விஜயின் நோக்கம் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பது தான். பாஜகவோடு சேருகிறபோதுதான் அதை சாத்தியப்படுத்த முடியும் என்பதால் தவெக அதை நோக்கி நகரும் என்று ஊடகவியலாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.
தவெக – பாஜக கூட்டணி குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் மில்டன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தவெக தலைவர் விஜய் பாஜக உடன் கூட்டணி வைப்பதாக தெரிவித்திருந்தேன். ஊடகங்களில் வெளியான தகவல் அடிப்படையில் மட்டும் சொல்லவில்லை. தவெகவில் உள்ள நண்பர்கள் வாயிலாக வரக்கூடிய செய்திகளையும் சொல்கிறேன். தவெக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று தொடக்கத்தில் செய்திகள் வெளியானபோது அதை நான் மறுத்தேன். காரணம் அப்போது பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதற்கு பிறகு கோவை, சேலம், சென்னை மற்றும் வெளி மாநிலத்தில் ஒரு சில சந்திப்புகளை வெவ்வேறு நபர்கள் நடத்தினார்கள். தவெக கூட்டணியில் சேர்வதற்கு எடப்பாடி குடும்ப உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் அதற்கு பிறகுதான் வெளியானது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையின்போது கூட இருந்தவர்கள் முதல் நாளிலேயே சொல்லிவிட்டார்கள் இந்த கூட்டணி படியாது என்று. காரணம் அவர்கள் நிபந்தனை பெரிதாக இருந்தது. அதனால் நானே வெளிப்படையாக சொன்னேன் அதிமுக உடன் தவெக கூட்டணி அமையாது என்று.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது முழுவதும் வேறு ஒரு நிகழ்வாகும். அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தவெக பேரம் பேசுக்கூடிய இடத்தில் இருந்தது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக கையை முறுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது உண்மை. எல்லோருக்கும் தெரியும். செங்கோட்டையன் ஒரு பக்கம் வேலை பார்த்தார். டிடிவி தினகரன், அண்ணாமலை போன்றோர் மற்றொருபுறம் வேலை பார்த்தார்கள். அதிமுகவுக்கு உள்ளே இருக்கும் வேலுமணி, தங்கமணி போன்றவர்களும் வேலை பார்த்தார்கள். இதெல்லாம் நடந்து எடப்பாடியை கூட்டிக் கொண்டுபோய் உட்கார வைத்து, கூட்டணி நடைபெற்று முடிந்தது. பாஜக கூட்டணிக்குள்ளே வருவதற்கு அதிமுகவுக்கே இந்த நிலைமை என்றால்? தவெகவுக்கு என்ன நிலைமை என்ற அடிப்படையில் தான் பொருத்தி பார்க்க வேண்டும்.
டெல்லி போய்விட்டு வந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக கூட்டணியில் தவெக சேர்வது குறித்து ஓராண்டு காலத்திற்குள் முடிவு செய்யப்படும் என்று சொல்கிறார். கோவையில் பேசிய தவெக தலைவர் விஜய், நாம் எந்த சூழலிலும் சமரசம் ஆக போவதில்லை. ஆனால் சில முடிவுகளை சாமர்த்தியமாக எடுக்க வேண்டியது வந்தால், எடுப்பபோம் என்று சொல்கிறார். இவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக கட்சி தொடங்கியபோதே ஒரு கருத்தை சொல்கிறார், என்ன நடந்தாலும் அதிகாரத்தை அடைவதற்காக எந்த பஞ்சமகா பாவத்தையும் செய்ய முடியும் என்கிற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். அதனுடைய பொருள் அதுதான். எந்த முடிவுகளையும் யோசிக்காமல் நாம் ஒரு முடிவு எடுப்போம். அது நமது வெற்றியை நோக்கி இருக்கும் என்பது தான் அவர் வார்த்தை. தவெக என்கிற அரசியல் கட்சி தன்னுடைய எல்லாவற்றையும் கூட இழக்கலாம். ஆனால் அவர்கள் இலக்கு என்பது திமுக கூட்டணியை வீழ்த்துவது என்கிற பட்சத்தில் அது இயல்பாக பாஜகவோடு கூட்டணியில் இருந்தால்தான் அதை சாத்தியப்படுத்த முடியும் என்றால் அதை நோக்கித்தான் நகரும்.
அதிமுகவோடு- தவெக கூட்டணி என்று பிரபல நாளிதழில் செய்தி வெளியானது. அடுத்த நாளே புஸ்ஸி ஆனந்த் மறுப்பு தெரிவித்தார். தற்போது பாஜக உடன் தவெக கூட்டணி என்று நான் மட்டும் சொல்லவில்லை. மூத்த பத்திரிகையாளர் மணி சொல்கிறார். பல்வேறு நாளிதழ்களிலும் சொல்கிறார்கள். இவ்வளவும் நடைபெற்ற பிறகு அவர்களிடம் இருந்து மறுப்பு வரவில்லையே ஏன்? நயினார் நாகேந்திரன் காலக்கெடு விதிப்பதும். உங்கள் தலைவர் மேடையில் ஏறி என்ன வேண்டும் என்றாலும் செய்வோம் என்று சொல்வது ஒரே புள்ளியில் பொருந்தி போகிறதா? என்கிற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள். திமுக பாஜக உடன் கள்ளக்கூட்டணியில் உள்ளதாக தவெகவினர் சொல்கிறார்கள். அப்படி கள்ளக்கூட்டணியில் உள்ள கட்சியே பாஜகை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் நீங்கள் கொள்கை எதிரி என்று சொல்கிறீர்கள். மத்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவீர்ளா? அப்போது நான் கள்ளக்கூட்டணியில் இல்லை என்று சொல்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.