தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல், 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 26/09/20025 (வெள்ளிக்கிழமை) 27/09/2025 (சனிக்கிழமை) 28/09/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு 29/09/2025, மற்றும் 30/09/2025 ஆகிய வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதலான பயணிகள் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு இன்று (26-09-2025) 790 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறன்றது. இதேபோன்று, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை (27-09-2025) 565 பஸ்களும், திங்கட்கிழமை (29-09-2025) 190 பேருந்துகளும், செவ்வாய்க்கிழமை (30-09-2025) 885 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு இன்றும் (26-09-2025), நாளையும் (27-09-2025) 215 பேருந்துகளும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 185 பேருந்துகளையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், சொந்த ஊர்களுக்கு பயணம் செய்த மக்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்புவதற்காக, அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இதன் மூலம், தொடர்ச்சியான விடுமுறையின்போது பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் பயணங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது.


