திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் அநீதியின் பக்கம் நிற்பதாகவும், இதனை 97 சதவீதம் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று கூறியுள்ளனர். விஜய் 2வது இடத்திலும், எடப்பாடி பழனிசாமி 3வது இடத்திலும் உள்ளதாக சொல்கிறார்கள். பாஜக சார்ந்த யூடியுப் சேனல்கள், லயோலா கல்லூரி போன்ற வலதுசாரி அமைப்புகள் எடப்பாடி பழனிசாமியை காலி செய்ய முடிவெடுத்து விட்டார்கள். அதற்காக ஊடகத்தில் பேசுவார்கள், இதுபோன்ற சர்வேக்களை நடத்துவார்கள்.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எந்த அடிப்படையில் சர்வே நடத்தினார்கள்? எப்படி விஜய் இரண்டாவது இடத்திற்கு வந்தார்? விஜய் ஆயிரம் கோடி சம்பாதிக்கும் திரைப்படத்துறையை விட்டு வந்ததாக சொல்கிறார். இவர் ஆட்சி அமைத்தால் அவருடன் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் செய்யாமல் இருப்பார்களா? ஆதவ் அர்ஜுன், தமிழ்நாட்டில் லாட்டரியை கொண்டு வருவதற்காக தான் விஜய் பின்னால் இருக்கிறார். ஒட்டுமொத்த பணத்தையும் அவர்தான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

விஜயை சுற்றி வருகிற இளைஞர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் விஜய் செல்கிற கூட்டங்களுக்கு எல்லாம் செல்கிறார்கள். அவரை தேவ தூதர் என்று இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களும் நினைப்பதாகவும், வடமாவட்ட மக்களும், எஸ்.சி., எஸ்.டி மக்களும் விஜயை நம்பி இருப்பதாகவும் யாரோ எழுதிகொடுத்த ஸ்கிரிப்டை பேசுகிறார்கள். விஜயிடம் 3 நிமிடத்திற்கு மேல் பேச திறமை கிடையாது.கல்லூரி படிப்பை பாதியில் விட்டு சினிமாவுக்கு வந்த விஜய் வந்து தான் பொறியியல் படித்த மாணவர்களை காப்பாற்ற வேண்டுமா? இவர் வந்து தான் தமிழ்நாட்டு இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்களா? ஆளும் கட்சியின் மீது அதிகளவு வெறுப்பு இருந்தால் தான் மக்கள் விஜய்க்கு வாக்களிப்பார்கள்.
1996 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக 33 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதாவை மக்கள் தோற்கடித்தார்கள். அப்படியான நிலைமை ஸ்டாலினுக்கு உள்ளதா? காங்கிரஸ் கட்சி டெல்லியில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறது. சில பிழைப்புவாதிகள் தவெக உடன் கூட்டணி என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை திமுக உடன்தான் கூட்டணி என்று சொல்கிறார்.

அமித்ஷா, விஜய் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கிறார். காரணம் அவருடைய தயாரிப்பு தான் விஜய். எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை தானே பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் 20 சதவீதம் வாக்குகளை வைத்திருக்கிறார் என்றால், அதற்கு காரணம் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் ஆவர். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவின் உண்மை பலம் 33 சதவீதம். டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்களை நீக்கியதால், அதில் 13 சதவீதத்தை இழந்துவிட்டார். அதிமுக என்கிற கட்சி, சின்னம் போன்றவை எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது.
அதிமுக என்கிற கட்சி இரண்டாவது இடத்திற்கு வரும். காரணம் அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி. அக்கட்சியின் தொண்டர்கள் ஒருபோதும் விலைபோக மாட்டார்கள். அதிமுகவிடம் இருந்து போன 13 சதவீதம் வாக்கில் திமுக, நாதக, பாஜகவுக்கு போனது. தற்போது விஜய்க்கு போகலாம்.

விஜய், மற்ற இடங்களில் இருந்துதான் வாக்குகளை எடுக்க வேண்டும். விஜய்க்கு தத்துவம், கொள்கை போன்றவை கிடையாது. தத்துவத்திற்காக வேறு கட்சியில் இருந்து 4 தலைவர்களை கடன் வாங்கியுள்ளார். கொள்கைக்கு திமுகவிடம் இருந்தும், நாதகவிடம் இருந்தும் கொஞ்சம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு என்று பாடல் கிடையாது. அதையும் எம்ஜிஆரிடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். 30 ஆண்டுகாலம் சினிமாவில் நடித்தபோதும், அவர் பாடிய ஒரு பாடலை கூட அவரால் மேடையில் பாட முடியவில்லை. பாஜக, நாதக களத்திலேயே இல்லை என்று சொல்கிறார். ஆனால் அந்த பாஜக தான் புதிய தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து குலக்கல்வி முறையை கொண்டு வருகிறது. அவர்களை எதிர்க்க விஜய்க்கு தகுதியும், சக்தியும் இல்லை.
பாஜவின் சிபிஐ தான் உங்களை கரூர் வழக்கில் விசாரித்து வருகிறது. அதை எதிர்த்து பேச உங்களால் முடியாது. ஏனென்றால் நீங்கள் குற்றவாளி. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அநீதியின் பக்கம் விஜய் இருக்கிறார். 97 சதவீதம் மக்கள் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜக களத்திலேயே இல்லை என்று விஜய் சொல்கிறார் என்றால், அவர் எந்த அளவுக்கு அறிவிலியாக இருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


