மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் சிக்னலை கடந்து 200 மீட்டர் தொலைவில் ரயில் தடம் புரண்டது.
ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில் பயணிகள் இல்லாமல் காலை 5 மணி அளவில் ஆவடி 3வது நடைமேடைக்கு வந்தது.
அப்போது மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் சிக்னலை கடந்து 200 மீட்டர் தொலைவில், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் இருப்புப்பதையில், ரயில் தடம் புரண்டது.பயணிகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது.

இதனால் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து விரைவு வண்டிகளும், மின்சார வண்டிகளும், சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக சென்றது, இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் தடம் புரண்ட இரயிலை ரயில்வே பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என 700க்கும் மேற்பட்டோர் உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு காலை 6 மணி முதல் இன்று மாலை 7 மணி வரை சுமார் 13 மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்டு தடம் புரண்ட ரயிலை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
தற்போது மீண்டும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது, ரயில் தடம் புரண்ட இந்நிகழ்வாள் இன்று பணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டு மிகவும் அவதிக்குள்ளாகினர்.ஓட்டுனரின் கவனக்குறைவா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் விபத்து ஏற்பட்டதா என ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ரயில்கள் தடம்புரல்வதும், ரயில் விபத்து அடிக்கடி ஏற்படுவதும், தண்டவாள விரிசல்கள் ஏற்பட்டு விபத்து நிகழ்வதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் ரயில் பயணம் என்பது மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகிறது, எனவே ரயில்வே நிர்வாகம் பொது மக்களின் ரயில் பயணத்திற்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இரயில்வே நிர்வாகம் விபத்துக்கள் நிகழாமல் முறையாக செயல்பட வேண்டும் என்பதே பொது மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.