விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவருடன் கூட்டணி அமைத்து போட்டியிட நாதக விரும்பியது. ஆனால் அவர் சீமானையோ,நாதகவையோ அனுசரித்து வர மாட்டார் என்பது தெரிந்ததால் சீமான் அவர் மீது விமர்சனத்தை முன்வைப்பதாக நாதக கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

சீமான் உடனான கருத்து வேறுபாடு மற்றும் நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைபாடுகள் குறித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது :- என்னை குறித்து சீமான் பேசிய ஆடியோ கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் தேதி அன்று வெளியானது. அதற்கு பிறகு முழுமையாக கட்சி நடவடிக்கைகளை ஓரங்கட்டிவிட்டு அமைதியாக இருக்க தொடங்கிவிட்டேன். நாதக தொடங்கியபோது கோவையில் சீமானுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடியதன் வாயிலாக என் மாவட்டம், அண்டை மாவட்டங்களில் நடத்திய போராட்டம் தான் எங்களை அடையாளப்படுத்தியது. அந்த ஆடியோ லீக் ஆன பிறகு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட ஆடியோ குறித்து விசாரிக்க சீமானுக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. பின்னர் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பினார். அதில் ஆடியோவில் பேசியது நான்தான். கட்சி என்னுடையது. இருக்க விருப்பம் இருந்தால் இரு.. இல்லாவிட்டால் வெளியே போ… என்று சொன்னார். 21 ஆண்டு காலம் நாதகவில் இருந்த எனக்கு எதிராக ஆடியோ வருவதற்கு காரணம் வெற்றிக்குமரன் தான்.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் வெற்றிக்குமரன். 2016 தேர்தலில் மதுரையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோற்றவர் ஜெயபாலன். அவரும், அதே தொகுதியில் போட்டியிட்ட வெற்றிகுமரனும் நண்பர்கள் ஆகின்றனர். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததால் ஜெயபாலன் உதவியோடு, வெற்றிக்குமரன் கொடைக்கானல் பகுதியில் அரசு நிலங்களுக்கு போலியாக பட்டா வாங்கினார். அவற்றை ஆதாரத்துடன் கட்சியினர் மூலமாக திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் அளித்தேன். தன்னுடைய வருமானத்தில் சிவசங்கரன் கைவைத்துவிட்டான் என்கிற பகையின் காரணமாக என்னை எதிரியாக சித்தரித்து, நான் கல் குவாரி உரிமையாளர்களிடம் பணம் வாங்குவதாக சித்தரித்து சீமானிடம் சொல்லிக்கொடுத்தார். என்னுடைய ஆதங்கம் குற்றச்சாட்டு குறித்து என்னிடம் ஒரு வார்த்தை விளக்கம் கேட்டிருக்கலாம். நான் எந்த தவறும் செய்யாதபோது என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நான் இன்று வரை கட்சியை விட்டு போகவில்லை. அவரும் என்னை கட்சியை விட்டு நீக்கவில்லை. இன்று நான் சீமானிடம் சொல்வது என்ன என்றால் யாராவது ஒருவர் புகார் சொன்னால் வாதியை மட்டும் கேட்காதீர்கள் பிரதிவாதியையும் கேளுங்கள்.
வெற்றிக்குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்காக உண்மையான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால் சீமான் குடும்பத்தினர் குறித்து அவர் தவறாக பேசிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் உண்மை தன்மை தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை நாதகவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தமிழ்தேசியத்தை நேசிக்கின்றனர், பிரபாகரன் படத்தை நெஞ்சில் சுமக்கிறார்கள். மேடையில் பேசுகிற சீமான் சரியாக இருக்கிறார். தமிழ்தேசியம், திராவிடத்தை எதிர்க்கும் சித்தாந்திற்கு உண்மை உள்ளவராக சீமான் இருக்கிறார். அதில் தொடர எனக்கு முழுமையான விருப்பம் உள்ளது. நான் ஆரம்பத்தில் இருந்து சீமானையும், நாதகவையும் பார்க்கிறேன். அவர்கள் தமிழ்தேசியத்திற்கு சரியானவர்கள் என்று நினைக்கிறேன். ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் 234 தொகுதிகளிலும் ஒரு சீமான் தேவை. அவரை போன்று மேடைகள் மூலமாக பொதுமக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்க்க ஒரு பேச்சாளர் வேண்டும். ஒரு அரசு அதிகாரியை சந்திப்பதற்கும், கட்சியினருக்கு பிரச்சினை என்றால் அதை எதிர்கொள்வதற்கும் நம்பிக்கையான சட்டம் தெரிந்த ஒருவர் தேவை. சீமானை போன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தளபதி தேவை. அதை உருவாக்காவிட்டால் கட்சியை வளர்த்து எடுக்க முடியாது.
விஜயின் அரசியல் வருகைக்கு பின்னர் சீமானின் விமர்சனங்கள் கடுமையாக இருந்தன. சினிமாத்துறையில் விஜய் பாதிக்கப்பட்டபோது சீமான் குரல் கொடுத்தார். விஜய், சீமானின் பேச்சுகளுக்கோ, அல்லது அவருடைய அன்பிற்கோ எந்த இடத்திலும் மதிப்பு அளிக்கவில்லை. சீமானுக்கு அவர் நன்றியும் சொல்லவில்லை. நன்றி உணர்வுடன் நடந்துகொள்ளவும் இல்லை. என்னை பொருத்தவரை விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர். நாம் ஒரு கட்சி. அவருக்கு தூரமாக நின்று வாழ்த்து சொல்வோம். எப்படி கலைஞர், ஜெயலலிதா, மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தோமோ அதுபோன்று விஜயின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்வோம். அதைவிடுத்து நாம் முழுமையாக அவர்களை ஆதரிப்பதற்கு நாம் எதற்காக தனியாக கட்சி வைத்து இருக்க வேண்டும். ஒருபோதும் விஜய், சீமானையோ, நாம் தமிழர் கட்சியையோ அனுசரித்து வர மாட்டார். கூட்டணிக்கு வரவும் மாட்டார். என்னை போன்றவர்கள் அப்படி கூட்டணி அமைய விரும்பினோம். தற்போது அதை தவறு என்று உணர்கிறோம். சீமானும் அதை உணர்ந்துதான் விஜயை விமர்சித்து பேசுகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.