திருச்சி பெல் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட மறுத்த மத்திய அரசு தொழிற்துறை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த பணியாளர்களின் பணியை நான்கு மாதங்களில் வரன்முறைபடுத்த வேண்டும் என பெல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அருகே திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் உள்ள பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச் சங்கத்தின் (BHEL Valaga Oppanda Thozhilalar Nala Sangam) பொதுச் செயலாளர் எம்.சேகர் தாக்கல் செய்திருந்த வழக்கில், பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர் சங்கமாக 1,121 உறுப்பினர்கள் பெல் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துவந்த நிலையில், பணியாளர்களுக்கான செலவினங்களைக் குறைப்பதற்காக, பெல் காம்ப்ளக்ஸ் கூட்டுறவு தொழிலாளர் ஒப்பந்த சங்கம் (BHEL Complex Cooperative Labour Contract Society) என்பது பெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெல் காம்ப்ளக்ஸ் சங்கம் நியாயமான அமைப்பு அல்ல என்றும், தொழிலாளர் சேர்ப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு, நிதி சலுகைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட போலியான பெயரளவிற்கான ஓர் அமைப்பு என்றும், அதன் கட்டுப்பாடு முழுவதும் பெல் நிறுவனத்திடமே இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தங்களின் தற்காலிக பணியை வரன்முறைபடுத்தி, நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்யக் கோரிய மனுவை மத்திய அரசு தொழிற்துறை தீர்ப்பாயம் நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் யூனியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை, வழக்கறிஞர் டி.வீரசேகரன் ஆகியோர் ஆஜராகி, தங்கள் உறுப்பினர்களுக்கு பணி வழங்கியது, ஊதியம் வழங்குவது, சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது, நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக, ஓய்வுபெறும் வயதை 58லிருந்து 60ஆக உயர்த்தியது என அனைத்தையும் பெல் நிறுவனம் மேற்கொண்டதாகவும், இதுதொடர்பான ஆவணங்களை தொழிலாளர் நீதிமன்றம் பரிசீலிக்க தவறிவிட்டதாக வாதங்களை முன்வைத்தனர்.
பெல் காம்ப்ளக்ஸ் கூட்டுறவு தொழிலாளர் ஒப்பந்த சங்கம் மற்றும் பெல் நிறுவனம் இடையேயான எவ்வித ஒப்பந்தமும் நிரூபிக்கப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது. எதிர்மனுதாரர்கள் தரப்பில் பெல் காம்ப்ளக்ஸ் சங்கத்தை பெல் நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்றும், அவுட்சோர்சிங் அடிப்படையில் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தல் நடத்த தவறிய நிலையிலேயே பெல் நிறுவனத்தின் அதிகாரியை சங்கத்தை நிர்வகிப்பதற்காக தனி அலுவலராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு பிறப்பித்த உத்தரவில் நீதிபதி ஹேமந்த் சந்திரகௌடர், பெல் மற்றும் பிற அரசு அல்லது பொது அமைப்புகளிடமிருந்தும் பெறப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதை முதன்மை நோக்கமாக கொண்ட பெல் காம்ப்ளக்ஸ் சங்கத்தின் மீது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் வைத்திருந்தது ஆவணங்களிலிருந்து தெளிவாக தெரிவதாக கூறியுள்ளார். ஆதாரங்களையும் பதிவுகளையும் தவறாக புரிந்துகொண்டு, தன்னிச்சையாகவும், விபரீதமாகவும் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்வதாக உத்தரவிட்டதுடன், மனுதாரர் சங்கத்தின் உறுப்பினர்கள் பெல் நிறுவனத்தின் ஊழியர்களாகத்தான் கருதப்பட வேண்டும் எனவும், ஓராண்டில் 240 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவரையும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளுடன் அவர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என்றும், இந்த பணிகளை 4 மாதங்களில் முடிக்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளார்.
பெல் நிறுவனம் தனது செலவினங்களைக் குறைப்பதற்காகவே, ஒரு சங்கத்தை உருவாக்கி, சொந்த ஊழியர்களையே அவுட்சோர்சிங் செய்தது என்பது தெளிவாகிறது என்றும், அத்தகைய நடைமுறை நியாயமானது அல்ல என்றும், சட்டப்பூர்வ கடமைகளைத் தவிர்ப்பதற்கான தந்திரம் என்றும், நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைக்கு சமமானது என்றும் நீதிபதி தன் உத்தரவில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் “அரசன்”- படப்பிடிப்பு தேதியை அறிவித்த சிம்பு…


