அதிமுக பாஜக கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. அதை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் விதமாகவே முதலமைச்சர் 200க்கும் அதிகமான தொகுதகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

ராணுவத்திற்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 234 இடங்களிலும் கூட திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் கூறியிருப்பதாவது:- திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்லியுள்ளார். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பதே மிகவும் கடினமானதாகும். திருமண விழாவில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக முதலமைச்சர் அப்படி சொல்லியுள்ளார். 200 தொகுதிகளை இலக்காக வைத்து செயல்படலாம்.
அதே நேரத்தில் அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் அவற்றோடு கூடுதலாக சேரப்போகிற கட்சிகளை வலுக்குறைந்த கூட்டணி என்று நாம் சொல்ல முடியாது. அரித்மேட்டிகலாக பார்த்தால் இந்த இரு அணிகளும் சம பலம்தான். திமுக அணிக்கு 45 சதவிகிதம் இருந்தாலும், அரசுக்கு எதிரான மனநிலை இருக்கும். அதில் 10 சதவிகித வாக்குகள் குறையும். அதனால் இரு அணிகளும் 35 சதவிகித வாக்குகள்ள தான் வரும். திமுக மீது அதிமுக வைக்கும் குற்றச்சாட்டு குடும்ப கட்சியாகும். பாமகவில் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி இடையே சித்ரா பவுர்ணமி திருவிழா தொடர்பாக 2 பாடல்கள் தனித்தனியாக போடப்பட்டு உள்ளன. தேமுதிகவில் விஜயகாந்த் மகனுக்கு இளைஞரணி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஒட்டுமொத்தத்தில் குடும்ப அரசியல் என்பதை பொதுவாகவே பார்க்கிறேன். அப்படி குடும்ப கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் அதிமுக – பாஜகவும் இதற்கு விதி விலக்காக இருக்காது. அதிமுகவிலும் அமைச்சர்களின் மகன்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலம் இதற்கு விதி விலக்கு ஆகும். எனவே கூட்டணி பலம் தான் முக்கியமாகும். கோர் ஓட் பேங்க் என்பது தான் முக்கியமானது. ஒரு கட்சி என்ன ஆட்சி செய்தாலும், என்ன விமர்சனம் வந்தாலும் அந்த கட்சிக்கு தான் எங்கள் ஆதரவு என்று சொல்லும் நபர்கள்தான் கோர் ஓட் பேங்க் ஆவார்கள்.
பிரதமர் மோடி கோர் ஓட் பேங்கை மனதில் கொண்டுதான் ராணுவத்திற்கு கட்டுப்பாடு அற்ற சுதந்திரத்தை வழங்குவதாக தெரிவித்தார். பாகிஸ்தான் எதிர்ப்பு, இந்துத்துவா, தேச பக்தி என்பது போன்ற வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு செல்கின்றனர். இது நல்லதா? கெட்டதா? என எனக்கு தெரியவில்லை. 1971ல் வங்கதேச யுத்தம். அதற்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் தற்போது நடைபெறும் சம்பவத்தை போன்றதுதான். கிழக்கு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவார்கள். மேற்கு வங்கத்தில் கொலைகள் நடைபெற்றன.வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் அங்கிருந்து இங்கு வந்தார்கள். இந்திரா காந்தி, பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளின் மனநிலை ஒன்று திரட்டினார். முதலில் யார் தாக்குகிறார்களோ அவர்களுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும். அதனால் நாம் காத்திருந்தோம். பாகிஸ்தான் கராச்சியில் இருந்து போர் விமானத்தில் தாக்கினார்கள். அதன் பிறகு நாம் போரில் இறங்கினோம் 6 நாட்களில் பாகிஸ்தான் இரண்டாக உடைந்தது. கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக மாறியது. பெரிய அளவுக்கு பாகிஸ்தான் படைகள் தோற்கடிக்கப்பட்டன. ஆனால் இதே கட்டுப்பாடற்ற சுதந்திரம் ராணுவத்திற்கு வழங்கப்பட்டது. இன்றுவரை வங்கதேசம் உடனான உறவு சரியாக உள்ளதா? என்றால் கேள்விக்குறிதான்.
ஜனநாயக விழுமியங்களை நாம் போற்றவில்லை என்றால் சர்வாதிகாரம் வந்துவிடும். பாஜக சர்வாதிகாரமாக நடந்துகொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலினே குற்றம்சாட்டுகிறார். நல்ல சட்டங்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது. தற்போது பகல்காம் தாக்குதலை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் பிரதமரின் பின்னால்தான் உள்ளது. ஆனால் அதை பயன்படுத்தி அரசியல் செய்வது பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கீழ்தான் ராணுவம் இருக்க வேண்டும். கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்றால் அது பாகிஸ்தான் ராணுவம் போன்றதாகும். அதனால் தான் தீவிரவாத தாக்குதல்களே வந்தது.
எனவே பிரதமர் அப்படி சொல்வது ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றதா? என்பது சந்தேகமாகும். ராகுல்காந்தி சொல்வது போல இது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போதுதான் ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவாகும். ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் என்பது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, அதில் சொல்ல வேண்டிய விஷயமாகும். ஆனால் பிரதமரே இவ்வாறு சொல்வது ஏற்புடையது அல்ல.

கூட்டணி பலம் என்று வருகிறபோது திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக என்பது மைனஸ்தான். ஆனால் வலதுசாரி வாக்குவங்கி வளர்ந்துகொண்டே வருகிறது. அது மாநில அரசியலுக்கு எதிரானதாகும். 1970களில் ராஜாஜியும் காமராஜரும் கூட்டணி வைத்தார்கள். ராஜாஜி வலதுசாரி கூட்டணி. காமராஜர் தேசிய தலைவராக இருந்தபோதும், பழைய காங்கிரசின் தமிழ்நாடு கிளைக்கு மட்டும்தான் அவரது வாக்கு வங்கி உதவியது. அவர்கள் இருவரும் சேருகிறபோது பெரிய அளவுக்கு வெற்றிபெறும் என்றுதான் எல்லாரும் எதிர்பார்ததார்கள். ஆனால் அந்த தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த காலத்து வலதுசாரி ராஜாஜியும், காமராஜர் சேர்த்து அமைத்த கூட்டணிக்கும் 200 தொகுதிகளில் வெற்றி வெற்ற திமுக கூட்டணிக்கும் இடையில் சொற்ப வாக்குகள் தான் வித்தியாசம்.
அப்போது ஆளுங்கட்சிதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் அப்படி இல்லை. கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கிறார்கள். அதிமுக – பாஜக இடையே முரண்பாடுகள் உள்ளது. அதை முதலமைச்சர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார். அதனால் 200 சீட்டுகளுக்கு மேலாக கிடைக்கும் என்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.