தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் ஆவடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கக்கூடிய நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளாக இருக்க கூடிய ஆவடி, திருமுல்லைவாயல், அயப்பாக்கம்,பட்டாபிராம்,திருநின்றவூர், முத்தா புதுப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.அதேபோன்று தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் குளம்போல தேங்கியுள்ளது. திடீரென பெய்த கனமழையால் சி.டி.எச் சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழை காரணமாக போதிய வெளிச்சமின்மையால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆவடி சுற்றுவட்டார பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடைகள் பிடித்தபடியும் ஆட்டோ களிலும் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது, சாலையில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில்,ஆவடி மாநகராட்சி நிர்வாகம் மழைநீர் தேங்காாமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.