வேங்கைவயல் விவகாரத்தில் விசிகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா தவறான தகவல்களை பரப்புவதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
தவெக பொதுக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது ஆதவ் அர்ஜுனா முன்வைத்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாஜக இருக்கும் அணியை, சிறுபான்மை மக்கள் ஏற்க மாட்டார்கள். பாமக இருக்கும் அணியை தலித் மக்கள் ஏற்கமாட்டார்கள். பாஜக – பாமக அணியை அமித்ஷா அறிவித்துவிட்டார். அப்போது அதிமுக, பாஜக, பாமக என்கிற அணி தெளிவாகிவிட்டது. இந்த பக்கம் அந்த கட்சிகளை மூர்க்கமாக எதிர்க்கிற திமுக, விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் என்று ஒரு பெரிய அணி உள்ளது. திமுகவுக்கு சீக்கெரட் ஓனரே மோடிஜிதான் என்று விஜய் சொல்கிறார். ஆனால் மோடிஜி தாவெகவுக்கு தான் ஒனர். அதனால்தான் சார் எதாவது பார்த்து செய்யுங்கள் விஜய் சொல்கிறார். ஒரு அரசியல் கட்சி யாரை எதிரியாக சொல்கிறதோ அவர்களை எதிர்த்து பேசும். அவங்க பேரை சொல்லும். அவர்களை எக்ஸ்போஸ் செய்யும். விஜயிடம் இருந்து மோடியின் பேரை வாங்குவதற்கே ஒரு வருடம் ஆகிவிட்டது.
தவெக அரசியல் ஏறத்தாழ ஒரு முட்டு சந்திற்கு சென்றுவிட்டது. அவர்கள் கட்சி தொடங்கி உறுதியான நிலைப்பாடு எதுவும் சொல்லாமல், தேர்தலை சந்திக்காமல், அதிமுக உடன் கூட்டணி போகலாம் என்று நினைத்தபோது அதுவும் தோல்வியில் முடிந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு சென்றுவிட்டார்கள். தற்போது திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்று சொல்கிற இடத்திற்கு சென்றுவிட்டார்கள். இதனை முதலிலே சொல்லி ஓராண்டு காலம் களத்தை கூப்பிட்டு பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதிமுக அல்ல, நாங்கள் தான் மாற்று என்று அவர்கள் நிருவி இருந்தால்கூட அதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் திமுக எதிர்ப்பு அரசியலை அவர்கள் சரியாக செய்யவில்லை. ஒரு அணி அமையாமல் இருந்தபோது விஜய் சென்று அவர்களை தலைமை தாங்கி இருந்தால் சில கட்சிகள் கூட்டணிக்கு வந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது ஒரு அணி அமைந்துவிட்டதால், நீங்கள் திமுக எதிர்ப்பு அணியை உருவாக்க முடியாது. கிட்டத்தட்ட நாம் தமிழர் கட்சியின் நிலைமைதான் உங்களுக்கு. திமுக, பாஜக எதிர்ப்பு அரசியல் பேசுவீர்கள். ஆனால் உங்களுடன் சேர யாரும் இருக்க மாட்டார்கள். அப்போது திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறும். எப்படி தவெக Vs திமுகவாக மாறும்?
திமுக அணிக்கு வந்து மதிமுக போல விசிகவும் மறைந்துவிடும் என்று ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். கடந்த முறை எங்களுக்கு சின்னம், அங்கீகாரம் இல்லை. ஆனால் இம்முறை சின்னமும், அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. தவெக தான் தேர்தலை சந்திக்காத கட்சியாகும். விசிக தொடங்கிய உடனே தேர்தலை சந்தித்த கட்சியாகும். 1999ல் அரசியல் கட்சியாக வடிவம் பெற்ற உடனேயே தேர்தலை சந்தித்தாம். திருமாவளவன் 2.25 லட்சம் வாக்குகளை பெற்றார். அப்படி விஜய-ஐ தனியாக நின்று வாங்க சொல்லுங்கள் பார்ப்போம். நாங்கள் வாங்கியதால்தான் எங்களை எல்லோரும் நம்பினார்கள். அதனால் தான் 2001 தேர்தலில் கலைஞர் கூப்பிட்டு 10 தொகுதிகளை கொடுத்தார். விசிக முதன்முதலில் சந்தித்தது நாடாளுமன்ற தேர்தலைதான். சட்டமன்ற தேர்தலைதான் சந்திப்பேன் என்று ஒரு கட்சி சொல்ல முடியாது. அப்போது கொள்கை எதிரியை களத்தில் நின்று எதிர்கொள்ள மாட்டீர்கள்.
தமிழ்நாட்டை எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும், பல பேருக்கு தண்ணி காட்டிய இடம் என்று விஜய் சொல்கிறார். தமிழகம் எப்படி தண்ணி காட்டியது. விஜய் தற்போது தானே அரசியலுக்கு வந்திருக்கிறார். அப்போது யார் தண்ணி காட்டியது. எந்த கட்சியை வீழ்த்த வேண்டும் என்று சொல்கிறாரோ, எந்த கூட்டணியை கொச்சை படுத்துகிறாரோ அந்த கூட்டணிதான் அவர்களுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. பாஜகவிடம் இருந்து களத்தை இவ்வளவு நாளாக யார் பாதுகாத்து வருகிறார்கள். திமுக பாசிச மனநிலையுடன் உள்ளனர் என்று விஜய் சொல்கிறார். அவர் வீட்டிற்கு குழந்தையுடன் பார்க்க சென்ற பெண்மணியை தடுத்தவிட்டனர். அவரை தான் பார்க்க முடியவில்லை என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். பரந்தூரில் அவர் மக்களை சந்தித்தாரா? விஜய் மக்களை சந்திக்க வர மாட்டார். அப்படி நினைத்திருந்தால் இந்நேரம் அவர் மக்களை சந்தித்து இருப்பார். அதற்கான வாய்ப்புகள் இல்லை. அதன் காரணமாக தான் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் ஒரு பொருட்டே இல்லை என்று குறைத்து மதிப்பிடவோ, அல்லது மலினப்படுத்தவோ தயாராக இல்லை. அவர் களத்தில் நின்று வாக்குகளை வாங்கி காட்டட்டும். அதற்கு பிறகு பேசுவோம். அவரது பலம் என்ன என்று தெரியாமல், அவரை கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஒருபுறம் ஆதவ் அர்ஜுனா, மறுபுறம் சி.டி.நிர்மல்குமார் இருக்கிறார்கள். அவர்கள் இருவருமே விஜயை சிறப்பாக வைத்து செய்துவிடுவார்கள். வேறு யாரும் தேவை இல்லை. அதுதான் கடந்த கால வரலாறு ஆகும். ஆதவ் அர்ஜுனாவை விசிக எந்த இடத்திலும் அவமதிப்பு செய்யவில்லை. புதிதாக கட்சிக்கு வந்தவருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்த இயக்கம் விசிக. அவர் இன்னொரு கட்சிக்கு சென்று, எங்கள் கூட்டணியை கடுமையாக விமர்சித்தபோதும் கூட, அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கட்சி அலுவலகத்திற்கு வந்தவரை திருமாவளவன் வரவேற்று கண்ணியப்படுத்தி அனுப்பி வைத்தார். அந்த தலைவரை ஆதவ் அர்ஜுனா எப்படி கொச்சைப்படுத்தி பேசுகிறார். வேங்கை வயலுக்கு சென்றவரை, அந்த பிரச்சினையை கையில் வைத்து போராடுபவரை அங்கு சென்றாரா? என கேள்வி எழுப்பினார். உங்கள் தலைவர் விஜய் அங்கே போனாரா? முதலில் நீங்கள் போனீர்களா? அப்போது தலித் மக்களின் வாக்குகளை விஜய்க்கு திருப்பிவிட பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.
பாஜகவும், திமுகவும் சண்டையிடும்போது விஜய் ஒரு அணுகுண்டு போல செயல்படுவார் என்று சொல்கிறார். அதுவே எப்படிபட்ட மனநிலை என்று பாருங்கள். அணு ஆயுத்ததால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பக்கம் நின்று பேச வேண்டிய நாமே ஒரு அணு ஆயுத நாடுபோல செயல்படுவோம் என்று சொன்னால் யார் அழிவு சக்தி. ஒப்பீடு எப்படி இருக்கிறது. அப்போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும். ஜனநாயக சிந்தனை கொண்டவர்களின் பேச்சு இப்படி இருக்குமா? உதாரணங்கள் எங்கே இருந்து வருகிறது. உதாரணங்கள் சங்கர மடத்தில் இருந்தும், அணு ஆயுத வல்லரசுகளிடம் இருந்து வருகிறது. ஒரு ஜனநாயகவாதியால் இப்படி எல்லாம் பேச முடியாது. அவர்களால் நீண்ட நாட்களுக்கு ஜனநாயக தன்மையோடு செயல்பட முடியாது. அவர்களுக்கு அது வராது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.