Homeசெய்திகள்கட்டுரைஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

-

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை 

ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும், ஆவடிக்கு தலைமை பண்புள்ள இளைஞர்கள் வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதி வருகிறேன். APC NEWS TAMIL வெப்சைட்டில் வருகின்ற கட்டுரையை ஆயிரக் கணக்கானோர் படித்துவிட்டு பாராட்டுவதோடு நிற்காமல், இன்னும் தீராத பல பிரச்னைகளை சுட்டி காட்டி ,மேலும் எழுதுங்கள் என்று உற்சாகப் படுத்துகிறார்கள்.

ஆவடிக்கு நல்ல தலைவர்கள் இல்லை, ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்கின்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் வேண்டும் என்று ஏன் எழுதுகிறோம். ஆவடியில் அரசியல் வாதிகள் கண்டுக் கொள்ளாத பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. பிரச்சனைகளை வருடக் கணக்கில் தீர்க்காமல் கிடப்பில் போடப்படுகிறது. அந்த பிரச்சனைகளை சரிப்படுத்த , தீர்வுகாண ஆர்வமுள்ள, தலைமை பண்பு கொண்டவர்கள் இல்லாததே காரணம்.

திமுக முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. 1969ல் பேரறிஞர் அண்ணா மறைந்துவிட்டார். நாடு முழுவதும் துயரத்தில் மூழ்கியது. அப்போது ஆவடி பாதுகாப்பு துறையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து 1970 ம் ஆண்டு ஆவடி பேருந்து நிலையம் அருகில் அறிஞர் அண்ணாவிற்கு சிலை நிறுவினார்கள். அந்த சிலையை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணநிதி திறந்து வைத்தார். அண்ணாவின் சிலை 44 ஆண்டுகள் ஆவடியின் முகமாகவே இருந்தது.

ஆவடி அண்ணா சிலை அருகில் நிற்கிறேன், அண்ணா சிலையை கடந்து செல்கிறேன், அண்ணா சிலை அருகில் வந்துவிடுங்கள், அண்ணா சிலை அருகில் இருந்து பேரணி தொடங்குகிறது என்று ஆவடியில் நிகழும் பெரும்பாலான நிகழ்வுகளும் அண்ணா சிலையை மையப்படுத்தியே நடை பெற்று வந்தது. அண்ணா சிலையின் பெயரை உச்சரிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஆவடியின் அடையாளமாகவும், முகமாகவும் ஆவடி மக்களின் வாழ்வில் ஒன்றாக கலந்து இருந்தது அண்ணாவின் சிலை.

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

அந்த சிலை 2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு விபத்தில் விழுந்து விட்டது. அவ்வழியாக சென்ற லாரியில் இருந்த கயிறு சிலையின் கழுத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. அதில் அண்ணா சிலை கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது. தற்போது பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஆ. கிருஷ்ணசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி காவல் ஆய்வாளராக இருந்த விஜயராகவன் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தார். அந்த சிலை விழுந்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து பத்தாவது ஆண்டு தொடங்கிவிட்டது.

அண்ணா சிலை விழுந்தபோது அண்ணாவின் பெயரை தாங்கிய அதிமுக ஆட்சியில் இருந்தது. அதைப்பற்றி அவர்களும் கவலைப்பட வில்லை. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தும் இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. திமுகவும் கண்டுக் கோள்ள வில்லை. இவை அனைத்தையும் கண்டும் காணாமலும் மதிமுகவும் மவுனம் காக்கிறது.

ஆவடியில் உள்ள திராவிட கட்சிகளின் தலைவர்கள், ஆவடி பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை ஒன்று இருந்ததையே மறந்து விட்டார்கள். அந்த அளவிற்கு அண்ணாவின் மீது விசுவாசம் கொண்டவர்கள் நமது ஆவடியில் உள்ள தலைவர்கள்.

அறிஞர் அண்ணா ஒரு சாதாரண அரசியல் தலைவர் இல்லை. தேர்தல் அரசியல் பாதையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர். ஏற்றத்தாழ்வு உள்ள சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர் முதல் பிராமணர் வரை அனைவரையும் “தமிழர்” என்ற ஒற்றை அடையாளத்தில் ஒருங்கிணைத்த மாமேதை அறிஞர் அண்ணா.

திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி, சாமானியத் தமிழர்களை அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர். எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் உயர் பதவியில் அமரவைத்து அழகுப் பார்த்தவர்.

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

இந்தி- இந்து- இந்துஸ்தான் என்ற ஒற்றை கலாச்சார அரசியலுக்கு எதிராக ”எங்கும் தமிழ், எதிலும் தமிழர்” என்ற தமிழ் தேசிய அரசியலையும், தமிழர்களின் முன்னேற்றத்தையும் உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்தவர்.

தமிழகம் முழுவதும் கால் தேய நடந்தார், தொண்டை தண்ணீர் வற்றும் அளவிற்கு பேசினார், கை வலிக்க எழுதினார். தமிழ் தாய்க்கு “தமிழ்நாடு” என்று பெயர் வைத்து பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்தார்.

தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானாக இல்லாமல், யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என் குறிக்கோள் என்ற லட்சியத்தில் வாழ்ந்து மறைந்த பேரறிஞர் அண்ணாவை மறந்து விட்டார்கள் நமது ஆவடி தலைவர்கள்.

அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது மட்டுமே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருக்கிறது. அந்த அதிகாரத்தை பயன் படுத்தி ஊழல் வாதிகளாக மாறிவிடுகிறார்கள். அதிகாரம் அவர்களை மாற்றி விடுகிறது. தேர்தலுக்கு முன்பு செய்ய முடியாததைக் கூட செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். அதிகாரத்திற்கு வந்ததும் வாக்களித்த மக்களை மறந்து விடுகிறார்கள், உழைத்த கட்சி தோழர்களை மறந்தவர்களுக்கு அறிஞர் அண்ணாவை மறப்பதற்கு சொல்லி கொடுக்கவா வேண்டும்?

ஆவடியை சுற்றிலும் உள்ள ஊராட்சிகளில் அனைத்து வசதிகளும் இருக்கிறது. ஆனால் ஆவடி மாநகராட்சியில் குடிக்க தண்ணீர் கூட இல்லை என்றால் அதற்கு காரணமானவர்கள் யார்? ஒரு நல்ல தலைவர் உருவாகாமல் இருப்பதே காரணம்.
சுயநலம் இல்லாத தலைவர்கள், மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தலைமை பதவிக்கு வர வேண்டும். அப்பொழுதான் அந்த ஊர், அந்த நகர் நன்றாக இருக்கும்.

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை
ஆவடி அண்ணா சிலை இருந்த CTH சாலை வழியாக எத்தனை முறை பயணம் செய்து இருப்பார்கள் ? அவர்களால் ஒரு முறை கூடவா யோசிக்க முடியவில்லை. அணணா பிறந்த நாள் மற்றும் மறைந்த நாளில் மாநிலம் முழுவதும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அந்த நாளில் கூட அண்ணா சிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆவடியில் உள்ள தலைவர்களுக்கு தோன்றவில்லை. ஆனால் அவ்வழியாக பயணம் செய்கின்ற சாதாரணமான பொது மக்கள், திராவிட இயக்கத் தொண்டர்கள் மீண்டும் அதே இடத்தில் அண்ணா சிலையை வைக்க முயற்சி செய்ய மாட்டார்களா என்று கேள்வி ஏழுப்பி வருகிறார்கள்.

மீண்டும் அண்ணா சிலை வைப்பார்களா ? பொருத்திருந்து பார்ப்போம்.

      – என்.கே.மூர்த்தி

MUST READ