ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதரை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை – ஆணையர் தர்ப்பகராஜ்
கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற கழிவுநீர் ஒப்பந்ததாரர் ஆய்வுக்கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆவடி மாநகராட்சி ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ் தலைமையில் தனியார் கழிவு நீர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, கழிவுநீர் மேலாண்மை விதிமுறைகள் மற்றும் செயல்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்கக்கூடாது. திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலகசடுகள் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்ற கூடாது.
மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7ன் படி எந்த ஒரு நபரும் ஒப்பந்ததாரரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்த கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் அந்த நபரின் மீது மேற்படி சட்டம் பிரிவு 9ன் படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 லட்சம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை 2வது முறையாக மீறுபவர்களுக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனை 5லட்சம் அபாரம் விதிக்கப்படும்.
ஆவடி மாநகராட்சியில் கழிவுநீர் அகற்றும் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் கழிவு நீர் அகற்றிட ஆவடி மாநகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அண்ணணூர் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது இடங்கள், கால்வாய்களில், கழிவுநீர் கொட்டப்படுவதை கண்டறிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது சட்ட விதிகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகள் மாநகராட்சி மற்றும் காவல்த்துறை மூலம் மேற்கொள்ளப்படும். கழிவு நீர் லாரியில் ஜிபிரஎஸ் கருவி பொறுத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும் .இவ்வாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் சுகாதார அலுவலர் மொய்தின், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.