சென்னை எம்ஜிஆர் நகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற வந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசையை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் பொதுமக்களிடம் மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற வந்த தமிழிசையிடம் தி.நகர் துணை ஆணையர் குத்தாலிங்கம் கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி பெறவில்லை என்று கூறினார். மேலும் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து மாற்றுக் கட்சியினர் கல்வீசக் கூடும் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதை ஏற்க மறுத்த தமிழிசை தன்னை தீவிரவாதியை சுற்றிவளைப்பது போல் சுற்றி வளைத்து பொதுமக்களை சந்திக்க விடாமல் தடுப்பதாக காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழிசையை கைது செய்ய காவல்துறையினர் அவர் நின்ற இடத்திற்கு வாகனத்தை எடுத்து வந்தனர். ஆனால் தமிழிசை காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்து வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நின்றார்.
இதனால் கோபமடைந்த தொண்டர்கள் தமிழிசை மயங்கி விழுந்தால் அதற்கு காவல்துறையினரே பொறுப்பு என வாக்குவாதம் செய்தனர். மேலும் தொண்டர்களில் சிலர் சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
தமிழிசையிடம் அமைதியாக கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில் தமிழிசை நின்ற இடம் நோக்கி திமுக கொடியுடன் 30 க்கும் மேற்பட்டவர்கள் தமிழிசையை உடனடியாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் செல்ல வேண்டுமெனவும் , இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாகவும் முழக்கம் எழுப்பியபடி வந்தனர்.
ஒரே இடத்தில் திமுக – பாஜக என இருகட்சி தொண்டர்கள் திரண்டு ஒருவரை ஒருவர் எதிர்த்து முழக்கம் எழுப்பியபடி நின்ற நிலையில் காவல்துறையினர் உடனடியாக தமிழிசையை அவரது வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு திரண்ட திமுகவினரும் கலைந்து சென்றனர்.