ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளா்.
ஆவடி புதிய ராணுவ சாலை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பவன்குமார்/57. ஆவடி நகரமன்ற முன்னாள் தலைவர் சாந்திலாலின் மகனான இவர் காங்கிரஸ் கட்சியில் தமிழக விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக உள்ளார். இவர் கடந்த மாதம் ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் ஆவடி அருகே பாலேரிப்பட்டில் தனக்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 12.38 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அதே பகுதியை சேர்ந்த தயாளன், அவரது மனைவி வனஜா, மகன் சுதர்சனம், மகள்கள் சுபத்ரா, சுகன்யா ரமேஷ் மற்றும் சங்கரநாராயணன் என்பவர்கள் கூட்டாக சேர்ந்து 2009-ஆம் ஆண்டு விற்பனை ஒப்பந்தம் செய்தது போன்ற பதிவு செய்யப்படாத, முன்தேதியிட்ட விற்பனை ஒப்பந்த ஆவணத்தை தயார் செய்து வைத்து கொண்டு தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தனர். மேலும் அந்த போலி ஆவணங்களை காட்டி நேரில் கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்திருந்தார்.
அதே புகாரை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை துவக்கிய ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இரு தரப்பினரின் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில தலைவர் பவன் குமாரின் சொத்துக்களை திட்டமிட்டு அபகரிக்கின்ற நோக்கத்துடன் போலி ஆவணங்கள் தயாரித்து இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக பழைய தேதியில் புதிதாக ஆவணங்கள் வாங்கி இருப்பதும், பத்திர விற்பனையாளருக்கு லைசன்ஸ் இல்லாததும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட ராமசாமி என்ற பத்திர விற்பனையாளர் பெயரில் திட்டமிட்டு ஆவணப் பத்திரம் வாங்கி இருப்பதும்,இறந்து போன நோட்டரி அட்வகேட் செல்வம் என்ற பெயரில் கையெழுத்து, சீல் என அனைத்தும் போலியாக தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து ஆவடி, பருத்திப்பட்டு, தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்த தயாளன், அவரது மனைவி வனஜா, மகன் சுதர்சனம், மகள்கள் சுபத்ரா, சுகன்யா, ரமேஷ் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தயாளன்/68, அவரது மகன் சுதர்சன்/38 மற்றும் சென்னை, விருகம்பாக்கம், குமரன் நகரைச் சேர்ந்த ரமேஷ்/53 ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி செய்த சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில தலைவர் பவன்குமார் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் காவல்துறைக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஆவடியில் ஒரு சில கும்பல் திட்டமிட்டே போலி ஆவணங்கள் தயாரித்து இது போன்ற மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளாா்.
மேலும் நான் கடந்த 2010 ஆம் ஆண்டு நிலத்தை வாங்கினேன். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு பதிவு பெறாத ஆவணத்தை பெற்று தங்கள் நிலத்தை மோசடி செய்ய முயற்சி செய்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார். காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகனை கைது செய்துள்ளதாக கூறினாா். அதற்கு முதலமைச்சருக்கும் காவல் துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் நிர்வாகியின் 100 கோடி ரூபாய் சொத்திற்கு போலி ஆவணம் தயாரித்த – 3 பேர் கைது