தவெக, பாமக, நாதக இணைந்து மூன்றாவது அணி உருவாக வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு போட்டியாக மூன்றாவது அணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஐந்து முனை போட்டி என்று சொல்லப்பட்டது. தற்போது அது நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. திமுக, அதிமுக, சீமான், விஜய் என்று உள்ளது. இது மூன்று முனையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒரு வலிமையான அணியாக இருந்தால்தான் அவர்களுக்கு போகும். விஜய், திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்கிறார். அப்போது அவருடன் இரண்டு பேர் வேண்டும். அவர்கள் யார்? இதன் நோக்கம் என்ன என்றால் திமுகவுக்கு எதிராக கருத்துருவாக்கம். ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது போன்ற அரசுக்கு எதிரான கருத்துக்களை பெரிதாக்கி, எதிர்ப்பை கூர்மைப்படுத்து கூட்டணியை ஒருங்கிணைப்பது. இந்த இடத்தில் சீமானும் உள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு, தோல்வி அடைந்த வேட்பாளருக்கும் இருக்கும் வித்தியாசத்தை விட நான் அதிகமாக வாக்குகளை வாங்கி உள்ளேன் என்று சீமான் சொல்கிறார். ஆனாலும் ஸ்டாலின் முதல்வராக உள்ளார். அடுத்த முறை நான் விடமாட்டேன் என்று சொல்கிறார். அப்படி என்றால் என்னுடைய வாக்கு சக்தியை திமுகவுக்கு எதிராக பயன்படுத்துவேன் என்பதுதான் அர்த்தமாகும். கூட்டணி முடிவுக்கு அவர் எப்போதோ தயாராகிவிட்டார். இனி கட்சியிரைதான் அவர் தயார்படுத்த வேண்டும்.
சீமானை பொருத்தவரை 2 பிரச்சினைகள் உள்ளன. பெரியார் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்ததாலும், விஜய் கட்சி தொடங்கியதாலும் அவருடைய வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் சரிந்துவிட்டது. தற்போது அவருடைய 8.21 சதவீத வாக்குகளை தக்கவைக்க வேண்டும் என்றால் எதாவது ஒரு கூட்டணிக்கு சென்று மறைத்துவிட வேண்டும். பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார். நாங்கள் அதிமுகவிடம் செல்கிறோம் என்பார். இந்த கூட்டணி அமையவில்லை என்றால், விஜய் – சீமான் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் பெரியாரை குறித்து சீமான் பேசியபோது விஜய் கண்டிக்காதது ஏன்? சீமான் தாக்கி பேசிய பிறகும் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், அன்புமணிக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னணியில் கூட்டணி கணக்குகள் உள்ளன. அவருக்கு தேவை என்ன திமுகவுக்கு எதிராக வலிமையான ஒரு அணியை உருவாக்க வேண்டும். முதலில் அதிமுகவை தேர்வு செய்தார்.
சீமானிடம், அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். அதிமுக 20 சதவீத வாக்குகளுக்கு சரிந்துள்ளது. 7 இடங்களில் டெபாசிட் போய்விட்டது. பல இடங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இவை எல்லாம் எடப்பாடியை எங்கே நிறுத்தியது என்றால் 10 சதவீதம் உள்ள விஜய் நாடினார். இவர்கள் இருவரும் சேர்ந்தால் 30 சதவிகிதம். அடுத்தபடியாக நாம் தமிழர், பாமக வந்தால் 40 சதவீதம் வாக்குகள் வந்திரலாம். திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி எல்லாம் சேர்ந்தால் தேர்தலில் கடும் போட்டியை கொடுக்கலாம் என்று நினைத்தார்கள். பாஜக சும்மா இல்லை. பிடித்து கூட்டணியில் சேர்ந்தே ஆக வேண்டும். தற்போது கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி சொல்வது, அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்த தான். விஜயும், அதிமுகவும் இனிமேல் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு கிடையாது.
விஜயும், சீமானும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அவர்களுக்கு பெரியார் விவகாரம் ஒரு விஷயம் இல்லை. இவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அப்போது நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தால் தான் திமுக ஆட்சியை அகற்ற முடியும். அந்த இடத்தில் இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்வார்கள். அந்த விவகாரத்தில் ராமதாஸ் அய்யா இதுவரை வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற வார்த்தையை சொல்லாத நபர் அவர்தான். எடப்பாடி பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்காமல் விடமாட்டார். பாமக தனித்து நின்றால், வட தமிழ்நாட்டில் அதிமுக காலியாகிவிடும். பாஜகவால் அதிமுகவுக்கு எந்த பலனும் கிடையாது. ஆனால் விஜய்க்கு எடுத்துக்கொண்டால் வட மாவட்டங்களில் பலத்த செல்வாக்கு. பாமகவுக்கும் பலத்த செல்வாக்கு உள்ளது. எனக்கு தேவை 15 சட்டமன்ற உறுப்பினர்கள். அது விஜயுடன் போனால் கிடைக்கும் என்றால் அய்யா ராமதாஸ் முடிவு எடுத்துக்கொள்ள போகிறார். அதன்படி பார்த்தால் விஜய், சீமான், பாமக கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது கிட்டத்தட்ட பாஜக – அதிமுக கூட்டணிக்கு போட்டியாக மாறும். அப்படி ஒரு கூட்டணி வந்தால்தான் மக்கள் மற்ற பக்கம் மாறுவார்கள். இது ஒரு பலமான கூட்டணி என்று மாறுவார்கள். அதுதான் விஜய்க்கு வேண்டும். தற்போது சீமான் பேசுவது தவெக கணக்குதான். அதிமுக கணக்கு அல்ல. சீமானுக்கு பாஜக என்பது கொள்கை ரீதியான இடர்பாடு உள்ளது. ஏற்கனவே கட்சி கலகலத்து போய்விட்டது. அதனால் பாஜக கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.