உதயநிதி ஸ்டாலின், திமுகவை எதிர்ப்பது தான் விஜயின் நோக்கம் என்றும், அவர் வாரிசு அரசியல், ஊழல் என பேசுவது எல்லாம் பொய் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு ஆளுர் ஷாநவாஸ் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியது 100 சதவீதம் தவறு என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆதவ் இதுவரை திமுகவை எதிர்த்து எவ்வாறு வெளிப்படுத்தி இருக்கிறாரோ, அதற்கு நேர்மாறாக திமுகவை பாராட்டி திருமா வெளிப்படுகிறார். திமுக, ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியபோதும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், ஆதவிடம் பணம் பெற்றுக்கொண்டு திருமா நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால் திமுக சொல்லியோ, ஆதவ் சொல்லியோ அவர் நடவடிக்கை எடுக்கமாட்டார்.
இப்போது ஆதவ் கட்சி எல்லைகளை மீறி பேசி கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியில் சேர்ந்தபோது அவர் இதுபோன்று வெளிப்படவில்லை. கட்சியின் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 3, 4 மாதங்களாக தான் அவர் நடவடிக்கை மாறியுள்ளது. அதன் உச்சமாக விகடன் நூல் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இதுவரை ஆதவை விட்டுக்கொடுக்க வில்லை, விமர்சிக்க வில்லை. ஆனால் நூல் வெளியீட்டு விழாவில் பேசியதற்கு பின் நாங்கள் மனவுமாக இல்லை. ஆதவ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து திருமாவளவன் உரிய முடிவு எடுப்பார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எடுக்கும் முடிவைத்தான் தொண்டர்கள் ஏற்க வேண்டும். தலைவர் ஒரு முடிவு, தொண்டர் அதற்கு எதிரான முடிவை எடுத்தால் அது கட்சி விரோத நடவடிக்கையாகும். வேங்கை வயல் பிரச்சினை குறித்து விஜய்க்கு இன்று தான் தெரியுமா?. அதற்காக தொடக்கம் முதல் போராடும் இயக்கம் விசிக. ஆணவ கொலை தடுப்புச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் என விசிக வலியுறுத்தியும் முதலமைச்சர் மறுத்துவிட்டாரே, அது தொடர்பாக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினாரா?
தலித் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அறிவித்து விட்டார். பாஜக பல்வேறு மாநிலங்களில் அதனை நடைமுறைபடுத்தி வருகிறது. தலித் ஒருவரை முதலமைச்சர் மட்டும் அல்ல குடியரசுத் தலைவராகவே ஆக்கி விட்டார்கள். தமிழத்தில் இருந்து தேர்வான ஒரே மத்திய அமைச்சரும் தலித் தான். தலித்தை தலைவராக்க வேண்டும் என்பதற்காக யாரோ ஒருவரை பிடித்து தலைவராக்கினால் சரியாகுமா?. அவ்வாறு ஆக்கியவர்களை வைத்தே தலித் விரோத நடவடிக்கைகளை அதிகார வர்க்கம் முன்னெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம்.
தருமபுரி பற்றி எரிந்தபோது, ராமதாஸ் தலித் அல்லாதோர் கூட்டமைப்பை ஏற்படுத்தியபோது, விசிகவை குறிவைத்து ஒரு இழிவான பரப்புரை செய்தபோது, அந்த இடத்திற்கு திமுக சார்பில் உண்மை கண்டறியும் குழுவை நேரில் அனுப்பி ஆய்வு மேற்கொண்டு பாமகவின் பக்கம் தான் தவறு உள்ளது என திமுக நிலைப்பாடு எடுத்தது. இதேபோல் இடதுசாரி இயக்கங்கள் தான் விசிக உடன் இருந்தன. அன்று விசிகவுக்கு ஆதரவளித்த கட்சியுடன் தான் நிற்க முடியும்.
திருமாவளவன் 1999 முதன் முறையாக தனித்து தேர்தலில் போட்டியிட்டு 2.15 லட்சம் வாக்குகளை வாங்கினார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் 5 லட்சம் வாக்குகளை பெற்றார். அவருக்கு தலித் மக்கள் மட்டுமின்றி, வன்னியர் சமுகத்தினரும் வாக்களித்தனர். அதே சமூகத்தை சேர்ந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர் உடன் சென்றதால் இவ்வளவு வாக்குகள் கிடைத்தது. பொதுத் தொகுதியான திருப்போரூரில் பாமக வேட்பாளரை வீழ்த்தி பாலாஜி வெற்றி பெற்றார். திமுகவை விமர்சிப்பதற்காகவே ஆதவ் இவ்வாறு பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் சாதிய அணி சேர்க்கை செய்வதற்காக ஒரு கட்சி, சாதி ரீதியில் அம்பேத்கரிய இயக்கங்களை இழிவுபடுத்த ஒரு கட்சி வெளிப்படையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பாமக தொடர்பாக அந்த மேடையில் ஒரு விமர்சனம் உண்டா? பாமக என்ற அரசியல் கட்சி தலித் விரோதமாக செயல்படுவதை மேடையில் கூறவில்லை. திருமாவின் வாகனத்தின் மீது கற்களை வீசினார்கள் என்று ஆதவ் கூறினார். ஆனால் எந்த கட்சி டிசர்ட் போட்டவர்கள் வீசினார்கள் என்று சொன்னாரா?. இதற்காக பாமகவை விட்டு விட்டு திமுகவை விமர்சிப்பது ஏன்?. பாமக ஏற்படுத்திய கட்டுப்பாட்டை தகர்த்து விட்டு திருமாவுடன் கைகோர்த்து அதே சமுகத்தை சேர்ந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்எஸ் சிவசங்கர் வந்தனர். எங்களுடன் வரும் ஜனநாயக சக்தியான திமுகவை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்.
மன்னர்கள் ஆளலாமா என கேட்கிறீர்கள், ஊழல் ஆளலாமா என கேட்கிறீர்கள், சாதியவாத்தை திமுக பரப்புவதாக குற்றம்சாட்டுகிறீர்கள். பாமக தலைவர் அன்புமணி, ராமதாசின் மகன் ஆவார். அவர் மீது சிபிஐயில் ஊழல் வழக்கும் உள்ளது. மேலும் சாதியத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் தலைவர் அவர். இவற்றை எல்லாம் எதிர்ப்பதாக கூறும் விஜய், அன்புமணி ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார். அப்போது உங்களுக்கு உதயநிதி தான், திமுக தான் பிரச்சினையா என்றால் அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியது தானே. மன்னராட்சி, ஊழல், சாதியவாதம் என்று சொல்லி ஏன் ஏமாற்ற வேண்டும். சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவது காலங்காலமாக உள்ளது. தருமபுரியில் அன்புமணியை எதிர்த்து ஜனநாயகவாதியான செந்திலை களமிறக்கியது. அவர் வெற்றி பெற்று தலித் மக்களுக்கு நன்மைகள் தான் செய்துள்ளார், இவ்வாறு அவர் கூறினார்.