தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் கடிதம் எழுதிய உடனே, பற்றி பரவி முதலமைச்சர்கள் எல்லாம் சென்னையை நோக்கி வந்திறங்கியதுள்ளதாகவும், இது பாஜக எதிர்பார்க்காத ஒன்று என்றும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோசனைக்கூட்டத்தின் தாக்கம் குறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கூட்டாட்சி தத்துவத்திற்கு ஒரு சிறப்பான நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். இந்திய அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிற நாளாகும். எப்போதும் போல தமிழ்நாடு மாநில உரிமைகளை காக்க முன்கை எடுக்கும் என்பதை மீண்டும் நிரூபித்த நாள். அனைத்து தென்னிந்திய மாநிலங்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று, நமது குரலுக்கு வலுசேர்த்திருப்பது பாஜக எதிர்பாராத ஒன்றாகும்.அதனால் தான் பாஜகவினர் சாலையில் இறங்கி காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். இது முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு, மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்திருக்கிற நாளாகும்.
முதலமைச்சர் ஏற்கனவே இதுபோல இந்திய அளவில் பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்துள்ளார். சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கினார். நீட் விலக்கு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். ஆனால் அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால் இந்த இயக்கம் முதலமைச்சர் கடிதம் எழுதிய உடனே, பற்றி பரவி முதலமைச்சர்கள் எல்லாம் சென்னையை நோக்கி இன்று வந்திறங்கியது மட்டுமல்ல. தென் மாநிலங்களையும் தாண்டி இன்றைக்கு வங்கம், பஞ்சாபில் இருந்து பிரதிநிதிகள் வந்துள்ளனர். மிகப்பெரிய அரசியல் மாற்றம் இன்றைக்கு நிகழ்ந்திருக்கிறது. இதுபாஜக எதிர்பாராத ஒன்றாகும். அகில இந்திய அளவில் அரசியல் காய்களை நகர்த்துவதற்கான மையமாக சென்னை மாறியுள்ளது. ஏற்கனவே பாஜக எதிர்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கருத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்த மாநிலம், வெற்றி பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் எங்கேயும் இந்த அளவிற்கு சாத்தியப்பட்டது கிடையாது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முழுமையாக வெற்றி பெற முடியும் என்பதை சாத்தியப்படுத்தியது தமிழ்நாடு. அதனை 2021, 2024 தேர்தல்களில் நிரூபித்த மாநிலம் தமிழ்நாடு. எந்த மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேர்தலில் நிற்பார்கள். அதன் பின் பிரிந்துவிடுவார்கள். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலை அப்படிதான். ஆனால் இதற்கு தமிழ்நாடு விதிவிலக்கு ஆகும். தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒன்றிணைந்த புள்ளியில் இருந்து ஒரு புள்ளி, கமா கூட மாறாமல், அதே கொள்கைக் கோட்பாட்டோடு பயணிக்கின்றன. 2024ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் வந்து சேந்தார்கள். அவர்கள் 4 சதவிகிதம் வாக்கு எடுத்த கட்சியாகும். அதேபோல் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்ட தேமுதிக, திமுக கூட்டணியை நோக்கி வருவதற்கான சமிக்ஜைகள் தெரிகிறது. அப்போது இந்த அணி வலுப்பெறுகிறது.
இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாடு வழிகாட்டியது. 69 சதவிகித இடதுக்கிட்டை கொண்டு வந்து வழிகாட்டியது. பெண்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என்று சட்டம் கொண்டுவந்து வழிகாட்டியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொட்டு வந்து வழிகாட்டியது. இப்படி புரட்சிகரமான திட்டங்களால் இந்தியாவிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிற தமிழ்நாடு, இந்த தொகுதி மறுவரையறை விஷயத்திலும் வழிகாட்டியுள்ளது. தமிழ்நாட்டின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இன்று பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் வந்து சிறப்பித்திருக்கிறார்கள். குறிப்பாக கேரளா,கர்நாடகா, பஞ்சாப் என்று மிகப்பெரிய மற்றத்தை நாம் பார்க்கிறோம். ஜெகன் மோகன் ரெட்டி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த அளவுக்கு ஒரு மாற்றம் வந்திருக்கிறது. இது பாஜக முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று. ஆடிப்போய் இருக்கிறது பாஜக. ஆடி போயிருக்கிறார் மோடி என்பதுதான் இன்றைக்கு நிதர்சமான உண்மையாகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டலின், நாம் அதிகாரம் அற்றவர்களாக மாறிவிடுவோம் என்று சொல்கிறார். அது பல செய்திகளை உள்ளடக்கி உள்ளது. ஏன் என்றால் ஏற்கனவே மாநிலங்களுக்கான அதிகாரம் என்ன ஆகியது என்று பார்க்க வேண்டும். கல்வி மாநில பட்டியலில் இருந்தது. இன்றைக்கு அதனை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்று விட்டனர். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை அதற்கு சான்றாக உள்ளன. அவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்கிறார்கள். இல்லாவிட்டால் நிதி தர மாட்டேன் என்கிறார்கள். பொது வினியோக திட்டத்தில் இன்று ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு கொண்டுவந்து விட்டனர். மாநிலத்திற்கு என்று தனியாக சட்டமன்றம் உள்ளது. மாநிலத்திற்கு என்று தனியாக தேர்தல் நடந்தால் தான் மாநில உரிமைகள் பேசப்படும். ஆனால் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்கிறார்கள். நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரங்கள் சட்டமன்றத்திற்கும் உண்டு. ஆனால் சட்டமன்றங்களில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு மதிப்பு அளிப்பது கிடையாது.
முழுக்க முக்க சட்டமன்றத்தை சிதைப்பது, மாநில உரிமைகளை பறிப்பது. உதய் திட்டம் வாயிலாக மாநில அரசிடம் இருந்து மின்சாரத்தை பறித்து விட்டார்கள். இப்படி மாநில அரசிடம் இருந்த உரிமைகள் ஒவ்வொன்றாக மத்திய அரசு பிடுங்கிக்கொண்டது. ஏற்கனவே நாம் அதிகாரம் அற்றவர்களாக மாறி இருக்கிற சூழலில் எஞ்சி இருக்கிற ஒரே ஒரு அதிகாரம் நாடாளுமன்ற பிரதி நிதித்துவம் தான். தென் மாநிலங்களுக்கு உடன்பாடு இல்லாத சட்டத்தை கொண்டு வருகிறபோது, அதில் முரண்பட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு பிரதித்துவம் ஒரு வாய்ப்பாக இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகரித்துவிட்டு வடமாநிலங்களிலுக்கு மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை கூட்டுகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இனி தென்மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் போதிய விழுக்காட்டிற்கு போகவில்லை என்றால், தென் மாநிலங்களின் கருத்தை கேட்காமலே நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றி விடுவார்கள். இந்த நாட்டை வடக்கு, தெற்கு மாநிலங்கள் என்று இரண்டு கூறுகளாக பிரித்து அவர்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டிற்குமான அதிகாரத்தை முடிவு செய்கிற எதேச்சதிகாரமான காட்சியை நோக்கி இந்த நாடு போய்க்கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.