கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது போன்ற மத்திய அரசின் பணிகளை, திமுக மேற்கொள்ளவில்லை என்று விஜய் குற்றம்சாட்டுவது அபத்தமானது என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியது தொடர்பாக பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டு உள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரத்தில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியது உளறலின் உச்சமாகும். கொஞ்சமாவது கூச்சம் இருக்கும் மனிதர்கள் இப்படி பேசுவார்களா? என்று சந்தேகம் எழுகிறது. வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக முதலில் நீதிமன்றத்திற்கு சென்றது தவெக தான் என்றும், தாங்கள் கொள்கை அற்றவர்களா என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். வக்பு சட்ட மசோதா ஏப்ரல் 3ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் 4ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இப்படி ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் கிடைத்த உடன், மார்ச் 27ஆம் தேதியே தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்பு மசோதாவுக்கு எதிராக ஒரு தனி தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மக்களவையில் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட அன்றைய தினமே சட்டமன்றத்தில் அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல் ஏப்ரல் 7ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தவெக தரப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவும் தவறாக இருப்பதாக கூறி, திருத்தப்பட்டு மீண்டும் 15ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கூச்சமே இல்லாமல் வக்பு மசோதாவுக்கு எதிராக முதலில் மனுத்தாக்கல் செய்ததாக சொல்கிறார்.

விஜய், அரசை கேள்வி கேட்பதை தவறு என்று நாம் சொல்லவில்லை. ஆனால் அடிப்படை அறிவோடு கேள்வியை கேட்க வேண்டும். பிறகு உங்களை தற்குறி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வார்கள். சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விஜய் சொல்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் பணி என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது. கர்நாடாக, பீகார் மாநிலங்களில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புகளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து விஜய் மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், அவர் வாய்பொத்தி மௌனமாக இருக்கிறார்.
அப்படி விஜய், மத்திய அரசிடம் கேட்டால் அமித்ஷா தொலைத்து விடுவார். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார். இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், கல்வி மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அப்போது, விஜய் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாத மத்திய அரசிடம் கேட்காமல், திமுகவிடம் கேட்பது ஏன்?

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் எஸ்எஸ்ஏ நிதியை தருவோம் என்கிறது மத்திய அரசு. அதை ஏற்றுக்கொண்டால் தமிழ்நாட்டின் கல்வி பாதிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அது குறித்து விஜய் கேள்வி எழுப்பவில்லை. எவை எல்லாம் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்படவில்லையோ அதை கொண்டுவந்து விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறார். தங்களை தற்குறி என்று சொல்லக்கூடாது என்று அஞ்சலை அம்மாளின் உறவினரே சொல்லிவிட்டார் என்கிறார் விஜய். எழிலன், தவெகவை நம்பி செல்கிற இளைஞர்கள் வலதுசாரிகளோ, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்களோ கிடையாது.
அவர்கள் விஜய் ஒரு நடிகர் என்கிற ஈர்ப்பினால் அவர் பின்னால் செல்கின்றனர். நாம் அவர்களை தற்குறிகள் என்று சொல்லி, அவர்களிடம் இருந்து விலகி நிற்கக்கூடாது. அவர்களிடம் திராவிட இயக்க அரசியலை எடுத்துச்சொல்லி அவர்களை நம் பக்கம் அழைத்துவர வேண்டும் என்று சொன்னார். அரசியல் தெரியாதவர்களை ஒதுக்கி விடாதீர்கள் என்று எழிலன் ஒரு உயர்ந்த நோக்கத்தோடு சொன்னார். அதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் விஜய், அவர்கள் கூடாரத்தில் இருந்தே எதிர்ப்பு வந்ததாக பேசுகிறார்.

ஏன்டா எங்களை தொட்டோம் என்று நினைத்து பீல் பண்ணுவீங்க… என்று விஜய் சொல்கிறார். உங்களை யார் தான் தொட்டது என்று இப்போதாவது சொல்லுங்கள். திமுக உங்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. நீங்களாக தான் திமுக, தவெக இடையே தான் போட்டி என்கிறீர்கள். என்றைக்காவது ஸ்டாலின், உதயநிதி உஙகளை குறித்து பேசியுள்ளனரா? கரூரில் போய் 41 பேர் செத்து போய்விட்டனர். அதில் உங்கள் மீது வழக்குப்பதிவு கூட செய்யவில்லை. எங்களை கூத்தாடி என்று சொல்கின்றனர். எம்ஜிஆரையும் இப்படிதான் சொன்னார்கள் என்று விஜய் சொல்கிறார். திமுகவில் இருந்த எம்ஜிஆரை, திமுக கூத்தாடி என்று விமர்சிக்குமா? எம்ஜிஆர் உள்ளிட்ட திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களை முதலமைச்சர் காமராஜர் தான் கூத்தாடிகள் என்று விமர்சித்தார். தற்போது காமராஜர், எம்ஜிஆர் ஆகிய இருவரது படங்களையும் போட்டுக்கொண்டு இருவரையும் கொள்கை வழிகாட்டி என்றால் என்ன கதை?

திமுகவுக்கு நம்பி வாக்களித்தோம். ஏமாற்றிவிட்டீர்கள். அதனால் கேள்வி கேட்போம் என்று விஜய் சொல்கிறார். 2021 தேர்தலில் திமுகவுக்கு வேலை பார்த்தது போன்று விஜய் பேசுகிறார். ஆனால ஏற்கனவே விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஜெயலலிதாவுக்காக தேர்தல் வேலை பார்த்தனர். பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். அப்போதுதான் அதிமுகவின் வெற்றிக்கு அணில் போல உதவினேன் என்று சொன்னார். அப்படி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் அவர் நிறைவேற்றினாரா? நிறைவேற்றவில்லை என்றால், ஏன் செய்யவில்லை என்று கேட்பதற்கான திராணி உங்களிடம் இருந்ததா? நீங்கள் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற பின்னர் தான் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றார். அப்போது ஊழல்வாதிக்கு பிரச்சாரம் செய்ததற்காக நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா? ஜெயலலிதா ஆட்சியில் கேள்வி கேட்டிருந்தால்? சந்திரலேகா ஐஏஎஸ் போல முகத்தில் ஆசிட் வீசி இருப்பார்கள். கஞ்சா வழக்கில் யார் யார் எல்லாம் சிறைக்கு சென்றார்கள் என்று தெரியுமா?
திமுக என்கிற மிகப்பெரிய இயக்கத்தை பவள விழா பாப்பா… என்று விஜய் சொல்கிறார். திமுகவை விமர்சிப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த விமர்சனத்தில் தெளிவும், கண்ணியமும் இருக்க வேண்டும். இதே தெம்புடன் அமித்ஷாவையும், மோடியையும் எதிர்த்து கேள்வி எழுப்ப முடியுமா? அதேபோல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஊழல்கள் குறித்தும் விஜய் பேச வேண்டும். அப்படி சொல்லிவிட்டு எங்களுக்கு அதிமுக, பாஜக என யாரும் வேண்டாம். நாங்கள் எல்லோருக்கும் மாற்று என்று சொல்லி களத்தில் நின்றால் அது தான் வீரம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


