பாஜகவை தள்ளிவிட்டு எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் சேர்ந்து சமயச்சார்பற்ற கூட்டணியை அமைத்தால், அந்த அணி உறுதியாக வெல்லும் என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.


தவெக – அதிமுக கூட்டணி குறித்து தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சரியான முடிவுதான். காரணம் அருணா ஜெகதீசன் ஆணையம் என்ன தீர்ப்பு சொன்னாலும் அதை தமிழக அரசு நிறைவேற்றாது. அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.டி அமைத்தார். இவர்கள் இருவரையும் தள்ளிவிட்டது உச்சநீதிமன்றம். சிபிஐ மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருப்பது உண்மைதான்.
இருந்தபோதும் கரூர் விவகாரத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்கிற அடிப்படையில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு வழக்கு விசாரணைகளை கண்காணிக்கும்போது, இதில் மத்திய அரசு தலையிடுவதற்கு வாய்ப்புகள் குறைவாகும். சிபிஐ விசாரணையில் உண்மை வெளிவரட்டும். அதன்படி, நாம் நடவடிக்கைகளை தொடர்வோம். விஜயும் அதற்குரிய இடத்தை அடைவார்.

சிபிஐ விசாரணை வழங்கப்பட்டிருப்பது விஜயை, அதிமுக – பாஜக கூட்டணிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமித்ஷா, இரண்டு முறை விஜயிடம் தொலைபேசியில் பேசினார். அவருக்கு விஜயை கையில் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதனால் பேசுகிறார். ஆனால் விஜய் பேசாமல் இருக்கிறார். அதேநேரத்தில் விஜய், அதிமுகவோடு சேர்கிற மனநிலையை பெற்றுவிட்டதாகவே நான் நினைக்கிறேன். சட்டமன்றத்தில் அதிமுக விஜயை ஆதரித்து பேசுகிறது.
நமக்காக ஆதரித்து பேச 4 பேர் வேண்டும் என்கிற மனநிலைக்கு விஜய் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். கூட்டம் கூட்டுவது, ஊருக்குள் போவது, ஊரை நிலை குலையச் செய்வது போன்றவை அவரது சினிமா மனப்பான்மை இன்னும் அவரைவிட்டு அகலாவிட்டாலும், ஸ்டாலினை வீழ்த்த விஜயின் பங்கு சரியானது தான். தவெக தொண்டர்கள் எடப்பாடி கூட்டத்திற்கு வருகிறார்கள். சுவரொட்டி ஒட்டி அவரை வரவேற்கிறார்கள்.

இந்நிலையில், விஜய்க்கு ஒரு முரண்பாடு ஏற்படலாம். பாஜகவை பாசிச கட்சி என்று சொல்லிவிட்டு அவர்களுடன் எப்படி கூட்டணிக்கு செல்வது என்று தயக்கம் ஏற்படலாம். அப்படி ஒரு நிலை வந்தால், விஜய் ஒரு நிபந்தனையாக இதனை எடப்பாடியிடம் வைக்க வேண்டும். பாஜகவோடு நீங்கள் கூட்டணியில் இருந்தால் தவெக உங்களுடன் சேர முடியாது. இடங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. எங்களின் வாக்கு உங்களுக்கு பயன்படும். உங்களுடைய தோழமை எங்களுக்கு பயன்படும். நாங்கள் பாஜகவை ஒரு பாசிச சக்தி என்கிற கருத்தை வைத்திருக்கும் போது அவர்களுடன் எப்படி கூட்டணிக்கு வர முடியும் என்கிற கேள்வியை முன்வைக்க வேண்டும்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பாஜகவை புறந்தள்ளிவிட்டு விஜயை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும். அதற்கு காரணம் பாஜக வெளியே செல்வதால் 5 சதவீத வாக்குகளை இழப்பீர்கள். ஆனால் அவர்களுடன் கூட்டணி வைப்பதால் 12 சதவீத எதிர்ப்பு வாக்குகளை பெறுகிறீர்கள். தமிழ்நாட்டில் எதிர்ப்பு வாக்குகள் வைத்திருக்கும் ஒரே கட்சி அவர்கள் தான்.

எடப்பாடியும், விஜயும் கூட்டணி சேர்ந்து ஒரு சமயச்சார்பற்ற கூட்டணியாக உருவாகினால், அந்த 12 சதவீதம் வாக்குகள் இவர்களுக்கு வரும். இது அபரிமிதமான வெற்றிக்கு வழிவகுக்கும். கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆகிவிடும். தற்போது விஜய்க்கு செய்தி தொடர்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். விஜய்க்கு, எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் ஆதரவு கொடுப்பது நல்லது தான். பாஜகவின் 5 சதவீதம் வாக்குகள் பொருட்டு அல்ல. இன்னும் சில கட்சிகள் உங்களிடம் வரும். வலிமையான கூட்டணி ஆவீர்கள். நீங்கள் உறுதியாக வெல்வீர்கள். எடப்பாடி ஆளட்டும். அடுத்த தேர்தலுக்கு எதிர்க்கட்சியாக இருந்து ஆளுங்கட்சியாக மாறுவதற்கு விஜய் முயலட்டும்.
விஜய் தனித்து நின்றால் அவரும் தற்கொலை செய்து கொள்வார். ஸ்டாலின் வெல்வதற்கு அது உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால், மற்றவற்றை குறித்து யோசிக்க கூடாது. அதிமுக, பாஜக, தவெக சேர்ந்தால், விஜய் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் விஜயினுடைய பிம்பம் உடைந்து விடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


