கரூர் கூட்டத்தில் தான் தொடர்ந்து பேசினால் உயிரிழப்புகள் வரும் என்று விஜய்க்கு தெரிந்தும் அவர் பேசினார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

கரூர் துயரம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர் கூட்டநெரில் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரண்டு விதமான வழக்குகள் வந்தன. இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் பொதுநல வழக்குகளும், ஒரு நீதிபதி கொண்ட அமர்வில் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனுவும் விசாரணைக்கு வந்தன. அதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்ட தவெக செயலாளரின் முன்ஜாமின் மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தன. பொதுநல வழக்குகளை பொறுத்தவரை கரூர் சம்பவத்தில் சதி நடைபெற்றுள்ளது. எனவே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை தான் பிரதானமாக இருந்தது. அந்த மனுக்கள் அனைத்தையும், நீதிபதி தண்டபாணி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கருர் கூட்டநெரிசல் மரணங்கள் குறித்த விசாரணை முற்கட்டத்தில் இருக்கும் நிலையில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது அதே கோரிக்கையை வைத்தும் சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அந்த வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ரோடு ஷோ குறித்து விதிகளை வகுக்ககோரிய வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை நெடுஞ்சாலைகளில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்குவதை நிறுத்திவைக்குமாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால் அந்த உத்தரவு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கட்சிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் பொருந்தாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
தவெக தரப்பில் சதி கோட்பாடுகளை தான் முன்வைத்து வாதிட்டார்கள். 41 பேர் மரணத்திற்கு தவெக பொறுப்பு கிடையாது என்று சொல்லப்பட்டது. புஸ்ஸி ஆனந்த் தரப்பில் நடைபெற்ற சம்பவத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தான் பொறுப்பு என்றும், இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதபோது எதற்காக தன் மீது வழக்குப்பதிவு செய்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில் விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வருகை தந்தது முதல் அங்கே நடந்த விஷயங்கள் அனைத்தும் சொல்லப்பட்டது. இவை அனைத்திற்கும் தவெக தான் காரணம் என்றும், அதுகுறித்து விசாரித்து வருவதாக கூறப்பட்டது. சென்னையை பொருத்தவரை நாமக்கல் மாவட்ட செயலாளர் முன்ஜாமின் மனு குறித்து நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயின் பிரச்சார வாகனத்தில் தான் சிசிடிவி காட்சிகள் உள்ளது. அதில் தான் விபத்தை ஏற்படுத்தினார்களா என்கிற ஆதாரம் உள்ளது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?. தவெக ஒரு கட்சியா? கட்டுப்பாடுகள் இல்லாமல் ஏன் இருக்கிறீர்கள்? என்று நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. தவெக மீது நீதிபதி செந்தில்குமார், கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
கரூர் மரணங்கள் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது 100 சதவீதம் சரியானதாகும். தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ தான் விசாரித்தது. ஆனால் அவர்கள் எத்தனை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அருணா ஜெகதீசன் ஆணையம், ஆட்சியர், ஐ.ஜி. மாவட்ட எஸ்.பி. என அனைவருடைய தொடர்பு குறித்து விரிவான அறிக்கையை வழங்கியபோது சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை. இ.டி, சிபிஐ, ஐடி போன்ற அமைப்புகள் மோடி அரசின் கைப்பாவையாக செயல்படுவதை நாம் பார்த்துவிட்டோம். அதேசமயம் இந்த வழக்கை கரூர் மாவட்ட காவல்துறை விசாரிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று அவர்கள் மீதே குற்றச்சாட்டு இருக்கிறது.
மற்றொன்று புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்கிறார்கள். ஆனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. விஜய் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதே நிறைய பேர் மயங்கி விழுந்தனர். மரணமடைந்தனர். தொண்டர்கள் அதை பார்த்து செருப்பை வீசி கவனத்தை ஈர்க்கிறார்கள். அவ்வளவு நடந்த பிறகும் விஜய் தொடர்ந்து பேசுகிறார். அப்போது நாம் தொடர்ந்து பேசினால், அங்கு நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிந்திருந்தும் விஜய் பேசினார். அப்போது, அவர் குற்றம்புரிவதற்கான அலட்சியம் என்கிற பிரிவு வரும். இவை 3 வருடங்கள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க கூடிய குற்றங்களாகும். இந்த பிரிவுகளின் கீழ் விஜய் மேல் இன்று வரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?
தவெக தரப்பில் முன்ஜாமின் மனு விசாரணையின்போது சதி கோட்பாட்டை சொன்னார்கள். அதற்கு அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தவெக தரப்பில் தான் தாமதமாக வந்தார்கள். அவர்கள்தான் எச்சரிக்கையை மீறினார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. குடிநீர் வழங்குவது, தொண்டர்களை ஒழுங்குபடுத்துவது அரசியல் கட்சியின் வேலை என்றும், அதற்கு காவல்துறை பொறுப்பேற்க முடியாது என்றும் சொன்னார்கள். விவசாரணை தொடக்க நிலையில் இருப்பதால், இரு தரப்பிலும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று நீபதிகள் தெரிவித்தனர். நீதிபதி விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை. பிரச்சினை என்ற உடன் எல்லோரும் ஓடிவிட்டார்கள் என்று கூறியதற்கு பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கருத்து சொல்வது இயல்பானதுதான். நீதிபதி தவெகவுக்கு ஆதரவாக சொல்லி இருந்தால் நீதிபதி இப்படி சொல்லிவிட்டார் என்று அவர்களே பரப்பி இருப்பார்கள். 41 உயிர்கள் பலியாகிறபோது நீதிபதி எழுப்பிய கேள்விகள் நியாயமானது அல்லவா? அந்த கூட்டத்தை கூட்டியவர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
தவெக தலைவர் விஜய், அதற்கு பிறகு போட்ட வீடியோவில் கூட 41 பேர் மரணத்திற்கு பொறுப்பு ஏற்கவில்லை. விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக வந்த பிறகு ஒரு பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த பிரச்சினையை நின்று எதிர்கொள்ள வேண்டும். தவெகவில் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் என்ற அமைப்பே கிடையாது. விஜய் போய்விட்டால் யார் சொல்வதை அவர்கள் கேட்பார்கள்? பெரியாரை தன்னுடைய கொள்கை தலைவராக விஜய் வைத்திருக்கிறார். என்றைக்காவது தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறாரா? அம்பேத்கரின் கொள்கைகளை எடுத்து சொல்லியுள்ளாரா? எதுவுமே கிடையாது எல்லாமே அவுட் சோர்சிங். கட்சிக்கார்களுக்கு எதுவுமே தெரியாது.
ஒரு தயாரிப்பாளர் விஜய்க்கு படம் போட்டு, அந்த படத்தை இயக்குநரை வைத்து எடுத்து, அதை மார்க்கெட் செய்து, பணம் சம்பாதிப்பது தான் சினிமாவில் அவர்கள் செய்வது. அதேபோல், விஜய், வெளியில் சில நிறுவனங்களிடம் பணத்தை கொடுத்து, தன்னை மார்க்கெட் செய்து முதல்வராக்குங்கள் என்று கொடுத்துள்ளார். அந்த மார்க்கெட்டிங் யுக்திதான் இங்கே நடைபெற்று கொண்டிருக்கிறது. தவிர, அரசியலே அவர்கள் செய்யவில்லை. ஒரு அரசியல் கட்சிக்கான எந்த பொறுப்பும் அவர்களிடம் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.