ஆவடி அருகே 10ஆம் வகுப்பில் 96.5 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலநிலை நீடித்து வருகிறது.
ஆவடி அருகே வெள்ளானூரில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 11,12 வகுப்பிற்கு 15 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டிய காரணத்தினால் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது.
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளனூர் ஊராட்சியில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பூர்வீக கிராமமாக இருந்தாலும் சென்னைக்கு அருகில் இருப்பதால், இடம் வாங்கி வீடு கட்டி புதியதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் இந்த கிராமத்தில் 20 வருடத்திற்கு முன்பு 50 செண்ட் நிலத்தில் ஆரம்பப்பள்ளி உருவானது.அதே கட்டிடத்தில் 8 ம் வகுப்பு வரை பயிலுகின்ற இடைநிலைப் பள்ளியாக மாறியது. அதனைத் தொடர்ந்து அதே கட்டிடத்தில் உயர்நிலைப் பள்ளியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. போதிய இடவசதி, கட்டிட வசதி இல்லாத பள்ளியில் ஆண்டிற்கு ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வெள்ளானுர் ஊராட்சியின் அருகில் ஏராளமான சிறிய கிராமங்கள், புதிய குடியேற்றம் என்று மக்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் ஒவ்வொரு வரும் தனிதனியாக வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் வெள்ளானுர் ஊராட்சியில் 10 ஆம் வகுப்பு வரையில் மாணவ மாணவிகள் பயிலுவதற்கு பள்ளி இருக்கிறது . 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலுவதற்கு பள்ளியை தரம் உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அரசு நிலத்தை தனிநபர் ஆக்ரமித்து வைத்துள்ளதாகவும், அதனை கையகப்படுத்திமேல்நிலைப் பள்ளிக்கு பயன்படுத்தலாம் என்று அரசுக்கு ஆலோசனையும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் கூறுகையில்,
வெள்ளனூர் கிராமத்திற்கு உட்பட்ட ஆரிக்கம்பேடு பஞ்சாயத்தில் 10 வகுப்பு வரை மட்டுமே அரசு பள்ளி இயங்கி வருகிறது. எங்கள் கிராமத்தில் மட்டும் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். 10ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளிக்கு போதிய கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் எதுவும் இல்லாமல் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
ஷாருக்கானை தொடர்ந்து மற்றுமொரு பாலிவுட் பிரபலத்தை இயக்கும் அட்லீ!
எங்கள் ஊர் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிவித்தார். மேலும் எங்கள் பிள்ளைகள் மேல்நிலை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 15 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும். அதனால் பல பெண் பிள்ளைகள் படிக்க செல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவதாக தெரிவித்தார்.
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றால் அதற்கு போதிய நிலம் வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால் அரசுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் நிலம் தனிநபர் ஆக்ரமித்து வைத்துள்ளார். அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 வருடமாக பஞ்சாயத்து சார்பில் கிராம் சபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆவடி ஜமா பந்தி குறைத்தீர் முகாமில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவோடு படையெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.