எடப்பாடி – நயினார் ஆகியோரின் கூட்டணியை உடைக்கும் நினைக்கும் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் கூட்டணி, அதற்காக தெளிவாக திட்டமிட்டு இரு தரப்பிலும் கலகம் செய்து வருகிறார்கள் என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் குறித்து ஊடகவியலாளர் செந்தில்வேல் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது :- அதிமுகவில் பிரிந்தவர்களை சேர்க்க காலக்கெடு விதித்த விவகாரத்தில் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது நீக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று எடப்பாடி நினைத்திருந்த நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்துள்ளனர். ஒரு வேலை செங்கோட்டையனை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எடப்பாடி நீக்கினால், அவர்கள் தாங்களாகவே கட்சியில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து விடுவார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் அதிமுக என்கிற கட்சி காலியாகி விடும்.

பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரனை கொண்டுவந்தனர். அவருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, நயினார் விருந்து வைத்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்காததால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். தான் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் வாங்கித்தருமாறு நயினாரிடம் கேட்டதாகவும், அவர் பதில் அளிக்கவில்லை என்றும் கூறி, வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீன்ஷாட்களை காட்டினார். இந்த அளவுக்கு அவருக்கு திட்டம் போட்டுக் கொடுத்தது அண்ணாமலையை தவிர வேறு யாராக இருக்க முடியும். அப்போது, நயினாரை காலி செய்ய அண்ணாமலை பிளான் போட்டு அதற்கான வேலையை தொடங்கிவிட்டார். நயினார்தான் பிரச்சினை என்று முதலில் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கினார். அடுத்தது டிடிவி தினகரன். தான் கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான காரணம் நயினார் நாகேந்திரன்தான் என்று சொல்கிறார். அண்ணாமலை இருந்தவரை எங்களுக்கு பிரச்சினை இல்லை. நயினார் நாகேந்திரன் தான் பிரச்சினை என்று சொல்கிறார்.
மறுபுறம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிதான் கட்சியின் தோல்விக்கு காரணம் என்று செங்கோட்டையன் மூலம் அவருக்கு நெருக்கடி தருகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய பாஜக வரும் என்று குருமூர்த்தி சொல்கிறார். அப்படி மத்தியஸ்தம் வருகிறபோது அதிமுகவில் இருந்து எடப்பாடியை நீக்கிவிட்டு, அவர்கள் ஆட்கள் ஒருவரை கொண்டு வருவது. பாஜக தரப்பில் நயினாரை நீக்கிவிட்டு மீண்டும் அண்ணாமலையை கொண்டு வருவது. இதற்காக இவர்கள் எல்லோரும் தெளிவாக திட்டம் போட்டு அழகாக வேலை தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாம் பாஜக மேலிடத்திற்கு தெரியும். எப்படியாவது அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அந்த வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறபோது, அந்த வேலையை பயன்படுத்தி இவர்கள் ஆள் ஆளுக்கு அரசியல் கணக்குகளை போட தொடங்கிவிட்டார்கள். டிடிவியின் பிராதன பணி என்பது நயினாரை காலி செய்துவிட்டு, அண்ணாமலையை கொண்டு வருவதுதான்.
செங்கோட்டையனை தொடர்ந்து அடுத்து போர்க்கொடி தூக்கப்போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. வடமாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் தென்படாமல் இருந்து வருகிறார். அவர் அடுத்தபடியாக சசிகலாவை சந்திக்கக்கூடும். அல்லது பிரிந்து சென்றவர்கள் ஓரணியில் இணைந்தால்தான் வெற்றி என்பதை நோக்கி அவரும் நகரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை பாஜக அவருக்கு வேறு திட்டம் வைத்திருந்தால், அவரை தடுத்துவிடும். இல்லாவிட்டால் அவர் கிளம்பி வருவார். இதனிடையே, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் எப்போது வேண்டுமென்றாலும் போர்க் கொடி தூக்கலாம் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜுவின் முகத்தில் சால்வையை வீசி அவமதிப்பு செய்தார். எனவே அவரும் போர்க்கொடி தூக்கும் நிலை வரும். தற்போது எல்லோரும் டெல்லியில் இருந்து ஸ்க்ரிப்ட் பேப்பருக்காக காத்திருக்கிறார்கள். அந்த ஸ்க்ரிப்ட் வந்த பிறகு, ஒவ்வொருவராக பேச தொடங்குவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.