அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் வரும் 27ஆம் தேதி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெக நிகழ்ச்சிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை, நீதிமன்றம், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆலோசனைகள் சொல்லி வருகின்றனர். அப்போது காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை உள்அரங்கத்தில் நடத்தியது, 2000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கியது, க்யூ.ஆர் கோடு வைத்து அவர்களை உள்ளே விட்டது போன்றவற்றை செய்ய தொடங்குகிறபோது நாம் அதை உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் இப்படியே காலம் முழுவதும் மக்களை சந்தித்து விட முடியுமா? என்கிற கேள்வியும் எழுகிறது. எனினும் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு முதன் முறையாக பொது நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார்.
அந்த சம்பவத்தால் அவர்களுக்கு வருத்தமோ, பதற்றமோ இருந்தால், அது முடிவுக்கு வர வேண்டும். இது ஒரு தொடக்கமாக இருந்தால் நமக்கு சந்தோஷம்தான். விஜய்க்கு ஊடகங்களின் பலம் இருக்கிறது. அது மட்டும் போதும் என்று அவர் நினைத்தால், விஜய் தப்பு செய்கிறார் என்று அர்த்தம். ஊடகங்களின் பலம் ஒரே இடத்தில், ஒரே பார்வையில் எப்போதும் இருக்காது. புதிய வரவுகள், புதிய பிரச்சினைகள் என்று மாறிக்கொண்டே இருக்கும் என்பதை விஜய் புரிந்துகொள்வார். அதனால் கரூர் சம்பவத்திற்கு பிறகான ஒரு நிகழ்ச்சியில் இந்த கட்டுப்பாடுகள் அவசியமானது தான்.

மக்களை தான், தலைவன் சந்திக்க வேண்டும். தலைவனை பார்க்க மக்கள் வரக் கூடாது என்று விஜய் அரசியல் மீது நான் உள்பட பலரும் விமர்சனம் வைத்துள்ளோம். அதனால் தான் இப்படி உள்அரங்கில் மக்களை சந்திப்பது நீண்ட காலத்திற்கு எடுபடாது என்று சொன்னேன். பவுன்சர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று முதல் நாளில் இருந்தே சொல்லி வருகிறேன். அது தமிழ்நாட்டு அரசியலுக்கு சரிவராது.
எம்ஜிஆர் ஏழைகளோடு நெருங்கி வந்த அந்த காட்சி காலங்காலத்திற்கு நிற்கிறது. பொதுமக்கள் தன்னை தொடுவதை எம்ஜிஆர் அனுமதித்தார். அப்போது தான் உணர்வு கலந்த பற்றுதல் வரும். எம்ஜிஆரை ஒரு மூதாட்டி தான் தொட்டிருப்பார். அந்த புகைப்படம் குறித்து காலங்காலத்திற்கு பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். அப்படிபட்ட தமிழர்களிடம் நீங்கள் இந்த பாணி அரசியலை நீண்ட காலத்திற்கு செய்ய முடியாது. கரூர் சம்பவத்தில் இருந்து மீண்டு வருவதன் தொடக்கமாக இதை செய்வதில் தவறு கிடையாது.

தவெகவினரை கொள்கை இல்லாத கூட்டம், தற்குறிகள் என்று சொல்லக் கூடாது என்று திமுக எம்எல்ஏவே எதிர்ப்பதாக விஜய் சொல்கிறார். பொதுவாகவே தற்குறிகள் என்று யார் பேசினாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இதே வார்த்தையை எடப்பாடி பழனிசாமியை சொல்லி, அண்ணாமலை விமர்சித்தபோது அது அதீதமான வார்த்தை என்று சொன்னேன். எடப்பாடி பழனிசாமியை நான் காரணங்களின் அடிப்படையில் கடுமையாக விமர்சிப்பவன். ஆனாலும் நமக்கு 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த, அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள ஒருவரை நோக்கி அந்த வார்த்தையை சொல்லக்கூடாது என்று சொன்னேன். அதே மனநிலையில் இன்றைக்கும் சொல்கிறேன் அந்த வார்த்தையை சொல்லி யாரையும் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை.
முன்பு காசு வாங்காமல் கொள்கைக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட நிர்வாகிகள், இன்றைக்கு பணம் கொடுத்தால் தான் தேர்தல் பணிகளையே தொடங்குகிறார்கள். பணமே பிரதானமாக மாறிவிட்ட இந்த காலத்தில், தனிப்பட்ட தொண்டனை குறை சொல்வதில் பயனில்லை. அப்படி இருக்கும் போது ஒரு கட்சியினருக்கு கொள்கை இல்லை என்று குறிப்பிட்டு சொல்வது ஏற்புடையது அல்ல. மக்கள் பாதிக்கப்படுகிறபோது நீங்கள் குரல் கொடுக்கிறீர்களா?, அவர்கள் வேதனையில் நீங்கள் பங்கேற்கிறீர்களா? என்பதுதான் முக்கியம்.

விஜய் தன்னுடைய தேர்தல் அறிவிப்புகளாக சொன்ன 12 விஷயங்களில், எதுவுமே புதிது கிடையாது. திராவிட இயக்கங்கள் ஏற்கனவே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடங்கி நடத்தி, இன்றைக்கு வரை நிறைவேற்றிய, நிறைவேற்றி கொண்டிருக்கும் திட்டங்கள் தான். கிட்டத்தட்ட தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை இன்றைக்கு தான் தெளிவாக திட்டங்களுடன் சொல்கிறார். ஆனால் தன்னுடைய ஆட்சியில் லஞ்சம் என்பது இருக்காது என்று சொல்ல தவறி விட்டார். அதுதான் மாற்றமாகும்.
திமுக, அதிமுக ஆட்சியில் லஞ்சம் புரையோடி போய்விட்டது. அப்போது புதிதாக வருகிற ஒருவர் அதைதான் முக்கியமாக எடுக்க வேண்டும். ஒருவேளை இவ்வளவு நல்லாட்சி தருகிறேன் என்று சொல்கிற தன்னாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது என்று விஜய் முடிவுக்கு வந்துவிட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற அவருடைய விருப்பத்தை முதலில் பாராட்ட வேண்டும்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனின் அண்மை கால செயல்பாடுகளை உற்று நோக்கும்போது அவர் தடுமாற்றத்துடன் இருப்பது தெரியும். கடைசியாக கிடைத்த தகவலின் படி நாளை மறுநாள் அவர் விஜயை சந்தித்து தவெகவில் இணையப் போகிறார் என்கிற செய்தி வருகிறது. விஜய்க்கு அது மிகப்பெரிய பலமாக மாறும். அரசியல் அவர்களுக்கு தெரியவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியவில்லை என்பது போன்ற விமர்சனங்களுக்கு பதிலடியாக அமையும். விஜய்க்கு 10 -15 சதவீதம் வாக்குகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அவருடைய கட்சிக்கு கட்டமைப்பே கிடையாது. செங்கோட்டையன் போன்றவர்கள் அங்கே போனால் நிச்சயமாக அது விஜய்க்கும், அவருடைய கட்சிக்கும் பலமாக அமையும். அதேநேரத்தில் தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் இது அதிமுகவுக்கு நல்லது அல்ல. இது அதிமுகவின் அழிவை நோக்கிய பயணத்தில் முதல் படியாக இருக்கும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவின் அடித்தளத்தை பாதுகாக்கவோ, அல்லது பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்கிற பெருந்தன்மை கலந்த மனப்பாண்மை இல்லாததால் தான், ஒபிஎஸ் தொடங்கி எடப்பாடி வரை இருவரும் சேர்ந்து செய்த தவறுகள் இந்த நிலைமைக்கு காரணமாகும். தற்போது செங்கோட்டையன் வெளியே போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் இருந்தும் பிரபலங்கள் போக தொடங்கினால், அது அதிமுகவின் அழிவுக்கு முதல் படியாக இருக்கும். அது அதிமுகவுக்கு நல்ல செய்தி அல்ல. காரணம் செங்கோட்டையனை ஒரு தனி நபராக பார்க்க முடியாது. ஒரு பிம்பம் போகிறபோது அதனுடைய தாக்கம் வேறு மாதிரியாக பார்க்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


