணிப்பு என்று வெளியாகிய செய்தியில் விஜய்க்கு 23 சதவீதம் வாக்குகள் உள்ளதாக சொல்கிறார்கள். திமுக ரகசியமாக எடுத்த கருத்துக்கணிப்பை எப்படி அவர்களே வெளியிடுவார்கள்?. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயின் பிம்பம் ஒட்டுமொத்தமாக காலியாகிவிட்டது. புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா போன்றவர்களை இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பது பெரிய கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அலட்சியமாக உள்ளது.

விஜய் பாஜக பக்கம் சாயக்கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் அவருடன் பேசுவதாக சொல்வது தவறு. பாஜகவின் பிடியில் தான் தவெக உள்ளது. பாஜக சொல்லிதான் விஜய் தவெக என்கிற கட்சியை உருவாக்கினார். தற்போது விஜய் சிக்கலில் மாட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு விஜயின் பிரச்சார வாகனத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை, சிபிஐ கைப்பற்றி விசாரித்தாலே அதில் பல விஷயங்கள் வெளியே வரும். வேனுக்குள் யார் இருந்தார்கள்? அவர் வேனுக்குள் என்ன செய்து கொண்டிருந்தார். இதுபோன்ற பல விஷயங்கள் சிபிஐ விசாரணையில் தான் தெரியவரும். வேணுக்குள் விஜய்க்கு வேண்டிய நபர் ஒருவர் இருந்தார் என்றும், அந்த வீடியோ காட்சிகள் ஜனநாயகன் படத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் சொல்கிறார்கள். சிபிஐ விசாரணையில் எல்லா விஷயங்களும் தெரியவரும்.

எஸ்.ஐ.டி விசாரணையிலோ, ஒருநபர் ஆணைய விசாரணையிலோ உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்திற்கு செல்லலாம். தற்போது நேரடியாக சிபிஐக்கு சென்றுவிட்டனர். அவர்கள் விஜய் தான் குற்றவாளி என்று சொன்னால் எங்கே மேல்முறையீட்டிற்கு செல்வார்? விஜய் முழுக்க முழுக்க பாஜகவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டார். தற்போது விஜய் பயணத்திற்காக ஹெலிகாப்டர் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய், ஜாதகப்படி வி என்று தொடங்குகிற தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ஜாதகம், ஜோசியம் விவகாரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். விருகம்பாக்கம் தொகுதி, விஜய் பிறந்து வளர்ந்த தொகுதியாகும். சென்னையில் இருக்கும் சிறிய தொகுதியாகும். அனேகமாக அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


