வே.மோகன் ராம்

வாழ்க்கையில் இன்பங்கள் விலைமதீப்பற்றவை இதை நாம் போராடி தான் வாங்க வேண்டும். துன்பங்கள் இலவசம் போன்றது நம்மை தேடி தானாய் வரும். மற்றவர் பார்வைக்கு அழகாய் வாழ்வதைவிட மற்றவர் மனதில் அன்பாய் வாழ்வதே சிறப்பு என்று சொல்வதற்கு மிக எளிமையாக இருக்கும் ஆனால் நடைமுறை வாழ்க்கை பயணத்தில் முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.
வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன் அவரவர் கண்ணாடி முன் நின்று குறைந்தபட்சமாவது அலங்கரித்துக் கொள்வோம். வெளியில் நான்கு பேரிடம் நின்று பேசும் போது நம் உடல்வாகு தோற்றம் முகபாவனைகள் அனைத்தும் அடங்கும். நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல். அவரவர் உடல் வாகை பொறுத்து தோலின் வகைகளும் மாறுபடும் சாதாரணமானதோல், உலர்ந்து காணப்படும்தோலுடையவர்கள்,எண்ணை பசபசப்புக்கொண்ட தோலினர், கலவையுடன் கூடிய தோல்,மிக மிக இருக்கமான வறண்ட போன தோல்களை உடையவர்கள் என ஐந்து பிரிவுகளைக் கொண்டது.நம் திருவள்ளுவர் கூட அன்புடைமை அதிகாரத்தில் “அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்பார். இப்பொழுது நம் பிரச்சனை அன்பு என்பதாக இல்லை அனைவரிடத்திலும் அன்பு கொட்டி கிடக்கிறது அய்யன் வள்ளுவர் சொன்னது போல என்பது தோல் போர்த்திய நம் உடம்பு தான்.
நம் உடலில் மிகப்பெரிய உறுப்பான தோலில் உண்டாகும் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்றால் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் படியான எண்ணிக்கை பெருகிவிட்டது. முன்பெல்லாம் தோல் நோய் மருத்துவரை பார்க்க வேண்டும் என்றால் பலரிடம் கேட்டு தேடி தான் மருத்துவரை போய் பார்க்க வேண்டிய நிலை மாறி இன்றைக்கு மருத்துவமனை என்றால் தோல் நோய் மருத்துவரும் உடன் இருப்பார் அந்த அளவிற்கு மனிதர்களிடம் தோல் நோய் வேகமாக பரவி வருகிறது.
தோல் நோய்கள் என்றால் அடிப்படையில் பத்து வகை உண்டு அதனையும் தாண்டி பெரிய அளவில் மூன்று நோய்கள் இருக்கிறது மறுக்கவில்லை எனினும் நாம் சாதாரணமாக தோல் பாதிப்பு நான்கு வகை இன்றியமையாததாக இருக்கின்றது ஒன்று முகப்பரு இரண்டு தோல் அரிப்பு அடோபிக் எக்ஸிமா,மூன்றாவது சொரியாசிஸ் நான்காவதாக ரோசாசியா.இவை நான்கினில் முதல் வகை தோல் நோயான முகப்பரு உண்டாக காரணங்களும் அதனை எளிதாக எப்படி சரி செய்து கொள்ளலாம் என்பது குறித்தும் பார்க்கலாம்.முகப்பருக்களின் வலி,வேதனை அழகியலுக்காக முகம் மாறிவிட்ட நிலையில் அடுத்தவரோடு முகம் பார்த்து முகம் பேசுவதற்கு கூட தயக்கம் காட்டி கொள்கிற அளவிற்கு மனக்கவலை இன்றைக்கு எல்லோரிடத்திலும் இருக்கின்றது.
முகப்பரு நோயினால் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான்.முகப்பரு வருவதற்கான காரணங்களில் ஒன்று முக அழகியலுக்காக வீணான விளம்பரங்களை பார்த்து தேவையில்லாத கிரீம்கள் முகத்தில் தடவி அதுவே முகத்திற்கு ஒத்துப் போகாமல் ஒவ்வாமை ஏற்பட்டு அலர்ஜியாக மாறிய பின் முக அழகை சரி செய்ய மருத்துவரை அணுகுவது மருத்துவமனை மருந்துகளையும் பூசிக்கொண்டு முகமே மாறிப் போகின்ற அவல நிலை. இரண்டாவதாக உணவு குறைபாடு, முக முகப்பூச்சு பவுடர்கள் சோப்பு கட்டிகள் முகம் கழுவுகிறோம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் முகத்தில் பூசி கொள்ளுதல் இயற்கையான முகத்திற்கு பாதுகாப்பான நோய் எதிர்ப்பு சக்தி மிக்க கஸ்தூரி மஞ்சள் தூள் குண்டு மஞ்சள் என்கிற கிழங்கு மஞ்சள் தூள் பயன்படுத்த தவறியதன் விளைவு தான் இன்றைக்கு முகப்பரு நோய் உண்டாக முதல் காரணமாகிறது.
மூன்றாவதாக வீட்டில் தூங்கும்போது தலையணைகளில் முகத்தை அழுத்திக்கொண்டு குப்புற படுத்து தூங்கும் அனைவருக்கும் கண்டிப்பாக முகப்பரு வரும் ஏனெனில் தலையணைகளில் படிந்துள்ள தூசிகள் உறங்கும் போதும் வாயிலிருந்து வெளியேறும் உமிழ் நீர் இவற்றோடு மூச்சுக்காற்று வீட்டில் குழந்தைகள் இருப்பின் அவர்களின் எச்சங்கள் வளர்ப்பு பிராணிகள் என்று இன்றைக்கு படுக்கை அறை வரை வாழ்கின்ற பிராணிகளின் மூச்சுக்காற்று தோலில் இருந்து உதிரும் ரோமங்கள் தூய்மைப்படுத்தாத தலையணைகள்,இதன் வாயிலாக மிக நுண்ணிய தூசிகள் முகத்தில் ஊடுருவி நோய் வருவதால் தான் பெண்கள் ஆண்கள் பாகுபாடின்றி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
முகம் தொடர்புடைய நோய்களுக்கு பெரும்பாலும் மருத்துவர்கள் தோலின் தன்மை உண்மைகளை முழுமையாக கூறமாட்டார்கள். அந்தந்த நேரத்துக்கு முகத்தில் ஏற்பட்டுள்ள தோல் நோயின் அளவுகளை வைத்து தோல் மருத்துவர் சிகிச்சை அளிப்பார், அளவிற்கு அதிகமான பாதிப்பு என்றால் மட்டும் ரத்தப் பரிசோதனையும் பரிசோதனையில் தெரியவரும் நோய் தொற்றின் தாக்கத்தை வைத்து புதிய மருந்துகளை தருவார் அதற்காக ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறோம். மஞ்சள் பூசுவதை மறந்து ஐந்து ரூபாயில் பேரன் லவ்லி வாங்க தொடங்கிப் போதே பிரச்சினைகள் வர தொடங்கியது. விளம்பரங்களின் மூலமாக ஜந்து ரூபாயில் ஆரம்பித்து இன்றைக்கு முக சாயம், பவுடர்,ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கிரீம்கள் வெளிச்சந்தையில் விற்பனையாகிறது. இவை அனைத்துமே பெண்களை குறி வைத்து தான் விற்பனை மும்முரமாக நடக்கிறது.
முகப்பருவிற்கு மிக எளிமையான மருத்துவத்தை வீட்டிலேயே செய்து பாருங்கள். சாதாரணமாக முகத்தை தண்ணீரில் கழுவியப்பின் படிகாரம் கொண்டு மீண்டும் ஒருமுறை நன்கு தேய்த்து கழுவிக்கொள்ள வேண்டும் பிறகு மிருதுவான துணி கொண்டு முகத்தை துடைத்தப் பிறகு 10 அல்லது 15 நிமிடம் கழித்து முகம் முழுமைக்கும் நல்ல சுத்தமான தேங்காய் எண்ணையை பூச வேண்டும் முகத்தில் தேங்காய் எண்ணெய் காய்ந்த பிறகும் மீண்டும் மீண்டும் மூன்று அல்லது நான்கு முறையாவது நாளொன்றுக்கு முகத்திற்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வாருங்கள். இயற்கையாகவே முகத்தில் தேங்காய் எண்ணெய் காய்ந்து விடும் அதற்காக மாற்று மருந்து தேவை இல்லை மாற்றாக வேண்டுமென்றால் வீட்டில் உள்ள கடலை மாவு அல்லது பச்சைப்பயிர் மாவை பூசி முகத்தை கழுவிக் கொள்ளலாம் முகம் பொலிவாக இருக்கும்.
நான்கு நாட்கள் தொடர்ந்து முகத்திற்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தாலே முகத்தில் மாற்றம் உண்டாகி இருப்பதை உணர்வீர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் முகத்தை சரி செய்ய வேண்டுமென்றால் கொஞ்சம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.தரையில் பாய்க்கொண்டு தூங்குபவர்களாக இருப்பின் மகிழ்ச்சி. இப்பொழுது பனிக்காலம் என்பதால் சற்று சிரமம் தான் மெத்தை படுக்கை கூட பயன்படுத்துங்கள். தலைக்கு தலையணை வைக்காமல் கை கால்களை நீட்டி நேராக படுத்து தூங்கும் பழக்கத்தை வழக்கமாக்கினால் காலை எழுந்தவுடன் உடல் சுறுசுறுப்பாக இருக்கும் சோம்பல் வராது காலை கடன்கள் சீராகும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதால் முகத்தில் இரத்த ஓட்டம் பரவி முகப்பரு விரைவாக குணமடையும்.
இந்த தேங்காய் எண்ணெய் வைத்தியமும் படுத்து தூங்கும் பழக்கமும் முறையாக அமைந்தாலே முகப்பரு காணாமல் போய்விடும். ஆனால் ஒரு சிலருக்கு நீண்ட நாள் பிரச்சனை இருப்பின் தோல் நோய் தொற்று குறைந்தாலும் முழுமையாக குணமாகவில்லை என்றால் அது குறித்து தோல் மருத்துவரை அணுகி தெளிவான விளக்கங்களை கூறி மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம். கூடுமானவரை அரசு சித்த மருத்துவமனை அல்லது தனியார் சித்த மருத்துவமனைகளை அணுகி இயற்கையான பொருட்களைக் கொண்டு முகப்பருவை சரி செய்து கொள்ளலாம். மரணத்தைக் காட்டிலும் கொடுமையானது மனக்கவலை மரணம் ஒரு முறை தான் கொள்ளும் ஆனால் மனக்கவலை நொடிக்கு நொடி கொள்ளும்.
முகப்பருவுக்கு நேற்றைய தினம் வரை பயன்படுத்திய பொருட்களை குறித்து கவலை வேண்டாம் இந்த நொடி பொழுது தேங்காய் எண்ணெய் மருத்துவம் போதும் தேங்காய் எண்ணெய் தங்கள் வாழ்க்கையில் நிம்மதியை கொடுக்கும். நம்மை புரிந்து கொண்ட ஒரு நண்பன் நம்மோடு இருப்பது ஆயிரம் உறவுகளுக்கு சமம் அதுபோல் நண்பனாக சுத்தமான தேங்காய் எண்ணெய் முகத்திற்கு மட்டும் என்று இல்லாமல் உணவிலும் பயன்படுத்தலாம். பூக்களுக்கு நிகராக வர்ணிக்கப்படும் முகம் இனி தங்களின் முகம் பூக்களை விட அழகானதாக மாற வாழ்த்துகிறேன். (தோல் நோய் குறித்த மற்ற மூன்று நோய்களுக்கான மருத்துவமும் தீர்வும் அடுத்து வரும் கட்டுரையில் இடம்பெறும்).