அதிமுக ஆட்சியில் யாருக்கும் பங்கு வழங்கப்படாது என்று தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதன் மூலம் விஜய்க்கான கூட்டணி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தம்பிதுரை நேர்காணல் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி., கூட்டணி என்பது வேறு, ஆட்சி என்பத வேறு. கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஆட்சி பங்கு என்பது அதிமுக தான் என்று கூறியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை உள்ளது என்றும், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கேட்டு வந்தன. தற்போது தங்கள் கட்சிக்குள் என்ன பிரச்சினை இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் தான் தர முடியும். ஆட்சியில் பங்கு தர முடியாது என்று திட்டவட்டமாக தம்பிதுரை சொல்லிவிட்டார். முன்பு பவன் கல்யாண் மாடல் என்று ஒன்று சொல்லப்பட்டது. அதன்படி, விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் பட்சத்தில் அதிமுக தொண்டர்கள் அவர்களிடம் செல்ல முடியாது. தம்பிதுரை சரியான நேரத்தில் சரியான கருத்தை தெரிவித்துள்ளார். விஜய், பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தார். தம்பிதுரையின் பேட்டியின் மூலம் இனி அவர் அதிமுக உடன் கூட்டணிக்கு வந்தாலும் துணை முதலமைச்சர் ஆக முடியாது. அதிக இடங்களில் அவர் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சி தலைவர் ஆகலாம். ஆப்ஷன் எல்லாம் ஒவ்வொன்றாக குளோஸ் ஆகிறது. கூப்பிடுகிறபோது வந்தால் தான் வியாபாரம். என் பொருளை விற்கவில்லை நானே வைத்துக்கொள்கிறேன் என்று சொன்னால், அவருக்கும் கிடையாது.

அன்புமணி ராமதாஸ், பிரேமலதா போன்ற தலைவர்கள் தொண்டர்களிடம் பேசுகிற போது அடுத்த வருடம் நீங்கள் எல்லாம் அமைச்சர்களாக இருப்பீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் தலைமைக்கு ஏற்றபடி அவர்கள் உழைத்திருக்கிறார்களா? பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் உங்கள் வண்டியே ஓடும். ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணியே வேண்டாம் என்று சொல்லிவிட்டால், காங்கிரஸ் , தேமுதிக போன்ற கட்சிகளின் நிலை என்ன ஆகும்? ஆனால் திமுக, அதிமுகவின் பயத்தை, இவர்கள் தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். அதே போல், ப.சிதம்பரம், விஜய் கூட்டணி தொடர்பான பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஐவர் குழு அமைக்கப்பட்டதன் மூலம் அரசல் புரசலாக வந்த செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவுகட்டு என்று நம்புவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கே.சி.வேணுகோபால், விஜய் வந்தால் கேரளாவில் எளிதாக முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று ஆசையில் இருந்தார். அதில் ப.சிதம்பரம் மண்ணை அள்ளி போட்டிவிட்டார். உழைக்காமல் அடுத்தவர் முதுகில் சவாரிசெய்து பிழைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு சிதம்பரத்தின் ட்வீட், அண்ணாமலையின் பதிவு சரியான பதிலடியாகும்.

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் ஆசைப்படுகிறார் என்றால், அதற்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார். மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்கிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேருந்தை எடுத்துக்கொண்டு 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இப்படி உழைப்பு இருக்கக் கூடியவர்கள் தான் பெரிய பதவிகளுக்கு ஆசைப்பட வேண்டும். ஆனால் கூட்டணி சேர்ந்து கொள்கிறோம். பதவி கொடுங்கள் என்பது ஏற்புடைது அல்ல. இது பாஜகவுக்கு பெரிய அளவில் பொருந்தும். தம்பிதுரையின் கருத்து என்பது கூட்டணி ஆட்சி என்கிற பாஜகவின் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, எடப்பாடி பழனிசாமியை மட்டுமே சந்தித்தார். எதிர் தரப்பினரான செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிஎஸ் தினகரன் போன்றவர்களை அவர் சந்திக்கவில்லை. இதன் மூலம் அவர்களின் கனவில் மண் விழுந்துள்ளது. அதிமுகவில் அதிருப்தி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது முக்கியம் அல்ல. எடப்பாடி அடித்தால் தங்களால் தாங்க முடியுமா? என்று யோசித்து பார்க்க வேண்டும். எடப்பாடியை எதிர்ப்பவர்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் தரவில்லை என்பது, அவர்களை சந்திக்காததன் மூலம் தெரிந்துவிட்டது. டிடிவி தினகரனுக்கு, என்டிஏ உடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். எனவே இனி எடப்பாடி, அவரை கூட்டணியில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.

உதயநிதி ஒரு விஷயம் தான் சொன்னார். உதயநிதி அப்செட், செல்வப்பெருந்தகை ஆப்சென்ட் என்று சொன்னார். உடனடியாக காங்கிரஸ் வழிக்கு வந்துவிட்டது. காரணம் உதயநிதி அப்செட் ஆகினால், காங்கிரஸ் சட்டமன்றத்தில் ஆப்சென்ட் ஆகிவிடும் என்பதுதான் அதற்கு பொருள். காங்கிரஸ் தனியாக சென்றால் 10 இடங்களில் கூட வெல்ல மாட்டார்கள். செல்வப்பெருந்தகை அப்படி இல்லை என்று சொன்னார். அதனை தொடர்ந்து டெல்லி மேலிடம் காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் தவெகவுக்கு தான் பின்னடைவு. திடீரென அமித்ஷா, திமுகவில் வெற்றி பெறக்கூடிய அமைச்சர்களை தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு தவெக கூட்டணியே அவசியம் கிடையாது. பாஜக தரப்பில் அடுத்த பிரசாந்த் கிஷோர் விஜய்தான் என்று சொல்கிறார்கள். அவற்றை எல்லாம் விஜய் பார்ப்பார். விஜய் அரசியலை என்னவோ என்று நினைக்கிறார். ஆனால் அரசியல் வேடிக்கையாக போகும் பாருங்கள்.

பிரதமர் மோடி தமிழக வருகையின்போது அண்ணாமலையை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல் செய்ய முடியாது. அரசியல் என்பது சிலந்தி வலை போன்றது. அதில் பெரும்பாலானோர் போய் சிக்கி கொள்வார்கள். பாஜகவை பொருத்தவரை வெற்றிகளை எதிர்பார்ப்பார்கள். எனவே மோடி அண்ணாமலையை பார்த்தது என்பது அவரை மிரட்டுவதற்காக தானே தவிர, அவருக்கு கட்சியில் உயர் பதவி வழங்குவதற்காக அல்ல. டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை அழைத்திருந்தால் அவர்கள் பிரதமரை பார்க்க சென்றிருப்பார்கள். ஆனால் கூப்பிட வில்லை. அண்ணாமலை நாம் வளர்த்துவிட்ட நபர். அதனால் சொன்னால் கேட்டுக் கொள்வார் என்பதற்காக அழைத்துள்ளனர். பாஜக அன்பாக சொல்கிறது. கேட்டால் அண்ணாமலைக்கு நல்லது. கேட்கவில்லை என்றால் அண்ணாமலைக்கு பக்க விளைவுகள் வரும். ஏனென்றால் அண்ணாமலை உண்மையில் விவசாயம் எல்லாம் செய்ய வில்லை. அவர் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் செய்கிறார். அவர் நான் ஆசைப்படக் கூடாதா? சீமான் மாதிரி ஆகக்கூடாதா? என்று கேட்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


