ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 37 மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே ‘ஹாலோ பிளாக்’ கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று நண்பகல் 11:30 மணி அளவில், அந்த கற்களில் பாம்பு ஒன்று புகுந்தது.
இந்நிலையில், வினோத் குமார், வீட்டில் வளர்க்கும் 5 வயது ‘டாபர் மேன்’ ரக நாய், அந்த கற்கள் அருகே சென்று மோப்பம் பிடித்தது. மூன்றாவது முறை மோப்பம் பிடிக்கும் போது, பாம்பு தீண்டியதில், நாய் வாயில் நுரை தள்ளி வீட்டில் சுருண்டு விழுந்து இறந்தது.

அதிர்ச்சி அடைந்த வினோத்குமார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின் குழுவினர், 45 நிமிடம் போராடி பாம்பை பத்திரமாக மீட்டு, வெங்கல் வனப்பகுதியில் விடுவித்தனர். நான்கு அடி நீளம் கொண்ட அந்த பாம்பு, இந்திய வகை நல்ல பாம்பு என தெரிந்தது. பாம்பு தீண்டி இறந்ததால், நாய், அருகில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.