பிரதமர் மோடி, தேசிய கூட்டணி தலைவர்களால் தேர்வு செய்யப்பட்டு அந்த பதவிக்கு வந்துள்ளார் என்றும், அவர் பாஜக எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆகவில்லை என்றும் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் கிழக்கு பகுதி திமுக சார்பில் மண்ணடியில் முதலமைச்சர் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒருவர் கையில் ஒரு அதிகாரத்தை கொடுத்த உடன் அதை அவர் நடத்துகிற முறையிலேயே அவருடைய அனுபவம், அறிவு முதிர்ச்சி வெளிப்படும். திமுக தலைவராக இயக்கத்தை கட்டிக்காப்பதும், முதலமைச்சராக இன்றைக்கு இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு ஆட்சி நடத்துவது ஒருபுறம். இன்றைக்கு மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் பாஜக அரசு, ஒரு கூட்டணி அரசாகும். அது பாஜகவின் ஆட்சி அல்ல. வழக்கமாக பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் ஆதரவு கடிதங்களை குடியரத் தலைவரிடம் வழங்கி, ஆதரவு பெற வேண்டும். ஆனால் நரேந்திர மோடி, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்படவில்லை. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் தேசிய ஜனநாய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் தான் நரேந்திர மோடி. கூட்டணி கட்சிகளின் தலைவராக தான் அவர் அங்கே சென்றார். பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக செல்லவில்லை. இது விவாதத்திற்கு உரிய விஷயமாகும்.
மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளை மண்ணில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 76 ஆண்டுகளை கடந்து செயலாற்றி வருகிறது. இந்தியா என்பது ஒற்றை நாடாக இருக்க முடியாது. ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சரம் இருக்க முடியாது என்கிற போது, அவரவர் அவர்களுடைய இயல்புகளுக்கும், தன்மைகளுக்கும் ஏற்ப இருந்துகொள்ளலாம். ஆனால் ஒன்று சேர்ந்து வாழலாம் என்பதை தான் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொன்னார்கள். ஆனால் நரேந்திர மோடியின் அரசு இங்கே ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே மாதிரியான கல்வித்திட்டம் என்று சொல்லுகிறபோது அது எல்லாருக்கும் பொருந்தி வராது என்று மற்றவர்கள உணர்கிறார்களோ இல்லையோ, எது நடந்தால் எங்களுக்கு என்ன என்று ஏற்றுக்கொண்டு செல்கிறார்களோ இல்லையோ, இதை எதிர்க்கும் ஒரு குரலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குரல் உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை போன்று இந்திய நாட்டின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதப்படும். மாற்றங்களும் இங்கிருந்து தான் உருவாகி இருக்கின்றன. அவசர காலம் இந்தியா முழுவதும் தலைவிரித்தாடிய போது, தலைவர்கள் எல்லாம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஒற்றை மனிதராக நின்று போராடியவர் கலைஞர். அவர் மீட்டு தந்ததுதான் ஜனநாயகம். அதே அடிப்படையில்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்படுகிறார். இரும்பை உலகத்திலேயே முதன்முறையாக பயன்படுத்தியவன் தமிழன் என்று ஆய்வுகள் சொல்லியுள்ளன. இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை இனி வழி அமைக்கப்போவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
நாடாளுமன்றம் முன்பு இருந்தது போல் இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு அங்கு உரிமை இல்லை. பிரதமர், உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வருவது இல்லை. ஏனென்றால் விவாதங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டும். சன்சட் என்ற தொலைக்காட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களை காட்டுவது இல்லை. அதனால் வெளிநடப்பு செய்து செய்தியாளர்களிடம் சொல்கிறோம். நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதி கோரி 10 நிமிடங்கள் கத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை.
மக்களவையில் பாதுகாப்பு குழு ஒன்று இருக்கும். தற்போது அப்படி ஒன்று இல்லை. அவர்கள் எந்த விதமான நவீன ஆயுதங்களையும் பயன்படுத்தக்கூடிய பயிற்சி பெற்றவர்கள். தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தை தாக்கியபோது அவர்கள் வெற்றிபெற முடியாததற்கு அந்த பாதுகாப்பு அதிகாரிகள் தான் காரணம். அந்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நாடாளுமன்றத்தில் இல்லை. தற்போது அவர்கள் சாதாரண உடைகள் அணிந்துகொண்டு அங்குள்ள கேன்டினில் பாதுகாவலர்களாக உள்ளனர். ஏனென்றால் தற்போது சி.எஸ்.ஐ.எப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதையும் தாண்டி நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது.
தற்போது தொகுதி மறுசீரமைப்பு தமிழகம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட போகிறது என்று எச்சரிக்கை உணர்வோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக குரல் எழுப்பினார். அதற்கு பின்னால் அனைத்து மாநிலங்களும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. நாள்தோறும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் தொடர்புடைய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்திற்கு வந்து கோவையில் நின்று சொன்னதை அவையில் நின்று சொல்லலாம் அல்லவா? யாருக்கும் பாதகம் வராத வகையில் இதை செய்வோம் என்று உத்தவாதம் தருவதற்கு மறுக்கிறார் என்பதை விட எங்களை அவர் மதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்திரா காந்தி அவசர நிலையின்போது குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். அதன் காரணமாக தொகுதி மறுவரையறை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். 2001ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் அதனை மேலும் 25 ஆண்டுகள் தள்ளிவைத்தார்.
தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டிற்கு 39, 31ஆக குறைந்துவிடும். அதேவேளையில் உ.பி.யில் 80ல் இருந்து 140 ஆக உயரும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக நாம் இழக்கப்போது 8 தொகுதிகள் என்றால் அதை பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த முதல் உரிமைக் குரல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரலாகும். அவர் அழைப்பை ஏற்று 7 மாநில முதலமைச்சர்கள், தலைவர்கள் வந்தார்கள். இதை முன்னெடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்கள். இதுமட்டும் அல்ல இனி எல்லா பிரச்சினைகளையும் அவர்தான் முன்னெடுப்பார். இந்த நாட்டை, ஜனநாயகத்தை காப்பார். நாம் வலியுறுத்துவது தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளக்கூடாது. 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 848 ஆக உயர்த்தினாலும், தமிழ்நாட்டிற்கு 39லிருந்து 61 ஆக உயரும். அவர்களின் நிலையும் அதேபோல்தான் உயரும். எனவே ஒரு தெளிவான முன்னெடுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார்.