எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்துதால், அதிமுகவும் பலவீனமடையும் என்றும், இது பாஜகவுக்கும் நல்லது அல்ல என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் அதிமுகவில் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- செங்கோட்டையன் மனம் திறக்கப்போகிறேன் என்று அறிவித்துள்ள நிலையில், டெல்லியில் பாஜக அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை உள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று, பாஜக தலைவர்களை சந்தித்தார். அப்போது அவருக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை. திரும்பி வந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்திகளை வெளிப்படுத்தினர்.

பின்னர் அமித் ஷா தமிழகம் வந்து கூட்டணியை அறிவித்தார். அதற்கு பிறகு அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக சொல்லவில்லை. தமிழ்நாடு அரசியலில் பாஜக ஏதேனும் வியூகம் வகுக்கிறது என்றால் அது ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒப்புதலோடுதான் நடைபெறும். அதை மனதில் வைத்துதான் எல். முருகன், ஆர்எஸ்எஸ் அதிமுகவுக்கு வழிகாட்டினால் என்ன தவறு என்று கேட்டார். அதற்கு எதிர்ப்பும் எழுந்தது.
இந்நிகழ்வின் மூலம் என்ன புரிகிறது என்றால் ஆர்எஸ்எஸ்-ன் வழிகாட்டுதலுக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால், அவர்களின் வழிகாட்டுதலுக்கு உட்படக்கூடிய யாரோ ஒருவர் அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் ஆக வருவார் என்பதுதான். அப்படி ஆர்எஸ்எஸ்-ன் ஆசி பெற்றவர்கள் யார்? என்று பார்த்தால், சசிகலாவுக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. அவர் அதிமுகவுக்குள் வர வேண்டும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டுமே விரும்புகின்றன. சசிகலா, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். அவர் அறிக்கை விட்ட உடனேயே செங்கோட்டையன் போர்க்கொடி பிடிக்கிறார். நிர்மலா
சீதாராமன் தமிழ்நாட்டிற்கு வருகிறார். இதனை தொடர்ந்து, பாஜகவின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர் கோர் கமிட்டி கூட்டத்தை கூட்டுவது அரிதானது. இந்த கூட்டத்தில் அதிமுக பிரச்சினைகள் அலசப்படும்.
எடப்பாடி பழனிசாமியிடமும் ஒரு பிரச்சினை உள்ளது. அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவது தன்னுடைய கடமை என்று சொல்லிவிட்டார். அப்படி இருந்தும் மூப்பனார் நினைவு தினத்திற்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை கூப்பிட வாசன் நினைத்தபோது, எடப்பாடி மறுப்பு தெரிவித்தார். பின்னர் பாஜக மேலிடத்துடன் பேசி அவர்களை பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னதால் அழைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணி மற்றும் அதனுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டும் என்றால் தன்னுடைய பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பாணியை அவர் கடைபிடிக்கிறார் என்றால் அண்ணாமலையுடனும், மற்றவர்களுடன் நல்ல நெருக்கமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் வந்தால் நமக்கு ஆபத்து என்று ஒரு தலைவருக்கு இருக்கக்கூடாது. இது எடப்பாடி பழனிசாமிக்கு மைனஸ் பாய்ண்ட் ஆகும். இதை பாஜகவும் உணர்ந்து இருக்கிறது.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேறி, அவர் நேரடியாக திமுகவுக்கு செல்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. செங்காட்டையன் புரட்சி கொடியை பிடிப்பது திமுகவுக்கு சாதகமானது. எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுறுப்பயணம் மேற்கொண்டு தன்னுடைய இருப்பை உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறார். இன்றைய தேதிக்கு அதிமுகவின் ஒற்றைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரை பலவீனப்படுத்தினால், அதிமுகவும் பலவீனமாகும். அப்படி அதிமுக பலவீனப்பட்ட ஒரு பிம்பத்தை உருவாக்கினால், வெற்றி கூட்டணியாக அது மாறாது. அது பாஜகவுக்கும் நல்லது அல்ல. அவர்கள் திமுகவை வீழ்த்த நினைக்கும் போது, கூட்டணி கட்சி பலவீனமடைந்தால் என்ன செய்வார்கள்.
அப்போது பாஜக, எடப்பாடி பழனிசாமியை மட்டும் பலவீனப்படுத்துவோம். அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டாம். கூட்டணி ஆட்சிக்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிப்போம் என்கிற நேரட்டிவை செட் செய்தால், எடப்பாடி பழனிசாமியே இறங்கி வந்துவிடுவார். இது பாஜகவின் கணக்கு. ஆனால் எடப்பாடி பழனிசாமி, இறங்கிவர மாட்டார் என்பது என்னுடைய அபிப்பிராயம். செங்கோட்டையன் நாளை என்ன சொல்கிறார் என்பதை பொறுத்துதான் இந்த காயை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியும்.
எஸ்.பி.வேலுமணி போன்ற தலைவர்கள் அதிமுக ஒற்றுமையை வலியுறுத்திதான் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டனர். ஆனால் இணைப்பு நடைபெறவில்லை. எஸ்.பி.வேலுமணி, ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். மோகன் பகவத் உடன் நெருக்கமாக காணப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் உடன் பல தலைவர்கள் நெருக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இது ஒரு அரசியல் உத்தியாகும். இதை அதிமுக – பாஜக என இரண்டு கட்சிகளும் கடைபிடிக்க வேண்டும். நயினார் நாகேந்திரன், எவ்வளவோ இறங்கி செல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இன்னும் இறங்கி வராமல் இருக்கிறார் என்கிற உணர்வு பாஜகவினரிடம் உள்ளது. இந்த இடத்தில் ஒரு மாறுபாடு தேவையாகும். செங்கோட்டையனை, அதிமுகவின் தலைவர் ஆக்கிவிடுவார்கள் என்று ஒரு தகவல் பரவுகிறது.
எடப்பாடி பழனிசாமி ஒரு இயக்கத்தை கட்டிக்காத்து கொண்டு வந்திருக்கிறார். இப்போது அவரை பலவீனப்படுத்தினால் அதிமுகவும் பலவீனமடையும். அது திமுகவுக்கும் தான் சாதகமாகும். செங்கோட்டையன் ஒரு குறிப்பிட்ட பகுதியின் தலைவராக உள்ளார். அவர் தமிழ்நாட்டின் தலைவராக வர இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு நீண்ட காலமாகும். செங்கோட்டையனின் பயம் என்பது நமக்கும், ஆதரவாளர்களுக்கும் சீட் தர மாட்டார்கள் என்பதுதான். இது அனைவரும் உட்கார்ந்து பேசி அதிமுகவை பலப்படுத்த வேண்டிய விஷயமாகும். அது இல்லை.
ஆளுங்கட்சி அதிமுகவை பலவீனப்படுத்ததான் செய்யும். செந்தில் பாலாஜி தான் செங்கோட்டையனுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர் வழிகாட்டுதலில்தான் இது நடக்கிறது என்பது அதிமுகவில் ஒரு தரப்பினரின் வாதமாகும். அப்போது நாளை செங்கோட்டையன் மனம் திறந்து மிகப்பெரிய அணுகுண்டுகளை வீசினால், அதிமுக பாதிக்கப்படும். பாஜகவுக்கு அது நல்லது அல்ல. செங்கோட்டையன் அதிருப்தியை மட்டும் வெளிப்படுத்தி விட்டு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பொதுப் படையாக சொன்னார் என்றால்? பழைய நிலைமைக்கு தான் போகும். ஆனால் செங்கோட்டையன் அதிருப்தியில்தான் இருக்கிறார் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள். அதுவும் அதிமுகவுக்கு நல்லது அல்ல. கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டிற்கு சரியானது அல்ல. அது தேர்தலுக்கு பிறகு பார்க்க வேண்டிய வேலை. இதை தேர்தலுக்கு முன்நிபந்தனையாக விதிக்க முடியாது. பாஜக இதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இப்படி பல புரிதல்கள் இதில் தேவைப்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.